top of page

நால்வரணி – பகுதி 4 ; சுப்ரமண்யம் ஶ்ரீதரன் (Tamil)

Updated: Mar 6, 2023



Article 61/2021

ஒரு தனிக் கண்டமான ஆஸ்திரேலியா நால்வரணியில் ஒரு தனித்தன்மை வாய்ந்த நாடு. பொருளாதாரத்திலும் மற்ற மூன்று நாடுகளைக் காட்டிலும் சிறியது. ஆயினும், இந்த நால்வரில், அது ஒன்றுதான் பசிபிக் பெருங்கடலுடனும், இந்தியப் பெருங்கடலுடனும் தொடர்புடைய ஒரே தேசம். இந்தோ-பசிஃபிக் என்ற சொற்றடருக்கு இலக்கணமாக ஆஸ்திரேலியா அமைகிறது. அது அமெரிக்காவின் மிக நெருங்கிய நேச நாடு மட்டுமல்ல அதனுடைய இந்தியா மற்றும் ஜப்பான் உறவுகளும் உறுதியானவை மற்றும் திடமானவை.


சீனா நரிச் சூரனா?


நரிச் சூரன் (Wolf Warrior) என்ற சொற்றொடர் பரவலாக 2020ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து சில அடாவடித்தனமான சீன தூதர்களையும், வெளியுறவுத் துறைத் தகவலர்களையும் (spokesperson) குறிப்பதற்கு உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத் தொடர் அவர்களின் ஆணவப் பேச்சுகளினால் விளைந்தது. சொற்றொடர் புதிதாக இருப்பினும், சீனாவின் இத் தன்மை கரோனாவிற்குப் பிற்பட்ட நிகழ்வல்ல. தொடர்ந்து பத்தாண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுதான்.


தற்போதைய சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் வடிவமைப்பாளர் என்று கருதப்படும் யாங் ஜியெச்சி (Yang Jiechi) அதிபர் ஹு ஜிண்டாவ் ஆட்சியில் ஆறாண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக (2007-2013 வரை) இருந்தவர். அமைதியாகப் பிரச்சினைகளை மற்ற நாடுகளுடன் கையாளுபவர் எனப் பெயர் பெற்றவர். அமைச்சராவதற்கு முன்னால் ஐந்து ஆண்டுகள் சீனாவின் தூதுவராக அமெரிக்காவில் பணியாற்றியவர். புகழ்பெற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics) பயின்றவர். 2013ல் ஸ்டேட் கவுன்சிலர் (State Councilor), அதாவது கேபினட் அமைச்சர், பதவிக்கு உயர்த்தப்பட்டார். 2013ல் இருந்து ‘மத்திய வெளியுறவு ஆணையத்தின்’ (Central Foreign Affairs Commission) தலைவராகச் செயல்படுகிறார். சீனாவின் வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயம் செய்யும் பொறுப்பில் இருக்கிறார்.


ஏற்கெனவே, பகுதி-2 ல் நாம் பார்த்தபடி, 2008ம் ஆண்டிலிருந்து சீனாவின் அயலுறவுக் கொள்கைகள் வீரியமிக்கவையாக மாறத் தொடங்கின. 2010ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம் கவனிக்கத் தக்கது. ஆசியான் (ASEAN) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளின்டன் (Hilary Clinton) குறிப்பிட்ட தென் சீனக் கடல் பிரச்சினை யாங் ஜியெச்சியைக் கொதிப்படைய வைத்தது. கூட்டத்தை விட்டு வெளியேறிய அவர், பின்னர் அதில் கலந்து கொண்டு முதலில் அதன் அமைப்பு நாடான (host) வியட்நாமைப் பழித்தார், பின்னர் ‘சீனா மிகப் பெரிய நாடு, நீங்கள் அனைவரும் மிகச் சிறியவர்கள். இதுதான் உண்மை’ என்று ஆசியான்(ASEAN) தலைவர்களை மட்டம் தட்டிப் பேசிவிட்டு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சரை சற்று நேரம் முறைத்துப் பார்த்தார். இது ஒரு அசாத்தியமான நிகழ்வு.


இதைப் போன்றே புதிய அமெரிக்க அதிபர் பைடனின் (Biden) வெளியுறவு அமைச்சர் அன்டனி ப்ளிங்கென் (Antony Blinken) மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் (Jake Sullivan) ஆகியோருடன் யாங் ஜியெச்சி அலாஸ்காவில் மார்ச் 2021ல் சந்தித்தபோதும் பத்திரிக்கை நிருபர்களை வைத்துக் கொண்டே 15 நிமிடங்களுக்கு மேல் அமெரிக்காவைத் தாக்கிப் பேசினார். பின்னர் சீனா திரும்பிய அவருக்குப்  பெரிய வரவேற்பு அதற்காக அளிக்கப்பட்டது. இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் அதிபர் சி ஜின்பிங் ‘காலமும் உத்வேகமும் சீனாவின் பக்கம் இருக்கின்றன. எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் சீனா தோற்கடிக்கமுடியாதது’ என்று பேசியிருந்தார்.

எனவே, இவை போன்ற ஆணவப் பேச்சுக்கள் சீனாவிற்குப் புதிதல்ல. 1960களின் இறுதி வரை சீனத் தலைவர்கள் இந்தியாவையும், அமெரிக்காவையும், ஜப்பானையும் இதைப் போன்றே ஏளனப்படுத்தினார்கள். பின்னர், தங்கள் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புவி-அரசியல் மற்றும் புவி-பொருளாதாரக் காரணங்களுக்காக அடக்கி வாசித்தனர். 2008க்குப் பிறகு, இவை மீண்டும் வெளி வரத் தொடங்கின.

இவை போன்ற நிகழ்வுகள் சீன-ஆஸ்திரேலியா உறவிலும் காணப்படுகின்றன.


ஆஸ்திரேலியா – சீனா  பிணக்கு


1941ல் சீனாவை ஆண்ட குவோமிண்டாங் (மக்கள் கட்சி) அரசை ஆஸ்திரேலியா அங்கீகாரம் செய்தது. பின்னர் 1949ல் அவர்கள் தைவான் நாட்டிற்குத் துரத்திஅடிக்கப்பட்டபோது, தைவான் நாட்டை அது சீனா என்று அங்கீகாரம் செய்தது. அது முதல், தனது பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய நாடாகவே செஞ்சீனாவை ஆஸ்திரேலியா கருதியது. அதுவே அமெரிக்காவின் கருத்தாகவும் இருந்ததினால், ஆஸ்திரேலியாவின் அத்தகைய கருத்தும் ஆச்சரியமளிக்கவில்லை. 1972ல் அமெரிக்கா செஞ்சீனாவுடன் உறவைச் சுமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா முதன் முறையாக செஞ்சீனாவை உண்மையான சீன நாடாக அறிவித்தது. 1980களில் இருந்து, ஆஸ்திரேலிய-சீன உறவும், அமெரிக்க-சீன உறவையொட்டியே, சீர்படத் துவங்கியது. 1993களில் இருந்து அமெரிக்க-சீன உறவில் விரிசல் ஆரம்பித்தது. இவை சீனா உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization, WTO) சேர்வது, தடைசெய்யப்பட்ட அணு ஆயுதப் பரவலில் சீனாவின் சட்ட விரோதமான பங்கு, மனித உரிமைகள் மீறல்கள், தொழிலாளர் உரிமைகள், தைவானுடனான அமெரிக்க உறவு, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் ஆகியவை சம்பந்தப்பட்டது. 1996ல் தைவான் நாட்டுத் தேர்தல்களினால் கோபமுற்ற செஞ்சீனா, இரு நாடுகளையும் பிரிக்கும் தைவான் குறுகிய கடற்பகுதியில் (Taiwan Straits) ஏவுகணைகளைச் செலுத்தி அந்நாட்டை பயமுறுத்தியது. அதற்கு ஆஸ்திரேலியா எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆஸ்திரேலிய-சீன உறவு சற்றுத் தொய்ந்தது. ஆனால், ஆஸ்திரேலியா பிரதமர் ஜான் ஹோவர்ட் சீன அதிபர் ஜியாங் ஸெமினுடன் (Jiang Zemin) ஆண்டிறுதியில் நடத்திய பேச்சு வார்த்தையினால் உறவுகள் மேம்பட்டன. செஞ்சீன அரசு, கூர் உணர்வு கொண்ட (sensitive) அமைப்பாதலால் ஊறுபாடுகள் எளிதில் ஏற்பட்டுவிடும்.


ஆஸ்திரேலியாவும் சீனாவும் 2015ல் தடையில்லா வணிக (free trade) வர்த்தக உடன்படிக்கை செய்து கொண்டன. ஆஸ்திரேலியாவின் மொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் 40% சீனாவிற்கு மட்டுமே செல்கிறது. ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் போய்ச்சேருமிடமாக சீனா 2007ல் மாறியது. 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடனான வணிகத்தில் முதல் இடத்தில் இருந்தது சீனா, இரண்டாவது இடத்தில் ஜப்பான். சீனாவுடனான வர்த்தகத்தில் (150 பில்லியன் டாலர்) மூன்றில் ஒரு பங்குதான் (52 பில்லியன் டாலர்) ஜப்பானிற்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்தது. சீனாவுடனான வணிகத்தில் உபரியில் (surplus) உள்ள மிகச் சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அதன் 2020ம் ஆண்டு உபரி சுமார் 70 பில்லியன் டாலர்கள். வணிகத்தினால் இரு நாடுகளுக்குமிடையே உறவு மிகவும் பலப்பட்டது.


2007ல் இந்தியா, அமெரிக்கா இடையே வழக்கமாக நடைபெறும் ‘மலபார் கப்பற்படைக் கூட்டுப் பயிற்சியில்’ ஆஸ்திரேலியா கப்பற்படை முதன்முதலாக இணைந்தது. அது சீனாவிற்குச் சற்றும் பிடிக்கவில்லை. அதனை உணர்ந்து, அதன் அழுத்தத்தின் பேரில், ஆஸ்திரேலியா இனி இப்பயிற்சிகளில் ஈடுபடப்போவதில்லை என்று கூறி அதிலிருந்து விலகியது. ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், ‘இனி நாங்கள் நால்வரணி சம்பந்தமாக இந்தியாவுடன் கூட்டுச் சேர மாட்டோம்’ என்று சீனாவிற்குக் கூறியதால் இது இந்தியாவிற்கு மிகுந்த கோபமூட்டியது. ஃபெப்ரவரி 2008ல் நடைபெற்ற ஆஸ்திரேலியா-சீனா இடையேயான முதல் ‘தளத்தகைப் பேச்சுவார்தையில்’ (strategic dialogue), ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித் (Stephen Smith) ‘நால்வரணி தொடர்பாக இந்தியாவுடன் இனி ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தையில் ஈடுபடாது, ஆனால் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஆஸ்திரேலியா உறவுகள் தொடரும்’ என்று அறிவித்தார். இதை அவர் தனது அடுத்து விஜயம் செய்யும் நாடான ஜப்பானிலும் அறிவித்தார்.


தொழிலாளர் கட்சியைச் (Labor Party) சேர்ந்த, சீனாவிடம் கரிசனம் கொண்ட, பிரதமர் கெவின் ரட் (Kevin Rudd) தலைமையின் கீழ் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது ஆச்சரியமளிக்கவில்லை. இதனால் கடும் பின் விளைவுகளை ஆஸ்திரேலியா சந்திக்க நேரிடும் என்று இந்திய அதிகாரி ஒருவர் எச்சரித்தார். இந்தியாவிற்கு யுரேனியும் அளிக்கும் முடிவையும் அதே சமயம் ஆஸ்திரேலியா ரத்து  செய்தது வேறு அதனுடன் சேர்ந்து கொண்டது. அதன்படியே, நீண்ட காத்திருத்தலுக்குப் பின் தான் படிப்படியாக இந்தியா-ஆஸ்திரேலியா உறவும் முன்னேறியது. இதைப்  பின்னர் பார்ப்போம். 2007 ‘மலபார்’ பயிற்சியை அடுத்து, உடனடியாக, சீனாவைச் சமாதானம் செய்யும் முயற்சியில், ஆஸ்திரேலியா, சீனக் கடற்படையுடன்  (நியூஸிலாந்துடன் சேர்ந்து) ஒரு கூட்டுக்  கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டது. அதனால்தான், அமெரிக்காவும், ஜப்பானும் மறுபடியும் ஆஸ்திரேலியாவை அந்தப் பயிற்சியில் அனுமதிக்கப் பலமுறை தொடர்ந்து கேட்டுக்கொண்ட போதிலும், இந்தியா தவிர்த்தே வந்தது. இந்த ஒரு நிகழ்வே நால்வரணி அமைவதைச் சுமார் பத்தாண்டுகள் தள்ளிப்போட்டது. நால்வர் அணியில் ஒவ்வொரு நாட்டுக்கும் சீனாவுடனான பிணக்கு மட்டும் நால்வரையும் இணைக்காது, நால்வரும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால்தான் இணைய முடியும் என்பதற்கு இந்தியா-ஆஸ்திரேலியா சிறந்த உதாரணம். நால்வரணி அமைய நாளானதற்கு இதுவும் ஒரு காரணம். எவ்வாறு படிப்படியாக இந்திய-ஆஸ்திரேலிய உறவு முன்னேறிற்று என்பதைப் பின்னர் பார்ப்போம்.


ஆயினும், ஆஸ்திரேலியா-சீன வர்த்தக உறவு மேம்பட்ட நிலையிலும், அரசியல் உறவு சரியத் தொடங்கியது. கடந்த ஆண்டுகளில் வர்த்தகம் இரு நாடுகளுக்குமிடையில் ஆண்டுக்கு 20% அதிகரித்த போதிலும், கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளில் ஒரு ஆஸ்திரேலியப் பிரதமரும் சீனாவிற்கு விஜயம் செய்யவில்லை. ஐ. நா. வின் அமைப்பான உலகக் கடல் சட்டத் தீர்ப்பாயம் (International Tribunal on Laws of Seas, ITLOS) ஜூலை 12, 2016ல் சீனாவிற்கு எதிராக அளித்த தீர்ப்பை ஆஸ்திரேலியா வெகுவாக ஆதரித்தது சீனாவின் கோபத்தைக் கிளறியது. அப்போதிருந்த ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் 5G அலைக்கற்றை தொலைத் தொடர்பு சாதனங்களை சீன நிறுவனங்களான ஹுவாவெய், ZTE ஆகியவற்றிடமிருந்த வாங்க, பாதுகாப்பைக் காரணம் காட்டி,  2018ல் தடை போட்டார்.  2018ல் கூட, அப்போதைய ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop), சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) நிர்பந்தத்தின் பேரில் ஆஸ்திரேலியா தைவானுடன் ‘தடையற்ற வணிக ஒப்பந்தம்’ செய்து கொள்வதைக் கை விட்டது என்றார்.


மேலும், சீனா தன் உள் நாட்டு அரசியல் விவகாரங்களில், ஆஸ்திரேலியப் பிரஜைகளான சீனர்களின் மூலம், தலையிடுவதாகக் கூறி மற்றநாடுகள் அவ்வாறு தலையிடாமல் இருக்கும் மூன்று சட்டங்களை 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியா இயற்றியது.. முதலாவது ‘வெளிநாட்டு செல்வாக்கு வெளிப்படைத் தன்மைச் சட்டம் 2018’ (Foreign Influence Transparency Scheme, 2018), இரண்டாவது உளவு மற்றும் வெளிநாட்டு செல்வாக்குத் தொடர்பாக ‘தேசியப் பாதுகாப்பு சட்டத்தில்’ 2018ல் செய்யப்பட்ட சீர்திருத்தம் (National Security Legislation Amendment (Espionage and Foreign Interference) Act 2018). மூன்றாவது, தேர்தல் செலவுகள், நிதிகள் மற்றும் அவை தொடர்பான வெளிப்படைத் தன்மை சம்பந்தமான தேர்தல் சட்டத் திருத்தம் (Electoral Legislation Amendment (Electoral Funding and Disclosure Reform) Bill 2018).. இவற்றின் மூலம் வெளிநாடுகள் மற்றும் அந்நாடுகளால் இயக்கப்படும் நிறுவனங்களிலிருந்து (State-Owned Enterprises, SOEs) தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள் பெறும் நன்கொடை போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. இவை   சீனாவின் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தின. இதற்கெதிராக சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலியப் பிரஜை ஒருவர் உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கும் முழுத் தோல்வியடைந்தது. அக்டோபர் 2020ல் ஓஷியானியா பகுதி சீன அமைப்புக்களின் கூட்டமைப்பின் (Oceania Federation of Chinese Organisations) தலைவரான டி சன்ஹ துவங் (Di Sanh Duong) எனும் சீன ஆஸ்திரேலியர் இச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர்.  2018ல் இருந்தே, சீனாவுடனான ஆஸ்திரேலியா வணிக உறவில் பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது. சீனாவின் ‘உடனுக்குடன் தண்டனை’ என்கின்ற போக்கின் காரணமாக இது ஏற்பட்டது. அதனால், ஆஸ்திரேலியாவிடமிருந்து வாங்கும் ஒயினையும் மற்ற விவசாயப் பொருட்களையும் புறக்கணிக்க ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவிடமிருந்து சீனா இறக்குமதி செய்யும் பொருட்கள் இரும்புத் தாது, எரிவாயு, நிலக்கரி, கோதுமை பார்லி போன்ற விவசாயப் பொருட்கள், மீன் வகைகள் போன்றவை. சீன மாணவர்கள் பெருமளவில் ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் சேர்வதும், சீன சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்வதும் வணிக உறவில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.


ஆனால், கரோனா தொற்று ஏற்பட்டபின் இரு நாடுகளுக்கிடையேயான உறவு முற்றிலும் முறிந்தது. ஏப்ரல்,2020ல் கோரோனா நோய் எப்படி சீனாவிலிருந்து உருவாகிப் பரவியது என்பதைத் தீர விசாரிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் G-20 நாடுகளுக்குக் குரல் கொடுத்தார். இதற்குச் சீனா பயங்கரமான எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இல்லாமல், ஆஸ்திரேலியாவின் மீது பழி வாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது. உடனுக்குடன் தண்டனை என்ற சீனப் போக்கு உடனே வெளிப்பட்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியாகும் பார்லி தானியத்திற்கு சீனா 80% வரி போட்டது, மாட்டிறைச்சியை முற்றிலும் தடை செய்தது. ‘இனப் பதற்றத்தின்’ காரணமாக சீனர்கள் ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல வேண்டாம் என்று சீன அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியதன் காரணமாக அவர்களின் வருகை ஆஸ்திரேலியாவில் பெருமளவு குறைந்தது. தடை செய்யப்பட போதைப் பொருட்கள் தொடர்பாக சீனாவில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியர் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை அளித்தது.


ஆஸ்திரேலியாவிலுள்ள சீன தூதர் ஆஸ்திரேலியாவை எச்சரித்தார். பதிலுக்கு ஆஸ்திரேலியாவும் தனது பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்திற்கு மேலும் நிதி ஒதுக்கி உந்துவிசை (ballistic) மற்றும் மிகை ஒலி வேக (hypersonic) ஏவுகணைகளை வாங்கும் முயற்சியைத் துவக்கியது. மே 2021ல், டார்வின் துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீன நிறுவனம் ஒன்றிற்குக் குத்தகைக்கு 2015ம்  ஆண்டு விட்டதை மறுபரிசீலனை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. மே மாத இறுதியில், ‘ஐந்து கண்கள்’ என்று அழைக்கப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து,கனடா. நியூஸீலாந்து ஆகியவற்றுடன் சேர்ந்து ஹாங்காங்கில் சீனாவின் போக்கைக் கண்டித்து ஆஸ்திரேலியா கூட்டறிக்கை விடுத்தது. ஹாங்காங் வாசிகள் ஆஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்வதையும் ஆதரித்தது. நரிச் சூரன் என்றழைக்கப்படும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியான் (Zhao Lijian), ‘ அவர்களுக்கு ஐந்து கண்களோ பத்துக் கண்களோ, அத்தனை கண்களையும் சீனா குருடாக்கும்’ என்று சூளுரைத்தார். ஜூன் மாதத்தில், 16 நாடுகளின் ‘பாராளுமன்றங்களுக்கிடையேயான  கூட்டமைப்பு’ (Inter Parliamentary Alliance on China) ஒன்று சீனாவைக் கூர்ந்து நோக்க அமைக்கப்பட்டது, அதில் ஆஸ்திரேலியாவும் ஒரு உறுப்பினர். ஜூலை 7ம் தேதி அமெரிக்கா, ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து தென் மற்றும் கிழக்குச் சீனக்  கடல்களில் பதற்றத்தை அதிகரிக்கும், மற்றும் நடப்பு நிலையை (status quo) மாற்றும் எந்தச் செயலிலும் யாரும் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது. இந்தியா அதில் இல்லாவிட்டாலும், அது சீனாவிற்கு நால்வரணி மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருத வேண்டும். ஜூலை 23ம் தேதி, ஆஸ்திரேலியா அரசு ஐ.நா. சபைக்கு அளித்த குறிப்பில் தென் சீனக் கடலில் பாராசெல் (Paracel), ஸ்ப்ராட்லீ(Spratly) தீவுகளுக்குச் சீனா  சொந்தம் கொண்டாட முடியாதென்று கூறிற்று. அதுவரை ஐ. நா. சபையில் தென் சீனக்  கடல்  பிரச்சினை சம்பந்தமாக நடுநிலையைக் கைப்பிடித்து வந்த ஆஸ்திரேலியா முதன் முறையாக சீனாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.


செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மேலும் மோசமடைந்தன. ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சவுக்கத் மோஸல்மான்  (Shaoquett  Moselmane) என்கின்ற பாராளுமன்ற உறுப்பினரின் ரூபத்தில் வந்தது சீனாவின் சோதனை. பலமுறை சீனாவிற்குச் சென்று வந்துள்ள இந்தப் பாராளுமன்ற உறுப்பினர், சீனாவை நெடுங்காலமாக ஆதரிக்கும் ஆஸ்திரேலியக் குரல். மற்ற நாடுகள் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தடை செய்யும் புதிய திட்டத்தின் கீழ் இவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். செப்டம்பர் 15, 2020ல் ஆஸ்திரேலியாவிலுள்ள சீனாவின் துணைத் தூதர் சுன் யாண்டோ (Sun Yantao), சவுக்கத் மோஸல்மான் விசாரணையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில், சவுக்கத் மோஸல்மான், தொழிலாளர் கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார். சவுக்கத் மோஸல்மானின் கொள்கை ஆலோசகர் சீன வம்சாவளியைச் சேர்ந்த ஜான் ஷிசேன் ஷாங் (John Zhisen Zhang). இவர் மூலமாக சீனத் துணைத் தூதர் உழைப்பாளிக் கட்சியை ஊடுருவி, ஆஸ்திரேலியா வாக்காளர்களை ஒன்றிய முகப்பு வேலைத் துறை (United Front Work Department) எனும் கொள்கை பரப்பும் சீன அரசு இயந்திரம் சீனாவின் தகாத செல்வாக்குக்குள்ளாக்கப் பார்த்தது என்பது குற்றம். இவை தாங்கொணாக் கோபத்தைச் சீனாவில் ஏற்படுத்தின. உடனடியாக ஒரு ஆஸ்திரேலியப் பத்திரிக்கையாளரை  உளவு பார்த்ததாகக் காரணம் கூறிச் சீனா சிறையில் அடைத்தது. மற்ற ஆஸ்திரேலியப் பத்திரிக்கையாளர்களையும் சீனக் காவல்துறை விசாரணைக்குட்படுத்தியதால், அவர்கள் உடனடியாக சீனாவை விட்டு வெளியேறினர். 2017ம் ஆண்டு, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தஸ்தியாரி (Sam Dastyari), சீனாவின் பெரும் செல்வந்தரான ஹுவாங் சியாங்மோ (Huang Xiangmo) என்பவரிடமிருந்து கையூட்டுப் பெற்று அவரது வீடு, மனை நிறுவனத்திற்கு உதவியதாகவும், ஆஸ்திரேலிய நிலைப்பாட்டிற்கு எதிராக தென் சீனக் கடல் பிரச்சினையில் நிலைப்பாடு எடுத்ததாகவும் கூறி விசாரணைக்குட்படுத்தப்பட்டதில், அவர் பதவியை ராஜினாமா செய்தார்.


அக்டோபர் 6ம் தேதியன்று நால்வரணியின் வெளியுறவு அமைச்சர்கள் டோக்கியோவில் கூடி விவாதித்தனர். இது நடந்து இரு வாரங்களுக்குப் பின், அக்டோபர் 19ம் தேதி, இந்தியா நவம்பர் மாதம் துவங்கவிருக்கும் முந்நாடுகள் ‘மலபார் கடற்படைப் பயிற்சியில்’ (Malabar Naval Exercise), நான்காவது நாடாக ஆஸ்திரேலியா இணைய சம்மதித்தது. நால்வரணியின் அடுத்த முன்னோக்கிய கட்டமாக இது அமையும். அடுத்த இரு வாரங்களுக்குள், தனது உடனடி தண்டனைத் திட்டத்தின் கீழ், ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியாகும் மேலும் பல பொருட்களான ஒயின், மரம், நிலக்கரி, செம்பு, மீன் போன்றவற்றிற்கும் சீனா தடை விதித்தது. அல்லது சுங்க வரியைப் பன்மடங்கு அதிகரித்தது. உதாரணமாக, ஒயினின் (wine) சுங்கவரியை 200% அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிகரித்தது. அமெரிக்க நாணய  மதிப்பில் ஆண்டுக்கு சுமார் 800 மில்லியன் டாலர் அளவுக்கு சீனா ஆஸ்திரேலியாவிலிருந்து ஒயின் இறக்குமதி செய்து கொண்டிருந்தது.  இவை போன்ற சீனப் பொருளாதாரத் தடைகளை ஆஸ்திரேலியா அரசு உலக வணிக அமைப்புக்கு (WTO) எடுத்துச் செல்லுகிறது. ஆயினும், இது அந்த அமைப்பினால் வரன்முறை செய்ய மூன்று ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இது சீனாவின் ‘பொருளாதார அச்சுறுத்தலுக்கு’ ஒரு குறுகிய வெற்றிதான். சீனாவுக்கு ஏற்படும் இத்தகைய அரசியல் நெருக்கடிகளைப் பொருளாதார வலுக்கட்டாயம் [economic coercion] மூலம் தீர்த்து விடலாம் என்பது சீனாவின் உத்தி.


நவம்பர் 7ம் தேதி அன்று சீனாவின் ஒநாய்ச் சூரன் சாவோ லிஜியான் ஆஸ்திரேலியாவுடனான ஏழு விரிசல்கள் எந்தெந்தத் துறைகளில் என்று கூறினார். ஆஸ்திரேலியாவுடனான பிணக்குக்கு அந்த நாடு கடந்த சில வருடங்களில் எடுத்த முடிவுகளே காரணம் என்றார். அவையாவன, சின்ஜியாங், ஹாங்காங், தைவான் தொடர்பாக ஆஸ்திரேலியா அரசு முன் வைத்த விமர்சனங்கள் மற்றும் மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து சீனாவுக்கெதிராக சின்ஜியாங் விவகாரத்தில் ஆஸ்திரேலியா செயல்பட்ட விதம், ஹாங்காங் உள் நாட்டு விவகாரத்தில் குழப்பம் உண்டாக்கும் விதமாகத் தலையிட்டது, உலக சுகாதாரக் கூட்டத்தில் (World Health Assembly) தைவான் இடம்பெற முயற்சியை ஆதரித்தது, ஆஸ்திரேலியாவில் சீனா ஊடுருவியுள்ளதாகக் குற்றஞ்சுமத்தியது, 5G அலைக்கற்றை கட்டமைப்பில் சீன நிறுவனங்களைத் தடை செய்தது, மனம்போன போக்கில் சீனப் பத்திரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவில் சோதனை செய்தது, கொரோனா பெருந்தொற்றைத் தீவிரமாக விசாரிக்கக் கோரியது. அன்றே, ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் (Sydney Morning Herald) பத்திரிகைக்கு ஆஸ்திரேலியாவின் சீனத் தூதரகம் அனுப்பிய பதினான்கு மனத்தாங்கல் பட்டியலில் மேலே குறிப்பிட்ட ஏழு குற்றங்களைத் தவிரப் புதிதாக ஏழு சேர்க்கப்பட்டிருந்தன. அவையாவன, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் ‘பட்டை மற்றும் சாலை முனைப்பு’ ஒப்பந்தத்தை மூழ்கடித்தது, ஆஸ்திரேலியப் பத்திரிகைகளில் சீனாவுக்கு எதிராக வரும் கருத்துக்களை ஆஸ்திரேலியா அரசு கண்டிக்காமல் இருப்பது, ‘ஆஸ்திரேலியத் தளத்தகை கொள்கை நிறுவனத்தில்’ (Australian Strategic Policy Institute, ASPI) சீனாவுக்கெதிரான ஆராய்ச்சிகளுக்கு அரசே பணம் கொடுப்பது, ஆதாரம் ஏதுமின்றிக்  கணினிக் களவாடல்களுக்கு மறைமுகமாக சீனாவைக் குற்றஞ்சாட்டுவது, தனக்குத் தொடர்பில்லாத தென் சீனக் கடல் பிராந்தியத்தைப் பற்றி சீனாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் குற்றம் கூறுவது, ஆஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமீறிய விதத்தில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியைக் குறை கூறுவது, சீனர்களும் ஆசியர்களையும் இனத் தாக்குதலுக்கு உள்ளாக்குவது. நரிச் சூரன் சாவோ லிஜியான் ‘புலியின் கழுத்தில் யார் மணி கட்டினார்களோ அவர்களே அதை அவிழ்க்க வேண்டும்’ என்று கூறியது, ஆஸ்திரேலியா அடிபணிந்தாலொழிய சீனா சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை என்ற நிலையைத் தெளிவு படுத்தியது. ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை இக்குற்றச்சாட்டுகள் ‘அநியாயமானவை மற்றும் ஆஸ்திரேலியாவின் நிலையைத் தவறாகச் சித்தரிப்பவை’ என்று கூறியது.


2020 நவம்பர் 12ம் தேதி, மோசமடைந்து வரும் ஆஸ்திரேலியா-சீன உறவுகள் குறித்துப் பேசிய சீன வெளியுறவுத்துறை அதிகாரி கூறுகையில், ‘சின்ஜியாங், ஹாங்காங், தைவான் ஆகியவை பற்றிய ஆஸ்திரேலியாவின் எல்லை மீறிய குற்றச்சாட்டுக்களே உறவுகள் கெட்டமைக்குக் காரணம்’ என்றார். மேலும், நிச்சயமற்ற, ஆதாரமற்ற தகவல்கள் அடிப்படையில் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்று சில பெரிய சீன முதலீடுகளை 2018 முதல் ஆஸ்திரேலியா தடை செய்ததும் மற்றொரு காரணம் என்றார். இது 2018ல் சீனாவின் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பாளர்களான ஹுவாவை, ZTE ஆகிய நிறுவனங்கள் 5G கட்டுமானம் அமைக்க ஆஸ்திரேலியா தடை செய்ததையும், ஆகஸ்ட் 2020ல் சீனாவின் பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று (Mengniu Dairy) ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பால் பொருட்கள் தயாரிக்கும் ஜப்பானிய நிறுவனத்தை (Lion Dairy & Drinks) வாங்க ஆஸ்திரேலியா அரசு தடை செய்ததையும் குறிக்கும். அதே மாதம், சீனக் குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்டத்தை (Extradition Treaty) சீனாவின் புதிய ‘ஹாங்காங் பாதுகாப்புச் சட்டத்தைக்’ காரணம் காட்டி ‘ஐந்து கண்கள்’ எனப்படும் அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஒத்தி வைத்தன. ஜூலை 1 1997ல் ஹாங்காங் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டதை கேலி செய்யும் விதமாக, சீனா ஹாங்காங் பாதுகாப்புச் சட்டத்தை 23 ஆண்டுகளுக்குள் அதே நாளில் 2020ல் ஹாங்காங்கில் அமுல்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். கோபமுற்ற சீன அரசின் வெளியுறவுத் துறை தொடர்பாளர் ‘ நரிச் சூரன்’ சாவோ லிஜியான் (Zhao Lijiyan), ‘ஐந்து கண்களோ, பத்துக்  கண்களோ, அவர்களின் கண்கள் பிடுங்கப்படும்’ என்றார். இவற்றிற்கு நடுவில், ‘பிராந்திய அகல்விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை’ (Regional Comprehensive Economic Partnership, RCEP) எனப்படும் வணிக அமைப்பை மற்ற 13 நாடுகளுடன் சேர்ந்து சீனாவும், ஆஸ்திரேலியாவும் நவம்பர், 2020ல் நிறுவின.


நிலைமை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மார்ச் 2021ல் ஆஸ்திரேலியா, அமெரிக்க உதவியுடன் 1 பில்லியன் டாலர் பொருட்செலவில் புதிய வகை ஏவுகணைகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. புதிய வகைத் தாக்கு நீர்மூழ்கிக்  கப்பல்களும்,  மற்ற படைக் கப்பல்களும் 1930 வாக்கில் ஆஸ்திரேலியக் கப்பற்படையில் சேரும் வரை, இந்த ஏவுகணைகள் தேவையான பாதுகாப்பை வழங்கும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது. தரையிலுள்ள இலக்குகளை 900 கி மீ தூரம் வரை சென்று துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளையும், கடலிலுள்ள கப்பல்களை 400 கி மீ வரையும் சென்று துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளையும் தனது விமானப்படை விமானங்களான F/A-18, F-35 ஆகிய விமானங்களில் ஆஸ்திரேலியா பொருத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து மிகை ஒலி வேக ஏவுகணைகளையும் வடிவமைத்து வருகிறது.


செப்டம்பர் 16, 2021 அன்று ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்றும் இணைந்து AUKUS என்கின்ற பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டன. இதன் மூலம், அணுசக்தியில் இயங்கும் எட்டு தாக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா மற்ற இருநாடுகளின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கும். இவை அமெரிக்காவின் டோமஹாக் (Tomahawk) எனும் நீண்டதூர தேடித் திரியும் ஏவுகணைகளைச் சுமந்து இயங்கும். ஏற்கெனவே 12 தாக்கு நீர் மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்துக் கட்ட ஃபிரான்சுடன் 2016ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இதற்காக ஆஸ்திரேலியா முறித்துக் கொண்டது. இவை பர்ரகூட (Barracuda) ரக சாதாரண வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் தான். அவுக்கஸ் அமைப்பு நால்வரணியை மேலும் பலப்படுத்தும் என்றே நம்பப்படுகிறது. நால்வரணியில், அமெரிக்காவைத் தவிர வேறு யாரிடமும் அணு சக்தியில் இயங்கும் தாக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தற்போது இல்லை. தென் சீனக் கடல் எல்லைக்குள் சீனக் கப்பற்படையை அடைத்து வைக்க வேண்டுமெனில் இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்றியமையாதவை. அமெரிக்காவிடம் இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் 55 இருந்தாலும் பராமரிப்பு காரணமாகவும், மற்றும் உலகின் பல இடங்களைக் கண்காணிக்க வேண்டி இருப்பதாலும்,  நால்வரணியின் மற்ற நாடுகளிடமும் இவை இருக்க வேண்டியுள்ளது. அவற்றில், ஜப்பானின் அரசியலைமப்புச் சட்டத்தின் காரணமாக அதனால் அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் படையில் சேர்க்க இயலாது. இந்தியா தற்போதுதான் இவற்றை வடிவமைக்கத் தொடங்கியுள்ளதால், இவை 2035ம் ஆண்டு வாக்கில்தான் இந்தியக் கடற்படையில் சேரும். மேலும், இந்தியாவிற்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலால் அவை தென் சீனக் கடல் பகுதியில் இயங்கமுடியாது. இக்காரணங்களுக்காக, ஆஸ்திரேலியாவிடம் இவ்வகைக் கப்பல்கள் இருப்பது இன்றியமையாததாகிறது.


நால்வரணியின் முதல் உச்சி மாநாடு காணொளி மூலம் மார்ச் 12, 2021 அன்று நடைபெற்றது. இதைத் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்த முதல்வர் ஸ்காட் மோரிசன், நால்வரணியை  1951ம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸீலாந்து நாடுகள் அமைத்துக்கொண்ட ‘அன்ஸுஸ்’ (ANZUS) பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு நிகராகக் கூறினார்.  தலைமுறைகளைத் தாண்டிய நிகழ்வாகவும் இதைக் குறிப்பிட்டார்.


எவ்வாறு இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகள் நால்வரணிக்கு வித்திட்டன


அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடு ஆஸ்திரேலியா. முதல் உலகப் போரிலிருந்து அமெரிக்கா-ஆஸ்திரேலியா ராணுவத் தொடர்பு மிக நெருக்கமானதாக இருந்து வருகிறது. 1951ல் ‘அன்சுஸ் ஒப்பந்தம்’ (ANZUS Treaty) எனும் ஆஸ்திரேலியா-நியூஸீலாந்து-அமெரிக்கா முத்தரப்பு ராணுவ ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதன் மூலம், அமெரிக்காவின் அணுஆயுதப் பாதுகாப்புக் குடையின் கீழ் ஆஸ்திரேலியா உள்ளது. மற்றும் ‘ஐந்து கண்கள்’ என்று சொல்லப்படும் உளவுச் செய்திகளைச் சேகரிக்கும் ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் முக்கிய நாடாகவும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளது. அமெரிக்கக் கடற்படைக்குத் தளத்தையும் அளித்துள்ள நாடு. உலக ராஜரீய விவகாரங்களில் அமெரிக்காவின் அடியொற்றி நடக்கும் நாடு.


நமக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் நீண்ட நட்பு  உண்டு. இந்தியாவின் ‘அணி சேராக் கொள்கை’ கம்யூனிசத்துக்கு எதிரான மேற்கத்திய நாடுகளிடம் இந்தியாவைப் பற்றிய சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. காமன்வெல்த் (Commonwealth) அமைப்பில் இரு நாடுகளும் முக்கிய உறுப்பினர்களாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவும் அத்தகைய மேற்கத்திய நாடுகளின் எண்ணத்தையே இந்தியாவிற்கெதிராகக் கொண்டிருந்தது.  1985ல் ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய விஜயம், படிப்படியாக இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகள் வளர்ச்சியடைய அடித்தளமிட்டது. 1990களில் பனிப்போர் 1.0 முடிவினாலும், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களினாலும் இந்திய-அமெரிக்க உறவுகள் மேம்பாடு அடையத் தொடங்கியதும், அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடான ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்த ஆரம்பித்தது. உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் முறையே இந்தியா-ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா-இந்தியா மன்றங்களை (Council) தத்தமது நாடுகளில் ஆரம்பித்தன. ஆயினும், அணு ஆயுதப் பரவலுக்கெதிராக ஆஸ்திரேலியா கடுமையான கொள்கையைக் கொண்டிருந்தது. எனவே, பாகுபாடு காட்டும் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டம் (Nuclear Non-proliferation Treaty, NPT), விரிவான அணு ஆயுத சோதனைத் தடுப்புச் சட்டம் (Comprehensive Test Ban Treaty, CTBT) ஆகியவற்றில் கையெழுத்திட மறுத்த நமக்கெதிரான போக்கை ஆஸ்திரேலியா கடைப்பிடித்தது. 1996ல் ஐ. நா. வில் அது ‘விரிவான அணு ஆயுத சோதனைத் தடுப்புச் சட்டத்தை’ கொண்டு வந்தது. அது நம்மைக் குறி வைத்தே கொண்டுவரப்பட்டது. அதனால், நமக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் மனக் கசப்பு ஏற்பட்டது. இதுவே நாம் 1998ல் அணுச்சோதனைகள் செய்து நம்மை அணு ஆயுத நாடாக அறிவிக்க நம்மைத் தள்ளியது. இந்தியப்  பெருங்கடலில் வளர்ந்து வரும் நம் கப்பல் படையைச் சந்தேகக் கண்ணுடன் நோக்கியது. நம் போர்க் கப்பல்களைப் பின் தொடர்ந்தது.


ஏற்கெனவே கூறியபடி 2007ல் மலபார் போர்பயிற்சியிலிருந்து ஆஸ்திரேலியா விலகிய பின் நாம் அதை அணுகவில்லை. 2009ல் ஆஸ்திரேலியா பிரதம மந்திரி கெவின் ரட் இந்திய வருகையின் போது, இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட கூட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.  நான்காண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் அமெரிக்க பாதுகாப்பு மறுஆய்வு அறிக்கை (Quadrennial Defence Review) 2010ல் இந்தியாவை, ‘இந்தியப் பெருங்கடலில்’ நிகரப்  பாதுகாப்பு வழங்கும் (net provider of security) நாடாக’ அங்கீகாரம் செய்தது. வருடா வருடம் நடக்கும் ஆஸ்திரேலியா-அமெரிக்கா போர்த்திறஞ்சார்ந்த மறுஆய்வில் (strategic review), அவை இரண்டும் இந்தியாவுடன் நட்பை ஆழமாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 2011ல் சென்னையில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி கிளின்டன், இந்தோ-பசிஃபிக் பகுதியில் இந்தியாவைத் தலைமையேற்க அழைத்தார். 2011ல் ஆஸ்திரேலியா அதுவரை இந்தியாவிற்குத் தடை செய்திருந்த அணுசக்தித் தொடர்பான பொருட்களின் ஏற்றுமதியை ரத்து செய்வதாக அறிவித்தது. 2012ல் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலியா பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட், இரு நாடுகளுக்குமிடையே முழுக் கடற்படைப் பயிற்சிகளைத் துவக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 2013ல் அணுசக்தி தொடர்பான பேச்சு வார்த்தைகள் துவங்கின. இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் ‘அணுத்தொழில்நுட்பம் வழங்குவோர் குழுவில்’ (NSG) இந்தியாவை அனுமதிக்க சம்மதம் தெரிவித்தார். 2013ல் ஆஸ்திரேலியா விஜயம் செய்த நமது ராணுவ அமைச்சர் A.K. அந்தோணி, இரு  கடற்படைகளும் 2015ல் இருந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் என்று தெரிவித்தார். 2013ல் ஆஸ்திரேலியா வெளியிட்ட அதனுடைய போர்த்திறஞ்சார்ந்த அறிக்கையில், இந்தியப் பெருங்கடலில் இந்தியக் கடற்படையின் ஆற்றலைக் கூறி அதனுடன் விரிவான தொடர்பு ஆஸ்திரேலியா கப்பற்படைக்குத் தேவை என்றது. 2014ல் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஆஸ்திரேலியா பிரதம மந்திரி டோனி அப்போட் ‘ராணுவம் சாராத அணு ஒத்துழைப்பு’ உடன்படிக்கையில் இந்தியாவுடன் கையெழுத்திட்டார். யூரேனியம் பற்றாக் குறையினால் அணு உலைகளை முழுத் திறனுடன் இயக்குவதற்குப் பல ஆண்டுகளாகச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நமக்கு உலகின் தனிப் பெரும் யுரேனியம் உற்பத்தியாளரான ஆஸ்திரேலியா தேவையான யுரேனியும் வழங்க ஒப்புக்கொண்டது. அதைத் தொடர்ந்து, 2014ல் ஆஸ்திரேலியா விஜயம் செய்த நம் பிரதம மந்திரி மோடி பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கும் உடன்படிக்கையில் ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்திட்டார். 2015 ஜூனில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுக்கிடையேயான முத்தரப்புக் கூட்டம் முதன் முறையாக டெல்லியில் நடைபெற்றது. அதில் இந்தோ-பசிஃபிக் பகுதியில் கடல்-சார்ந்த விஷயங்களில் மூன்று நாடுகளும் ஒத்துழைப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. மார்ச் 2017ல் ஆஸ்திரேலியா பிரதம மந்திரி மால்கம் டர்ன்புல் வருகையின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன, அதில் ஒன்று ‘ஆஸ் இந்ட் எக்ஸ்’ (AUSINDEX) எனப்படும் ஆஸ்திரேலியா-இந்தியா கடற்படைக் கூட்டுப் பயிற்சி 2018ல் துவங்கும் என்பதாகும். இரு நாட்டின் விசேஷப் போர்ப்படைகளும் (Special Forces) அந்த ஆண்டே கூட்டுப் பயிற்சியைத் துவக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுவே, அதே ஆண்டு நவம்பர் 12ம் தேதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நால்வரணியின் முதல் அதிகாரபூர்வமான கூட்டம் அமைய ஏதுவாகியது. மணிலாவில் நடைபெற்ற 31வது ஆசீயான் (ASEAN) மற்றும் 12வது கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடுகளில் (East Asia Summit) பங்கேற்கக் குழுமியிருந்த இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 2021ல், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை ‘முழு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ (Comprehensive Economic Cooperation Agreement) என்கின்ற அளவுக்குக் கூடிய விரைவில் உயர்த்துவதாக முடிவு செய்தன. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மிகச் சொற்பமாக 12 பில்லியன் டாலர் அளவிலேயே (2020-2021) இருக்கிறது. இரு நாடுகளும் தங்களது முதல் 2+2 பேச்சு வார்த்தையை (இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இணைந்து நடத்தும் பேச்சு வார்த்தை) செப்டம்பர் 11, 2021 நேருக்கு-நேர் புது தில்லியில் நடத்தின. இதைத்  தொடர்ந்து செப்டம்பர் 30ல் இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் புது டில்லியில் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் ‘முழு விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம்’ (CECA) 2022ம் ஆண்டு  இறுதிக்குள் எட்டப்படும் என்றும் அதற்கு முன்னால் 2021ம் ஆண்டு  இறுதிக்குள் ஒரு இடைநிலை ஒப்பந்தம் (interim agreement) எட்டப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


நாடுகளுக்கிடையேயான உறவுகள் எப்படிப் படிப்படியாக வளர்ந்து ஒரு ஸ்திரமான நம்பிக்கை மிகுந்த அடித்தளத்தை அமைக்கும், அதனால் என்ன நன்மை பயக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளின் கடந்த பத்தாண்டு சரித்திரம் நல்ல சான்று.


ஆஸ்திரேலியா – ஜப்பான் உறவுகள்


பகுதி 3ல், ஆஸ்திரேலியா-ஜப்பான் தளத்தகை உறவுகள் 2003ம் ஆண்டிலிருந்து படிப்படியாக முன்னேறியதைப் பார்த்தோம். ஆயினும், ஜப்பான், தென் கொரியா, சீனா போன்றவற்றிற்கிடையில் இருக்கும் சிக்கலான உறவுகளினால் மற்ற நாடுகள் இவற்றை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டியுள்ளன. 2013ல் ஜப்பான் தனது ‘தேசியப் பாதுகாப்புத் திட்டத்தை’ (National Security Strategy) அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் முதன் முறையாகாது தனது படைக்கலன்களை வெளிநாடுகளுக்கு விற்கும் கொள்கையை ஏப்ரல், 2014ல் அறிவித்தது. தனது கப்பற்படைக்கு நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் முயற்சியில் இருந்த ஆஸ்திரேலியா ஆர்வமாக ஜப்பானின் மிக நிசப்தமாகச் செல்லக்கூடிய சொர்யு-ரக (Soryu-class) கப்பல்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியது. ஆயினும், ஜப்பான்-தென்  கொரியா உறவுகளில் சிக்கிக் கொள்ள விரும்பாமல் ஃபிரான்ஸின் பர்ரகூடா-ரக (Barracuda-class) கப்பல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.


ஆயினும், சீனாவைப் பொறுத்த வரை அவை ஒருமித்தக் கருத்துக் கொண்டிருப்பது ஜூன் 2021ல் ‘2+2’ எனும் வடிவூட்டத்தின் கீழ் நடைபெறும் இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் வருடாந்திரக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை உறுதி செய்கிறது. தென் சீனக் கடலில் தொடர்ந்து நடைபெறும் எதிர்மறை மற்றும் கவலை கொள்ள வைக்கும் சம்பவங்களுக்கு, குறிப்பாக சச்சரவிலுள்ள பகுதிகளை இராணுவ மயமாக்கும் போக்கிற்கும், மற்றும் கடலோரக் காவல் படையினர் மற்றும் அமைப்புசாரக் கடற்படையினர் (maritime militia) ஆகியோரைக் கொண்டு மற்ற நாடுகள் தங்கள் இயற்கை வளத்தை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும்  இரு நாடுகளும் கவலை தெரிவித்தன. தன்னிச்சையாகச் சீனா தென் சீனக் கடலில் நடைமுறை நிலையை மாற்றுவதற்கு இரு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஹாங்காங்கிலும், சின்ஜியாங்  மாநிலத்திலும் சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு இரு நாடுகளும் கடும் கவலையைத் தெரிவித்தன. நடுநிலை ஆய்வாளர்களும், ஐ நா சபையின் மனித உரிமைப் பிரதிநிதிகளும் தடையின்றி சின்ஜியாங் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் சீனாவை வற்புறுத்தின. தைவான் குறுக்கில் சீனா அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்றும் கூறின. வழக்கம் போல இவற்றை நிராகரித்த சீனா, தென் சீனக் கடல் முழுவதிலும் மற்றும் டியஓயு (Diaoyu, அதாவது சென்காகு) தீவிலும் தனது இறையாண்மை முற்றிலும் இருப்பதாகவும், ஹாங்காங், சின்ஜியாங் போன்றவை தனது உள் நாட்டு விவகாரங்கள் என்றும், அவற்றில் தலையிட்டுச்  சீனாவைச் சிறுமைப் படுத்தும் நோக்கில் கூறப்பட்டவைகளைத் தாம் நிராகரிப்பதாகவும் கூறியது.


ஆஸ்திரேலியா-அமெரிக்க உறவுகள்


ஆஸ்திரேலியா, அமெரிக்க உறவுகள் மிகவும் நெருக்கமானவை. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையானவை .உலக மகா யுத்தங்களான ஒன்றிலும், இரண்டிலும் ஆஸ்திரேலியா அமெரிக்காவின் பக்கம் போரிட்டுள்ளது. 1951 யிலேயே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகள் ‘அன்ஸுஸ்’ (ANZUS) பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. அதன் கீழ், அமெரிக்கா ஆஸ்திரேலியாவிற்குத் தனது  அணு ஆயுதக் குடையின் கீழ் பாதுகாப்பு அளித்தது.  1960 களில் இத் தொடர்புகள் மேலும் இறுகி ‘ஐந்து கண்கள்’ எனும் உளவு அமைப்பில் ஆஸ்திரேலியாவை அமெரிக்கா இணைத்துக்கொண்டது. 1985யிலிருந்து ‘2+2’ வடிவூட்டத்தின் கீழ் இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் தொடர்ந்து வருடாந்திரப் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். நவம்பர் 2014ல் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட் (Tony Abbott) , ஜப்பானியப் பிரதமர் ஷின்ஜோ அபே (Shinzo Abe), அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) ஆகியோர் பங்கு கொண்ட முத்தரப்பு உச்சி மாநாட்டில், “இந்த முத்தரப்புக் கூட்டுறவை ஆழப்படுத்தவும், அதன் மூலம் ஆசியா-பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தைப் பெருக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த முத்தரப்புக் கூட்டுறவு அசைக்க முடியாத பீடங்களான பொதுவான நலன்கள், பண்புகள், ஜனநாயகத்தில் பற்று, தடையற்ற பொருளாதாரம், சட்டத்தின் மாட்சிமை, வேறுபாடுகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பது ஆகியவற்றைன் மேல் அமைந்திருப்பதைக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.


உலகக் கட்டமைப்புக்குத் தேவையான நிதியில் அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 15 டிரில்லியன் பற்றாக்குறை 2040ம் ஆண்டு வாக்கில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளைத் தாண்டித்  தனியார் முதலீடுகளும் பெருமளவில் இருந்தாலொழிய இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாது. அதே சமயம், இத்தகைய முதலீடுகள் சர்வதேசத் தரத்தில் உள்கட்டமைப்புக்கள் ஏற்படவும், வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவும், பாரிஸ் சுற்றுச் சூழல் ஒப்பந்தத்திற்கு உட்பட்டதாகவும்,நிதிநிலை, சமூகம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு இயைந்து அவற்றிற்கு வலுவூட்டுவதாகவும் அமைய வேண்டியது அவசியமாகிறது. இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து ‘நீலப் புள்ளி பிணையம்’ (Blue Dot Network, BDN) என்பதை நிர்மாணித்திருக்கின்றன. இது அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால் நவம்பர் 2019ல் எடுக்கப்பட்ட முடிவு. பின்னர் இது பாங்காக்கில் நடைபெற்ற 35வது ஆசியான் (ASEAN) மாநாட்டில் நவம்பர் 2019ல் அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தேசங்களும் இணைந்து உலக கட்டமைப்புத் திட்டங்களைப் பரிசோதித்து அவற்றிற்குச் சான்றிதழ் வழங்கும். அதன் அடிப்படையில் இவை நிர்மாணிக்கப்படும். தற்போது தன்னிச்சையாகச் செயல்படும் சீனாவின்  ‘பட்டை மற்றும் சாலை’ முனைப்பிற்கு மாற்றாக இது அமையும் என்று நம்பப்படுகிறது. இதில் இணைய இந்தியாவும் முனைப்புக்காட்டி வருகிறது.  இந்தியாவின் ‘சாகர்’ (Security and Growth for All in the Region, SAGAR) திட்டம் BDN திட்டத்துடன் இணைந்து செயல்படும் சாத்தியக் கூறுகள் ஏராளம். ‘பட்டை மற்றும் சாலை’ முனைப்பில் பாதகமான அம்சங்களான ‘கடன் கண்ணி’ (debt trap), தேவையற்ற, லாபமற்ற கட்டமைப்புக்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் புறக்கணித்து உட்கட்டமைப்புக்களை நிர்மாணிப்பது போன்றவை தவிர்க்கப்படும்.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2014ல் துவக்கிய ‘ஆசியாவை நோக்கி’ என்கின்ற முனைப்பில் இரு நாடுகளின் உறவும் மேலும் வலுப்படும் வகையில், இரு நாடுகளும் செய்து கொண்ட ‘படைகள் பாங்கு’ உடன்படிக்கை (Force Posture Agreement) அவற்றை மேலும் நெருக்கமாக்கின. இதன் மூலம், இரு நாடுகளின் படைகளும் மேலும் இணைந்து இயங்க (interoperability) இது வழிவகுத்தது. ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசங்களில் (Northern Territories) அமைந்துள்ள (Darwin) படைத் தளத்தில் 2500 அமெரிக்க வீரர்கள் ஒரு வருடத்தில் ஆறு மாதங்கள் தங்கி ஆஸ்திரேலியப் படைகளுடன் கூட்டுப் பயிற்சி செய்கின்றனர். இதில், Talisman Sabre எனும் மிக நவீனப் பயிற்சியில் இந்தியாவும் இணைய இருக்கின்றது. 2005ம் ஆண்டிலிருந்து ‘Talisman Sabre’ எனும் விஸ்தாரமான இராணுவக் கூட்டுறவுப் பயிற்சியை இரண்டாண்டுகளுக்கொரு முறை இரு நாடுகளும் நடத்துகின்றன. அதன் 2021 பதிப்பில் முதன் முறையாகத்  தென் கொரியா கலந்து கொண்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இங்கிலாந்தும், ஜப்பானும் கூட இதில் இந்த வருடம் பங்கு கொள்ளுகின்றன,  இந்தியாவும், ஃபிரான்சும் ‘நோக்கர்களாக’ (observers) முதன் முறையாக இதில் பங்கேற்கின்றன. ‘நால்வரணி +’ எனப்படும் விஸ்தரிக்கப்பட்ட நால்வரணியில் இங்கிலாந்து, ஃபிரான்ஸ் மற்றும் தென் கொரியா ஆகியவை இடம் பெறும் என்ற கணிப்பை இவை உறுதிப்படுத்துகின்றனவோ?


ஆஸ்திரேலியாவின் இராணுவத் தளவாடங்கள் பலவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவையே. 2016 முதல் 2020 வரையான அக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் நான்காவது மிகப் பெரும் நாடாக இருந்தது. அவ்வாறு செய்யப்படும் இறக்குமதியில் 69 சதவிகிதம் அமெரிக்காவிலிருந்து வந்தவையே. 2005ல் இரு நாடுகளும் ‘தடையற்ற வணிக ஒப்பந்தம்’ செய்து கொண்டன. சீனாவுடன் ஆஸ்திரேலியா செய்யும் வணிகத்துடன் (232 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2020ம் ஆண்டு கணக்கு) ஒப்பிட்டால் மொத்த அமெரிக்க-ஆஸ்திரேலியா வணிகமாக 37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2020ம் ஆண்டு கணக்கு) மிகவும் குறைவுதான்.


ஆயினும், இரு நாடுகளும் நால்வரணியை அமைப்பதிலும், குறிப்பாக இந்தியாவை அதில் முக்கியப் பங்கு பெறச் செய்வதிலும் 2012ம் ஆண்டிலிருந்து முனைப்புக் காட்டி வருகின்றன. நாம் பகுதி 3ல் பார்த்தபடி 2007ல் நடந்த கசப்பான நிகழ்வுகளுக்குப் பிறகு மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியாவை மறுபடியும் இணைத்துக்கொள்ள இந்தியா தயங்கியது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று தேசங்களும் இணைந்து ‘AUKUS’ என்கின்ற பாதுகாப்பு அமைப்பை செப்டம்பர் 15, 2021ல் அறிவித்தன. இது முழுக்க முழுக்க பாதுகாப்புத் தளவாடங்கள் பின்னணியில் அமைக்கப்பட்ட முயற்சி. இதன் முதல் நோக்கம், ஆஸ்திரேலியாவின் கப்பல் படைத் திறனை அதிகரிப்பது. அதற்கு, மூன்று நாடுகளும் சேர்ந்து அணுசக்தியால் இயங்கும் எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியக் கப்பற்படைக்கு வடிவமைத்துக் கட்ட இருக்கின்றன. இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி மற்ற இரு நாடுகளும் ஆஸ்திரேலியாவிற்கு அணு சக்தியில் இயங்கும் தாக்கு நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்பை வழங்கவும், அவற்றை ஆஸ்திரேலியாவில் கட்டுமானம் செய்யவும், அணுசக்தி உந்துவிசைக் கலன்களை (naval nulear reactors) அளிக்கவும், அவற்றிற்குத் தேவையான மிகுதியாகச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Highly Enriched Uranium, HEU) அளிக்கவும், அமெரிக்க போர் நிர்வாக அமைப்பை (Combat Management System) அவற்றில் நிறுவவும், டோமஹாக் (Tomahawk) நீண்ட-தூர தேடித் திரியும் ஏவுகணைகளை அவற்றில் பொருத்தவும் தீர்மானித்தன. ‘இது பிராந்தியத்தின் அமைதியையும், உறுதித் தன்மையையும் குலைத்து இராணுவப் போட்டியை அதிகரிக்கும்’ என்று சீனா இதற்கு எதிர்க்கருத்துத் தெரிவித்தது. இது போக, ‘அறுக்கும் முனைத் தொழில்நுட்பங்களான’ இணையப் பாதுகாப்பு (cyber security), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் அணுத் துகள்களின் இயற்பியலில் (quantum physics) அமைந்த தொழில்நுட்பம் (quantum technologies) ஆகியவற்றிலும் இம்மூன்று நாடுகளும் ஒத்துழைக்க இருக்கின்றன.


அடுத்த முப்பது ஆண்டுகளுக்காவது, அதாவது சீனா தனது குறிக்கோளான உலகின் மாபெரும் வளம் கொழிக்கும் மற்றும் ‘உலகத் தரம் வாய்ந்த படை பலத்தைக் கொண்டிருக்கும்’ நாடாகவும் மாறும் வரை, ஆஸ்திரேலியா-சீன உறவுகள் மேம்படுவது சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலியா கணித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, அதன் முனைப்பு பெரும் சக்திகளாகப் பிராந்தியத்திலும் அதற்கப்பாலும் நிலவும் நாடுகளுடன் ஆழ்ந்த பாதுகாப்பு சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளுவது.


பகுதி-4 எவ்வாறு ஆஸ்திரேலியா நால்வரணியில் இதமிழ்டம்பெறுவது தவிர்க்கமுடியாததாகி விட்டது என்பதைத் தெளிப்படுத்துகிறது.


(சுப்ரமண்யம் ஸ்ரீதரன், படிப்பின் மூலமும், வேலையின் மூலமும் ஒரு கணினி வல்லுநர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பல்லாண்டுகள் பணியாற்றிய போது, அதன் உலக சேவை வழங்கும் மையத்தின் சில பிரிவுகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். இந்தியாவின் போர்திறஞ்சார்ந்த பாதுகாப்பு, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள், குறிப்பாக சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கூர்மையாக இருபத்தைந்தாண்டுகளாகக் கவனித்து வருபவர். இந்தியாவின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி விவாதிக்கும் முன்னணி வலைத்தளம் ஒன்றின் செயலாட்சியராக இருக்கிறார். சென்னை சீன ஆய்வு மையத்தின் உறுப்பினர். Views expresses are personal and do not necessarily reflect the views of C3S.)

4 views0 comments

Comments


LATEST
bottom of page