top of page

இந்தியா-சீனா எல்லை பேச்சுவார்த்தை: சீன நிலைப்பாடு கடுமையாகி உள்ளதா? ; கர்னல் ஆர். ஹரிஹரன்

Image Courtesy: The Print

Article 18/2021

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான 11 வது சுற்று பிராந்திய ராணுவத் தலைவர்கள் பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி லடாக்கில் உள்ள சுஷூல்-மோல்டோ எல்லையில் முன்னேற்றம் ஏதும் காணாமல் முடிந்தது. இந்த சந்திப்பு 13 மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. பிப்ரவரியில் நடைபெற்ற 10 -வது சுற்று சந்திப்பைப் போலன்றி, பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டாக அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.  மாறாக, இரு நாடுகளும் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கைகள், அவர்கள் அணுகுமுறை மற்றும் மனப் போக்கில் உள்ள வேற்றுமைகளையே காட்டின.

ஆகவே, லடாக் எல்லையில் தற்போதைய நிலைப்படி, ஹாட் ஸ்பிரிங்ஸ்-கோக்ரா-கொங்கா லா ஆகிய பகுதிகளில் போர் மோதல் நிகழக் கூடிய நான்கு இடங்களில் சீனா துருப்புக்களை இன்னமும் விலக்க உடன் படவில்லை. சீனாவின் ஒரு மோட்டார் போர்ப்படைப் பிரிவு, ஒரு பீரங்கி படைகள் அணி, மற்றும் ஒரு விமான் தாக்கும் ஏவுகணைப் பிரிவு ஆகியவை இப்பகுதியில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளன. இது டெப்சாங்க சமவெளியில் சீனத்  துருப்புக்களின் ஆளுமை தொடரும் என்பதைக் காட்டுகிறது. ஆகவே, எல்லையில் எதிர்பாராத விதமாக இருதரப்பு துருப்புக்களுக்கும் மோதல் ஏற்படும் ஆபத்து இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதே யதார்த்த நிலை.

11-வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை முன்னேற்றம் இல்லாவிட்டாலும் எல்லையில் சுமுக நிலை திரும்பும் என்ற நம்பிக்கையை காட்டுகிறது. அந்த அறிக்கை “கிழக்கு லடாக்கில் உபயோகத்தில் உள்ள எல்லையில் படை நீக்கம் செய்வது தொடர்பான மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இரு தரப்பினரும் விரிவான கருத்துப் பரிமாற்றிக் கொண்டனர்” என்றும், “நிலுவையில் உள்ள சிக்கல்களை விரைவாக” தீர்க்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொண்டதாகவும் கூறுகிறது. மேலும், நிலைப்பாட்டில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுடன் இரு தரப்பு தொடர்புகளும் தொடரும் என்றும் குறிப்பிட்டது. இந்திய அறிக்கை எல்லைப் பகுதிகளில் படை நீக்கம் செய்யப்படுவது,  இரு தரப்பினருக்கும் இடையே உறவுகளை விரிவாக்கவும், எல்லையில் அமைதியை உறுதி செய்வதற்கும் வழிவகுக்கும் என்பதை தெளிவாக்கியது.

இந்திய நிலைப்பாட்டுக்கு மாறாக, சீனா பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னரே, தனது நிலைப்பாட்டை  கடினமாக்க முடிவெடுத்துள்ளது என்றே தோன்றுகிறது.  ஏனெனில், பேச்சுவார்த்தைக்கு முந்தைய தினம், அதாவது ஏப்ரல் 8 ம் தேதி அன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எல்லைப் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய நிருபர் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் தெளிவாகியது.

அவர் விடையளிக்கையில் “சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினையில் நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.” மேலும் அவர் பேச்சுவார்த்தையின் வெற்றிக்கான பொறுப்பு இந்தியாவுக்குத்தான் என்றும் சீனாவுக்கு அல்ல என்ற பொருள் படப் பேசினார். இந்தியாதான் சீனாவை பாதி வழியில் சந்தித்து, இரு நாடுகளின் தலைவர்களும் எடுத்துள்ள ஒருமித்த கருத்துக்களை ஆர்வத்துடன் செயல்படுத்த வேண்டும்.  அதுவே எல்லையில் உள்ள நிலைமையை மேலும் சுமுகமாக்க, திட்ட வட்டமான நடவடிக்கைகளை எடுக்க வழி கோலும் என்று சீனா நம்புவதாகக் கூறினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சீன மேற்கத்திய பிராந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த அறிக்கையும் சீன வெளியுறவுச் செய்தியாளர் சொன்ன கருத்துக்களை பிரதிபலிக்கிறது. “இரு தரப்பினரும் பரஸ்பர ஈடுபாடுள்ள  பிரச்சினைகள் குறித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் ராணுவ மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவற்றின்  மூலம் தொடர்ந்து தமது தொடர்புகளைப் பேணுவார்கள். சீன-இந்திய எல்லைப் பகுதியில் பதட்ட நிலையை குறைக்க, இந்தியா தற்போது நிலைப்பாட்டில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சு வார்த்தைகளின் ஒருமித்த கருத்தை பின்பற்றி,  தனது அணுகு முறையில் சீனத் தரப்பை பாதிவழியில் சந்தித்தால், அமைதியை கூட்டாக பராமரிக்க சீனத் தரப்பு சந்திக்கும் என்று கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் இல்லாத முடிவைப் பார்த்தால், கடந்த ஜனவரி மாதத்தில் எல்லையில் பதட்ட நிலையை குறைக்க பங்காங் த்சோ பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை வெளியேற்றிய பின்னர்,  எல்லையில் தனது நிலைப்பாட்டை சீனா கடுமையாக்கியுள்ளது என்றே தெரிகிறது.

இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சீனாவின் அதிருப்திக்கு காரணம் இந்தியா பெரும் பங்கு பெற்ற குவாட் உச்சிமாநாடா, அல்லது குவாட் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படையினரிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்டுள்ள பயிற்சிகளா என்பது தெரியவில்லை.

இத்தகைய தொடரும் இந்திய-சீன கசப்பான சூழலில், ஹாங்காங்கின் பிரபல ஆங்கில தினசரியான ‘தி சவுத் சைனா போஸ்ட்’ டில் வெளியான திபெத் சம்பந்தமான ஒரு செய்தி  குறிப்பிடத் தக்கது.  அந்த செய்தியின் படி, திபெத் பிராந்தியத்தில் வெளியார் ஊடுருவல் நடவடிக்கைகளைத் தவிர்க்க அந்த  பிராந்திய அரசு 15 எல்லை விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் பின்னணியாக, அந்தச் செய்தி ஒரு ‘விவரம் தெரிந்த’ சீன அரசு ஊழியரை மேற்கோள் காட்டி, “சீன அதிகாரிகளின் கூற்றுப்படி, திபெத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இந்தியாவில் கமாண்டோ துருப்புக்களாக பயிற்சி பெறுகிறார்கள்” என்று கூறியது.  கால்வான் மோதலுக்குப் பிறகு, லடாக் எல்லையில், இந்தியா எல்லையில் தனது ஆளுமையை மீட்டெடுக்க இந்திய-திபெத் எல்லைப் போலீஸ் பிரிவின் கமாண்டோ துருப்புகளை வெற்றிகரமாக உபயோகித்து குறிப்பிடத் தக்கது.  அந்த நடவடிக்கையில் நாம் உபயோகித்த திபெத்திய போலீஸ் படையினரின் தாக்குதல் கண்டு சீனாவுக்கு ஒரு வேளை இந்தியாவின் பேச்சில் நம்பிக்கை குறைந்துள்ளதா? தெரியவில்லை.

ஆனால் ஒட்டு மொத்தமாக, லடாக் இல்லையில் சீனப் படைகளின் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புக்கள் ஜனவரி மாத த்திற்கு பிறகு குறைந்தாலும், அந்த ஆபத்து இன்னமும் விலகவில்லை என்பதையே 11-வது சுற்று பேச்சுவார்த்தையின் பயனற்ற முடிவு காட்டுகிறது. ஆகவே,  எல்லையில் அமைதி காக்க விவேகத்துடன் செயல் பட்டாலும், இந்தியாவுக்கு எல்லையில் படைகளை தொடர்ந்து போருக்கு தயாரான நிலையில் வைத்திருப்பதைத் தவிற வேறு வழியில்லை.

(கர்னல் ஹரிஹரன், ராணுவம் நுண்ணறிவுப் பிரிவில் தெற்காசிய மற்றும் தீவிரவாதத் துறைகளில் போர் முனை அனுபவம் பெற்றவர். ஈ மெயில்: haridirect@gmail.com. இணைய தளம்: https://col.hariharan.info. Views expressed are personal)

0 views0 comments

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
LATEST
bottom of page