top of page

ஜப்பான்-சீன உறவுகள்: நால்வர் அணி (The Quad) – பகுதி மூன்று ; சுப்ரமண்யம் ஸ்ரீதரன்

Updated: Apr 17, 2023

Image Courtesy: Wikimedia Commons

Article 27/2021

முன்னுரைச் சுருக்கம்

நால்வராணி அமைப்புக்கு வித்திட்டது ஜப்பான். ஜப்பானுக்கு சீனாவைப் பற்றிய எச்சரிக்கை நுண்ணுணர்வும், மற்ற நாடுகளுடன் சேர்ந்து அதைக்  கட்டுப்படுத்துவதுற்கு வேண்டிய காரணங்களும்  அதனுடைய  1500 வருடப் பண்டைய உறவுகளில் பொதிந்துள்ளன. கப்பம் கட்டும் நாடாக ஜப்பானைச்  சீனா பல நூற்றாண்டுகள் தொல்லை கொடுத்துத் தொந்திரவு செய்ததால், சீனாவைக் கைப்பற்றித் தனது பாதுகாப்பை உறுதிசெய்ய கர்வமுள்ள ஜப்பான் போட்ட திட்டம், பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கி, பதினேழாம் நூற்றாண்டில் ரயுகயு (Ryukyu) முடியாட்சியைக் கைப்பற்றியதில் நீண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவைத் தோற்கடித்து வெற்றி கண்டு, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மஞ்சூரியாவைக் கைப்பற்றிச் சீனாவை ஆண்டதில் முடிந்தது. 1895ல் சீனப் படைகளை ஜப்பான் கொரியத் தீபகற்பத்தில் தோற்கடித்தது, 2500 ஆண்டுகள் ஆண்ட  சீனப் பரம்பரைப் பேரரசையே முடிவுக்கு கொணர்ந்து பின்னர் இரண்டாம் உலகப் போரில் சீனாவை முழுவதும் கைப்பற்றவும் வழி வகுத்தது. இவ்விரு நாடுகளுக்கிடையேயான ‘முடிவற்ற பகைமை’ (enduring enmity) உலக வரலாற்றிலேயே மிக நீண்டது. தற்காலத்தில் இது பலவிதப் பரிமாணங்களில் உருவெடுத்துள்ளது. இந்தியா-ஜப்பானுக்கிடையேயான நெருக்கமான நட்பு, ஜப்பான்-அமெரிக்கா இடையிலான மிக நெருங்கிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ராஜரீக உறவுகள்,  வேகமாக வளர்ந்து வரும் இந்திய-அமெரிக்க உறவுகள் ஆகியவை அவர்கள் மூவரின் பாதுகாப்புக்குப் பொது அச்சுறுத்தலாக விளங்கும் சீனாவுக்கு எதிராகவும் அவர்களை நால்வராணி மூலமாக மேலும் இயற்கையாக இணைத்திருப்பதில் வியப்பில்லை. இந்தச் சுருக்கு இதழ் (Issue Brief) இவற்றை ஆழமாக ஆய்கிறது.


சீனா நாடா அல்லது தேசமா?

உலக நாடுகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் பதினான்கு அண்டை நாடுகளுடன் சீனாவிற்கு எல்லை அமைந்திருக்கிறது. மேலும், நீர்ப்பரப்பு எல்லைகளும் பல தேசங்களுடன் உண்டு. சீனாவை ஆண்ட கடைசி அந்நிய ஆட்சி (ஜப்பான், 1945) அகன்று எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்னரும் தீர்க்கப்படாத எல்லைத் தாவா அதற்குப் பல நாடுகளுடன் இன்னமும் இருக்கிறது.


தெற்குச் சீனக் கடல் (South China Sea, SCS. மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப இது தற்போது இந்தோ-சீனக் கடல், Indo-China Sea or ICS, என்றும் பலரால் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெயர் காரணத்தைப் பற்றிப் பகுதி 6ல் விரிவாகப் பார்க்கலாம்.) முழுவதும் தன்னுடையதென்று சீனா சொந்தம் கொண்டாடி அங்குத் தான் வைத்ததுதான் சட்டம் என்கிறது. ஐ நா வின் கடல் சார் சட்டங்கள் அமைப்பான UNCLOS (United Nations Convention on the Law of the Sea) விதிகள் படி அதன் உரிமை தவறு என்று 2016ல் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும் அதை அலட்சியம் செய்து அந்தத் தீர்ப்பு தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும், தன்னுடன் அங்குள்ள நாடுகள் தனித்தனியாகச் செய்து கொள்ளும் ஒப்பந்தம் மட்டுமே தீர்வு என்றும் தன் மனம் போன போக்கில் சீனா  செயல்படுகிறது. அங்குள்ள பிற கடலோர நாடுகள் அவரவர்களுக்குச் சொந்தமான ‘தனிப் பொருளாதார மண்டலம்’ (Exclusive Economic Zone, EEZ) அமைந்த கடல் பகுதிகளில் ஈடுபடும் எண்ணெய் மற்றும் வாயுத் துறப்பணச் செயல்களுக்குத் தடை போடுகிறது. 2020ம் ஆண்டில் மட்டுமே, மலேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் ‘கரை தாண்டிய’ (offshore) இடங்களில் கடலில் செய்யும் எண்ணைத் துறப்பண (oil exploration) முயற்சிகளில் மூன்று முறை சீனா பதற்றத்தை உண்டாக்கியது. மீன்பிடிப்பதற்குத் தடை போடுகிறது, மற்ற நாடுகளின் சிறிய மீனவப் படகுகள் மீது தம் ராட்சதக் கடலோரக் காவல் படைக் கப்பல்களை மோதி அவற்றை மூழ்கடிக்கிறது, அல்லது, அமைப்புசாரக் கடற்படையினரைக் கொண்டு விரட்டி அடிக்கிறது. மிக அருகிலுள்ள சீனக் கடற்கரையிலிருந்து 1200 கடல் மைல் (nautical mile) தொலைவிலுள்ள இந்தோனேசியாவின் நாட்டுனா(Natuna) கடலும் தம்முடையதுதான் என்கிறது.


நம் (லடாக், அருணாச்சலப் பிரதேசம், ஷக்ஸ்கம் பள்ளத்தாக்கு – Shaksgam Valley) மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினைகள் போக, ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதிகள், கிழக்குச் சீனக் கடலில் அமைந்துள்ள ஜப்பான் மற்றும் கொரியாவுக்குச் சொந்தமான சில தீவுகள், பூட்டான், நேபால், லாவோஸ், மங்கோலியா, மியான்மார் என்று பலருடனும் சீனாவுக்கு எல்லைப் பிரச்சினைகள் உள்ளன.


பேரரசர் தம் கண்ணால் பார்ப்பதெல்லாம் தனக்குச் சொந்தம் என்றெண்ணும் மனப்போக்கு. அதனால்தான் ஒரு பேரரசின் எல்லைகள் என்றைக்குமே திடமாக இருந்ததில்லை. சீனாவுக்கும் இது பொருந்தும். இது, ‘இடை ராச்சியம்’ (zhongguo), ‘சுவர்க்கத்தால் முடிசூடப்பட்டவர்’ (tianzi) என்பது போல்,  சீனப் பேரரசின் மூன்றாவது தத்துவம், அதாவது ‘சீனப் பேரரசர் சுவர்க்கத்தின் கீழுள்ள எல்லாவற்றிற்கும் பொறுப்பாளர்’ (tianxia) என்பது. இவை, பண்டைய சீனப்பேரரசின் முப்பெரும் தத்துவங்கள். 1912ல் சிங் (Qing) மன்னராட்சியை ஒழித்து முதல் அதிபராகப் பதவியேற்ற தளபதி யுவான் ஷிகை (Yuan Shikai) அமைத்த அரசியலமைப்பு நிர்ணய சபை தனது கூட்டங்களை ‘சுவர்க்கக் கோவில்’ (Temple of Heaven) என்றழைக்கப்படும் சீனப் பேரரசர்கள் சுவர்க்கக் கடவுளை வழிபட்ட இடத்தில்தான் நடத்தியது. சமதர்மவாதி என்று கருதப்பட்ட சீன அரசியல் தலைவரும், ‘நவீன சீனாவின் தந்தை’ என்றும் அழைக்கப்படும் சுன் யாட்-சென் (Sun Yat-sen) கூட நாஞ்சிங்கிலுள்ள (Nanjing) தனது அலுவலகத்தை தூரத்திலுள்ள பெய்ஜிங்கின் ‘சுவர்க்கக் கோவில்’ (Temple of Heaven) அமைப்பிலேதான் கட்டிக் கொண்டார். 1949ல் சீன மக்கள் குடியரசை மாவோ சேதுங் நிறுவியபோதும் சுவர்க்கத்தின் நுழைவு வாயில் என்று கருதப்படும் டியானென்மென் வாயிலிலிருந்துதான் (Tiananmen Gate) அறிவித்தார். இவை வெறும் குறியீடுகளாகக் கூட (symbolic) இருக்கலாம் ஆனால் அவற்றைக் குறைத்து மதிப்பிடமுடியாது. காலனிய மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கு முற்றிலும் முரணான கம்யூனிஸச் சித்தாந்தத்தின் கீழ் ஆட்சி நடைபெறும் இன்றைய சீனாவிலும், இத்தகைய பண்டையப் பேரரசு ஆட்சிமுறை சார்ந்த எண்ணங்களே தொடர்வது அவர்களது ‘போர்திறஞ்சார்ந்த கலாச்சாரத்தின்’ (strategic culture) ஆழத்தைப்  பறைசாற்றுகிறது . சமீபகாலமாக, வடமேற்கிலுள்ள கிர்கிஸ்தான் (Kyrgyzstan), காசகஸ்தான் (Kazakhstan) பகுதிகள் தன்னுடையவை என்று வேறு சீனா சொல்ல ஆரம்பித்திருக்கிறது.


1648ல் புனித ரோம சாம்ராஜ்யத்திற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ‘வெஸ்ட்ஃபாலியா (Westphalia) அமைதி உடன்படிக்கை’ நாம் இன்று அறியப்படும் ‘நாடு-தேசம்’ (Nation-State) என்கின்ற அமைப்புக்கு வித்திட்டது. நாடு என்பது ஒரே வரலாறு, கலாச்சாரம், இனம் ஆகியவற்றின் மூலம் பிணைக்கப்பட்டது. தேசம் என்பது நிலப்பரப்பு, இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயம். இவற்றின் இணைப்பே நாடு-தேசம் என்கின்ற அமைப்பு. துரதிர்ஷ்டவசமாக,  உலகின் சில பகுதிகள், நாடு-தேசம் என்கின்ற ஒருமித்த அமைப்பாக இல்லை. உலகில், இன்றைக்கும் சில பகுதிகள், நாடுகளாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் தேசங்களாகவாவது  இருக்கின்றன (சில எல்லை சச்சரவுகள் இருந்தாலும்). சில நாடாகவும் இல்லை, தேசமாகவும் இல்லை. உதாரணம், பாகிஸ்தான்.


அண்டைநாடான இந்தியாவுடனும், ஆஃப்கானிஸ்தானுடனும் பாகிஸ்தானுக்குத் தீர்க்கமுடியாத எல்லை சச்சரவு இருக்கிறது. சீனாவுடனான அதன் எல்லைகள் தற்காலிகமானவையே, ஏனெனில், அவை இந்தியாவிற்குச் சொந்தம். தனது தேசத்தின் நிலப்பரப்பில் பாதியும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலுமான கிழக்குப் பாகிஸ்தானை 1971ல் இழந்தது. எனவே, தேசத்தின் பரப்பு அங்கு வரைமுறைப் படுத்தப்படவில்லை, அந்த நாட்டிற்குண்டான இயல்புகள் அனைத்துமே தனது ஒரே பரம எதிரியான இந்தியாவிடமிருந்து வந்தவை என்பதினால் அவற்றை நிராகரித்து வேறு சிறப்பியல்புகளைப் புகுத்தப் பெரும் முயற்சிகள் ஜின்னா காலத்திலிருந்து அங்கு நடைபெற்று வருகின்றன. உதாரணமாக, சிந்து சமவெளி மற்றும் ஹரப்பன் (Harappan)நாகரீகங்களின் பிறப்பிடங்கள் மற்றும் பண்டைய தக்ஷஷீலா (Taxila) போன்ற ஹிந்து, பௌத்த சமயங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தாலும், அவற்றைப் புறக்கணித்து மேற்காசிய மற்றும் துருக்கி அல்லது மத்திய ஆசியாவிலிருந்து தாங்கள் புலம் பெயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளுவது. ஒரு நாட்டின் தன்மையை மாற்றுவது  அவ்வளவு சுலபமல்ல என்பது தெளிவு. இவற்றால் ஏற்பட்ட சிக்கல்தான் பாகிஸ்தானின் ‘அடையாள இக்கட்டு’ (identity crisis).


பாகிஸ்தானுடனான தனது நட்பைக் காதற் காவியப் பாங்கில், ‘மிகத் தித்திப்பான தேனினும் இனிய சுவையுடையது’, ‘மிக ஆழமான கடலினை விட ஆழமானது’, ‘மிகச் சிவப்பான ரோஜா மலரைக் காட்டிலும் சிவப்பானது’ என்றெல்லாம் வருணித்துக் கொள்ளும் சீனாவும், பாகிஸ்தானைப்போலவே,  ‘நாடு-தேசம்’ என்கின்ற அமைப்பை இன்னமும் பெறவில்லை.


அண்மைக் காலம் வரை சீன நாட்டிற்கென்று ஒரு பெயர் இருந்ததில்லை. சீன மொழியில் zhongguo என்பது ‘இடை ராஜ்ஜியம்’ என்று தேசத்தைக் குறிக்கும் சொல். ஆனால், huaxia, அதாவது ‘நாகரிகச் சமுதாயம்’ என்றும் தங்கள் நாட்டைக் குறிப்பிடுகின்றனர். இது கலாச்சாரம் சார்ந்த குறியீடு. இரண்டையும் சேர்த்து தற்போது zhonghua என்று சீனா குறிப்பிடப்படுகிறது. நாடு-தேசம் என்கிற அமைப்புக்கு சீன மொழியில் இதுதான்  தோராயமான குறியீடு. எனவே, சீன தேசம், zhonghua minguo என்று சீன மொழியில் சீனக் குடியரசு (Republic of China) குறிப்பிட்டுக் கொள்ளுகிறது. ஆனால், சீனாவின் பெரும் பகுதிகள் நம்பத் தகுதியற்ற முறையில் சீனாவுடன் இணைக்கப்பட்டிருப்பதால் சீனாவை தேசம் என்று கருதுவது இயலாது. சீனா தேசத்தின் எல்லைகளை வரையறுக்க மறுக்கிறது அல்லது மற்றவர்களது பகுதியை எல்லையில்லாமல் உரிமை கொண்டாடுகிறது.


ஆனால், சீன நாடா, zhonghua minzu ? உதயமாகும் குடியரசுக்கு ஆதரவாகத் தனது பேரரசர் பதவியைத் துறந்த கடைசி சிங் பேரரசர் தனது கடைசி அரசாணையில் சீனாவை ஐந்து இன மக்களைக் கொண்ட நிலப்பரப்பாகவே (lands of the five races—Manchu, Han, Mongol, Hui, and Tibetan—which shall combine to form a great Republic of China) சித்தரிக்கிறார். ஆனால், இவர்கள் முழுமையாக ஒன்றிணைக்கப்படாததால் (assimilate) நாட்டின் வடிவமும் முழுமையாகவில்லை. இன்றும் ஐந்து தன்னிச்சைப் பகுதிகளைக் (autonomous regions) கொண்டதாகவே சீனா விளங்குகிறது. திபெத்தியர்கள், சின்ஜியாங்கின் வீகர்கள் (Uyghurs), மங்கோலியர்கள், மஞ்சூரியர்கள், ஹுய் (Hui) முஸ்லிம்கள், டாய் (Dai) இனத்தவர்கள் என்று,  ஹான்      சீனர்களைத் தவிர பலதரப்பட்ட, பல இன மக்கள் சீனாவில் இருந்தாலும், சீன மொழி, ஹான் இனக் கலாச்சாரம், ஹான் சரித்திரம் போன்றவற்றை அவர்கள் மேல் கட்டாயமாகத் திணித்து ஒரே நாடு என்கிற எண்ணத்தை உண்டாக்கப் பல தசாப்தங்களாக சீனா முயற்சி செய்தும் வருகிறது. சீன அரசே ஹான் சீனர்களைத் தவிர 55 சிறுபான்மை இனங்கள் (ethnicities) சீனாவில் இருப்பதை உறுதி செய்கிறது. சியாங் காய்-ஷேக்கின் குவோமின்டாங் படைத்த தாக்குதலில் பின்வாங்கிய கம்யூனிஸ்டுக் கிளர்ச்சியாளர்களை ‘நீண்ட நடை’ (Long March) மூலம் மாவோ தற்காத்தார். அது தெற்கில் ஆரம்பித்து, பெரும்பாலும் சிறுபான்மை இனத்தவர்கள் பகுதியான ஹுய், திபெத், வீகர், மங்கோலியர் வழியாகச் சென்று வடக்கில் யானான் (Yan’an) பகுதியில் முடிந்தது. அப்போது மாவோ சிறுபான்மை மக்களின் நலன்களைக் காப்பதாக உறுதி அளித்தார், பின்னர் அது காற்றில் பறக்க விடப்பட்டது.


அதிபர் ஸி ஜின்பிங் பதவியேற்ற பின், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியை எல்லா இடங்களிலும் ஆதிக்கஞ் செலுத்த வைத்துள்ளதால், உலகில் மற்றெந்த நாட்டிலும் இல்லாதவாறு,  கட்சி-தேசம் (paidui,guo) என்ற அமைப்பு சீனாவில் உருவாகிவிட்டதோ?


சீனா ஏன் இவ்வாறு இயங்குகிறது? சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நான்கு அடிப்படை  எண்ணங்கள் இதற்குக் காரணம். அவையாவன, தளர்ச்சியாகவுள்ள சீனாவின்  ஓரஞ்சார்ந்த பகுதிகளை (peripheral) – அதாவது திபெத், சின்ஜியாங், மங்கோலியா, தூரக் கிழக்கு (Far East) –  நாட்டுடன் திடமாக, அதாவது, நாட்டின் நடுவிலுள்ள ஹான்-மையத்துடன் (Han-core) இணைத்துக்கொள்ளுவது, சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியே (CCP) மக்களின் ஒருமித்த அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பாக என்றென்றும் சீனாவை ஆட்சி செய்வது,  இழந்த பகுதிகள் என்று தான் கருதுவதை மீட்டெடுப்பது, மற்றும் சீனாவின் பெருமையை மீட்டு உலகின் தலை சிறந்த ஒரே நாடாக நிலை நாட்டுவது. இவை 1949ம் ஆண்டிலிருந்து இன்றும் தொடர்கின்றன. வேறுவிதமான ஜனநாயக முறை ஆட்சி சீனாவில் மலர்ந்தாலும் அதுவும், கம்யூனிஸட் கோட்பாடுகளை வேண்டுமானால் தவிர்க்குமே  ஒழிய, மற்ற மூன்று எண்ணங்களிலும் அதே கொள்கையைக் கொண்டிருக்கும்.

இவற்றின் தாக்கம் ஜப்பான்-சீன உறவில் பிரதிபலிப்பதை அடுத்துப் பார்க்கலாம்.


பண்டைய ஜப்பான் – சீன உறவு

நால்வரணியிலுள்ள இரண்டாவது நாடு ஜப்பான். நால்வரணி அமைவதற்கு வித்திட்டதும் ஜப்பான்தான். எனவே, ஜப்பான்-சீன உறவை அறிந்து கொள்ளுவது இன்றியமையாதது.


இதைப் பார்ப்பதற்கு முன் சற்றுப் பின்னோக்கி ஜப்பானின் வரலாற்றையும் நோக்கலாம். ஜப்பானியர்கள் ஹான் இனச் சீனர்கள் என்பது சீனர்களின் நம்பிக்கை. ஒருமித்த சீனாவின் (Unified China) முதல் பேரரசரும், மஞ்சள் பேரரசர் (Yellow Emperor) என்று அழைக்கப்படுபவரும், பின்னர் கடவுளின் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டவரும், சின் (Qin) பரம்பரையை நிறுவியருமான சின் ஷிஹுவாங் டி (Qin Shihuang Di) பொது சகாப்தத்திற்கு முற்பட்ட 220ல் (பொ.ச.மு., BCE) அனுப்பிய ‘முடிவில்லாத ஆயுளைக் கொடுக்கும் பெங்ளை (Penglai) எனப்படும் மலையைத்’ தேடிய குழு ஒன்று சென்று, பின் திரும்பாமலே தங்கி விட்ட இடம்தான் இன்றைய ஜப்பான் என்பதும், ஜப்பானியர்கள் எனவே சீன வம்சாவளியினர் என்பதும், சீனர்கள் ஜப்பானைப் பற்றிக்  கூறிக்கொள்ளும் வரலாறு. சீனப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் ஒரு நாடாக, அன்னம் (Annam) என்று அப்போது அறியப்பட்ட வியட்நாம், கோரையோ (Goryeo) என்று அழைக்கப்பட்ட கொரியாவைப் போலவே, ஜப்பானும் சில காலம் இருந்தபோதிலும், ஜப்பானியப் பேரரசி சுயிகோவின் (Empress Suiko) ஆட்சி நடைபெற்ற ஏழாவது நூற்றாண்டிலிருந்து அதன் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அது தன்னை ‘சூரியன் உதிக்கும் நாடு’ (The Land of the Rising Sun) என்றும், சீனாவை ‘சூரியன் மறையும் நாடு’  (The Land of the Setting Sun) என்றும் கூறிக்கொள்ள ஆரம்பித்தது. மேலும் ஜப்பானிய அரசர்கள் தங்களை சூரிய குலத்தினர் என்றும், பேரரசர் என்றும் குறிப்பிட்டுக் கொண்டனர். இவை தன்னைச் சீனப் பேரரசுடன் சரிசமமாகப் பாவிப்பதற்கு ஒப்பானது. மேலும், நாம் ஏற்கெனவே பார்த்த முப்பெரும் சீனத் தத்துவங்களான ‘இடை ராச்சியம்’ (zhongguo), ‘சுவர்க்கத்தால் முடிசூடப்பட்டவர்’ (tianzi), ‘சீனப் பேரரசர் சுவர்க்கத்தின் கீழுள்ள எல்லாவற்றிற்கும் பொறுப்பாளர்’ (tianxia) போன்றவற்றிக்கு முரணானது. சீனப் பார்வையில் இவை பாபச் செயல்கள் (sacrileges).


சீனாவின் சூயி வம்சத்தை (Sui Dynasty, 589-618 CE) அடுத்து வந்த டாங் வம்சப் (Tang Dynasty, 618-907 CE)  பேரரசர்களிடம் ஜப்பானிய அரசர் யமாடோ (Yamato) ‘வளைந்த நாடு’  என்று சீனர்கள் ஜப்பானைக் குறிப்பிடுவதை விட்டு ஜப்பான் நாட்டை  நிஹோன் (Nihon), அதாவது ‘சூரியனின் தொடக்க ஸ்தானம்’ (Origin of the Sun) என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சீனப் பேரரசர்கள் புவிப்பரப்பைத் தாண்டிய (extra-terrestrial) சுவர்க்கத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று தங்களைக் கருதியது போலவே, ஜப்பானியர்களும் தங்கள் பேரரசரைப் புவிப்பரப்பைத் தாண்டிய சூரியக் கடவுளின் நேர் வழித்தோன்றல் என்றே கருதுகிறார்கள். மங்கோலிய யுவான் ஆட்சிப் பரம்பரையில் (Yuan Dynasty, 1279-1368 CE), ஜப்பான் கப்பம் கட்ட மறுத்ததை அடுத்து, அவர்கள் இருமுறை ஜப்பானைத் தோற்கடிக்கக் கப்பல் படைகளை அனுப்பினார்கள். இரு முறையும், சீனாதான் தோற்றது. பின்னர் வந்த மிங் பரம்பரைக்கும் (Ming Dynasty, 1368-1644 CE) ஜப்பான் கப்பம் கட்ட மறுத்துவிட்டது. 1369ம் ஆண்டு, கப்பம் கட்டவில்லையென்றால் சீனப் படைகளைச் சந்திக்கத்  தயாராக இருக்க வேண்டும் என்ற மிங் பேரரசரின் மிரட்டலுக்கு பதிலளித்த ஜப்பானிய இளவரசர் , “எங்கள் சிறு தேசத்திடமும் எப்படித் தற்காத்துக் கொள்ளுவதென்ற திட்டம் இருக்கிறது’ என்று பதிலளித்தார்.


பதினேழாம் நூற்றாண்டின் இடையில், வட கிழக்கிலிருந்து படையெடுத்து வந்த மஞ்சு (Manchu) இனத்தவர்கள், மிங் பரம்பரை ஹான் சீனர்களைத் தோற்கடித்து சிங் (Qing Dynasty, 1644-1911 CE) பரம்பரையை நிறுவினார்கள். அப்போது, தங்களைக் காத்துக்கொள்ள மிங் பேரரசர் ஜப்பானின் ராணுவ உதவியை நாடினார். ஜப்பான் அதை நிராகரித்தது. 1894ல் சிங் பேரரசின் பெய்யாங் வடக்குக் கடற்படைத் தொகுப்பைச் சேர்ந்த (Beiyang Northern Fleet) படைகள் ஜப்பானியக் கடற்படையிடம் முதலாம் சீன-ஜப்பானியப் போரில் (ஜூலை 1894 முதல் ஏப்ரல் 1895 வரை) தோல்வியைச் சந்தித்திருந்தன. இங்கிலாந்திலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட நவீன க்ரூப் (Krupp) ஜெர்மன் பீரங்கிகள் பொருத்தப்பட்ட ட்ரெட்நாட் (Dreadnought) எனப்படும் நாசகாரிக் கப்பல்களைக் கொண்ட சீனப் படை கோழைத்தனத்தாலும், ஊழலினாலும், குழப்பமான அரச கட்டளைகளாலும் ஜப்பானிடம் தோற்றிருந்தன. யாலு நதிச் சண்டை (Yalu River Battle, Yellow Sea) என்று குறிப்பிடப்படும் இது ஜப்பானியப் பேரரசின் கடற்போர்களுக்குள் தலைசிறந்த வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  இதற்கு முதல் நாள் தான் கொரியாவில் சீனத் தரைப்படைகள் ஜப்பானிடம் தோல்வியுற்றிருந்தன. சில காலம் தனது மேலாண்மைக்கு உட்பட்ட பகுதியாக ஜப்பானைத் தன் வசம் சீனா வைத்திருந்தாலும், கடலால் சூழப்பட்ட ஜப்பானும், அதன் கப்பல் படைத் திறமையும், பூகோளமும் வியட்நாமையும், கொரியாவையும் ஆளச் சீனாவிற்குத் துணைபுரிந்ததைப் போல ஜப்பான் விஷயத்தில் சீனாவிற்குத் துணை புரியவில்லை. இவற்றாலெல்லாம், ஜப்பானியர்கள் தங்களைச் சீனர்களுக்கு நாம் சற்றும் இளைத்தவர்களில்லை என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார்கள்.


19ம் நூற்றாண்டின் ஜப்பான்-சீன உறவுகள்

ஹான் சீனாவைப் போலவே மன்னர்களால் பன்னெடுங்காலம் ஆளப்பட்ட ஜப்பான், 17ம் நூற்றாண்டில் டோக்குகவா ஷோகுநேட் (Tokugawa Shogunate) எனும் சாமுராய்  வீரர்களிடம் வீழ்ந்தது. சீனாவில் மிங் பேரரசர்கள் ஒரு கட்டத்தில் எவ்வாறு பன்னாட்டு வணிகத்துக்குத் தடை விதித்தார்களோ, அதை விடக்  கடுமையாக சாமுராய் ஷோகன் (Samurai Shogun) ஆட்சியாளர்கள் 1630ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டுக் கப்பல்கள் ஜப்பானியத் துறைமுகங்களுக்கு வருவதைத் தடை செய்திருந்தனர். 19ம் நூற்றாண்டில் பசிஃபிக் பெருங்கடலில் அமெரிக்கக் கடற்படை ஆதிக்கத்தை நிலை நாட்டத் துவங்கியிருந்தது. புகழ்பெற்ற அமெரிக்கக் கடற்படைத் தளபதி மாத்தியூ பெர்ரி (Mathew Perry) 1853ல் தன் கப்பற்படைகளுடன் ஜப்பான் சென்று துறைமுகங்களைத் தனது படைகளுக்குத் திறக்க ஆணையிட்டார். அதற்குப் பயந்து அனுமதியளித்தது ஜப்பான் ஷோகன் அரசு. ஆனால், அமெரிக்கப் படைகளின் புதுமைகளைக் கண்ட ஜப்பானியர்கள் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு வளர முனைந்தனர். 1858ல் அமெரிக்கா-ஜப்பான் வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகியது. உடனே, மற்ற ஐரோப்பிய நாடுகளும் அவ்வாறே ஜப்பானுடன் செய்துகொண்டன. 1867ல் ஷோகன் அரசுக்கு எதிராக எழுந்த போஷின் உள் நாட்டுப் போரில் (Boshin Civil War), கடைசி ஷோகன் அரசர் டோக்குகாவா யோஷிநோபு  (Tokugawa Yoshinobu) ஆட்சிக் கட்டிலிலிருந்து அகன்றார். ஏழு நூற்றாண்டுகள் ஆண்ட சாமுராய் வீரர்கள் (12ம் நூற்றாண்டிலிருந்து, அவர்களின் ஒரு பிரிவுதான் டோக்குகவா ஷோகுநேட்)அரசு நீங்கி,  1869ல் பெண் சூரியக் கடவுளான அமட்டேரசு ஓமிகமி யின் (Amaterasu Omikami) வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்ளும் பண்டைய  மன்னராட்சி மீண்டும் துவங்கியது. ‘மெய்ஜி’ (Meiji) என்று குறிப்பிடப்படும் அந்த மன்னர் பெயரில் அவர் ஆண்ட காலம் ‘மெய்ஜி மீட்புக் காலம்’ (Meiji Restoration) என்று அறியப்படுகிறது.


உள் நாட்டுப் போரில் உயிர் நீத்தவர்களின் நினைவாக மெய்ஜி அரசரால் அமைக்கப்பட்டதுதான் புகழ்பெற்ற யாசூகூனி (Yasukuni) ஆலயம். ஜப்பானியர்களின் ஷிண்டோ (Shinto) மத முறைப்படி இங்கு நீத்தாரின் ஆவி (kami) இருப்பதாக நம்பப்படுகிறது. ஜப்பானுக்காக உயிர் நீத்த கிட்டத்தட்ட இருபத்தைந்து லட்சம் ஜப்பானியர்களை இந்த ஆலயம் கௌரவிக்கிறது. பின்னர் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின், ஜப்பானிய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட பன்னாட்டு ராணுவத் தீர்ப்பாயம் (International Military Tribunal) மூலம் போர்க் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்ட 14 உயர் (Class-A) ஜப்பானிய ராணுவ அதிகாரிகளும் இங்கு மதகுருக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.  அதனால் ஜப்பானியப் பிரதம மந்திரியோ, பேரரசரோ இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்வதைச் சீனா பலமாக எதிர்க்கிறது. தான் சார்ந்த ‘தாராள ஜனநாயகக் கட்சி’யின் (LDP) மற்ற தலைவர்களைப்  போலவே, ஷின்ஜோ அபேயும் யாசூகூனி ஆலயத்திற்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆண்டிற்கொரு முறை 14 உயர் (Class-A) இரண்டாம் உலகப் போர் ஜப்பானிய ராணுவ அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஒரு முறை வாழ்த்தும் அனுப்பினார். அவர்களை ஜப்பான் நாட்டின் அடித்தளம் என்றார். இந்த ஆலயம் இன்று ஜப்பான்-சீன உறவின் பதற்றத்திற்கு இன்னொரு காரணம்.


ஜப்பான் புரட்சிகரமான பெரு வளர்ச்சி அடைய வித்திட்டது ‘மெய்ஜி காலம்’. கடந்த முப்பது ஆண்டுகளில் நம் கண் முன்னே சீனா அடைந்த வளர்ச்சிக்கு ஒப்பானது ஜப்பானின் ‘மெய்ஜி காலம்’. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்குள் (1885-1899) ஜப்பானின் மொத்த தேசிய உற்பத்தி 3 மடங்கு அதிகரித்தது. பொருளாதார வலிமை மிக்க நாடாகக் குறுகிய கால கட்டத்தில் ஜப்பான் மாறியது. சீனாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எப்படி அமெரிக்காவும், ஜப்பானும் இருபதாம் நூற்றாண்டில் அடித்தளமிட்டனவோ, அதற்கொப்பானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் ஜப்பானிய உதவி. இன்றைய சீனாவைப் போலவே, உற்பத்தித் துறையைப் பெருமளவு வளர்த்து உலகிற்கு ஏற்றுமதி செய்தனர் ஜப்பானியர்களும். மற்றொரு ஒப்புவமை என்னவெனில், எப்படி அடுத்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா எதிர்க்கிறதோ, அதைப் போலவே சுமார் நாற்பதாண்டுகளில் ஜப்பானும் அமெரிக்காவை எதிர்த்து சண்டையிட்டது. 1941 பேர்ல் துறைமுகத் (Pearl Harbour) தாக்குதலும், பின்னர் 1945ல் அமெரிக்கா ஜப்பான் மீது பயன்படுத்திய இரண்டு அணு ஆயுதங்களும் உலக வரலாற்றில் அசாத்தியமான நிகழ்வுகள்.


பத்தொன்பதாம்  நூற்றாண்டின் இடையில் புவியரசியலில் (geopolitics) பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. போதைப் பொருள் அபின் இறக்குமதிக்குத் தடை விதித்ததை எதிர்த்து பிரிட்டிஷ் படைகள் சீனப் பேரரசுடன் இருமுறை ‘அபின் போர்கள்’  (Opium Wars) நடத்தி வெற்றி கொண்டிருந்தன (1839-42, 1856-60). ஃபிரான்ஸ் தேசமும்,  சார் (Tsar) மன்னர்கள் ஆண்ட ரஷ்யாவும் பிரிட்டனுடன் சேர்ந்து கொண்டன. ஹாங்காங் தீவு பிரிட்டன் வசம் வந்தது. கிழக்கில் ஒரு கடற்கரைப் பகுதியை ரஷ்யாவிடம் சீனா ஒப்படைக்க வேண்டியதாயிற்று. அங்கு ‘வ்ளாடிவோஸ்டாக்’ (Vladivostok) என்ற துறைமுக-நகரை ரஷ்யர்கள் நிர்மாணித்தனர். ரஷ்யப் பேரரசு இவ்வளவு நெருங்கி வந்ததால், ஜப்பானுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் சீனாவின் தலைவிதியையும் மாற்றியதைப்  பின்னால் பார்ப்போம். 1860ல் பிரிட்டனும், ஃபிரான்சும் சேர்ந்து இன்றைய பெய்ஜிங்கைப் பிடித்துப் பேரரசரின் கோடைக்கால அரண்மனையைச் (Yuánmíng Yuán) சூறையாடின. ஜப்பானைச் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த பெரும் புவியரசியல் மாற்றங்கள் ஜப்பானுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்தன.


இவற்றிற்கிடையில், தனது பாதுகாப்புக்கு இருக்கும் பெரும் அச்சுறுத்தல், கொரியத் தீபகற்பத்தைத் தன் ஆளுமையின் கீழ்க் கொண்டுவந்தால்தான் நீங்கும் என்று ஜப்பான் நினைத்தது. அத்தகைய எண்ணம் ஜப்பானியர்களுக்குப் பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. 1592யிலேயே ஜப்பான் சீனாவைப் பிடிப்பதற்கு கொரியாவின் மேல் படையெடுத்தது. டைம்யோ (daimyo) என்று அழைக்கப்படும் ஜப்பானின் ஷோகன் சிற்றரசர் ஹிடேயோஷி (Hideyoshi), சாமுராய் வீரர்களுடன் கொரியத்  தீபகற்பதைப்  பிடித்து, அங்கிருந்து ஜப்பானைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தார். 1598 வரை விட்டுவிட்டு நடந்த இந்தப் போர் யாருக்கும் வெற்றி-தோல்வியின்றி சமநிலையில் (stalemate) முடிந்தது. அப்போது  கொரியா, சீனாவிற்குக் கப்பம் கட்டும் நாடாகத்தான் இருந்தது. எனவே, சீன ஆபத்தைப் போக்குவதற்கு ஜப்பான் சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. ஜப்பானின் தெற்கிலுள்ள ஒகினாவா தொடங்கி சென்காகு தீவுகள் வரை நீண்டிருந்த ரயுகயு முடியரசு (Ryukyu Kingdom) சீனப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாகப் பல நூறு ஆண்டுகள் இருந்துள்ள பொழுதிலும், சீனாவிற்குத் தெரியாமல் 1609ம் ஆண்டிலேயே ரயுகயு முடியரசு ஜப்பானியப் பேரரசின் கீழ் வந்துவிட்டது. இது 270 ஆண்டுகள் சீனப் பேரரசுக்குத் தெரியாது.  சரியான தருணம் வாய்த்தபோது, 1879ம் ஆண்டு வெளிப்படையாக ரயுகயு முடியரசைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது ஜப்பானியப் பேரரசு. மிகப் பெரிய ராஜ தந்திரமாக ‘உறு மீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கைப் போல’ ஜப்பான் பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டது.


1885ல் கொரியாவில் ஆரம்பித்த கிளர்ச்சிகளை அடக்கும் சாக்கில் 1895ல் ஜப்பான் தன் படைகளை அங்கு அனுப்பியது. அவை சீனப் படைகளுடன் மோதி  சீனாவைத் தோற்கடித்தன. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் யாலு நதிச் சண்டையில் (Yalu River Battle) பெரும் வெற்றி பெற்றிருந்த ஜப்பானியப் படைகள், பெப்ரவரி 1895ல் நடந்த வெய்ஹாய்வெய் (Weihaiwei) துறைமுகப் போரிலும் பெரும் வெற்றியடைந்தன.


ஜப்பானியக் கடற்படை வடக்கிலுள்ள லியாவோனிங்  (Liaoning) பிரதேசத்தில் அமைந்துள்ள லியாவ்டுங் (Liaodong) தீபகற்பத்தையும், தெற்கிலுள்ள ஷாண்டோங் (Shandong) தீபகற்பதையும் கைப்பற்றியபடியால், நடுவிலுள்ள தலைநகர் பெய்ஜிங் மீது கத்திரித் தாக்குதல் (pincer attack) நடத்தக்கூடும் என்கின்ற பயத்தினால் ஜப்பானிடம் 1895ல் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டது சீனப் பேரரசு. இதற்கு  ஷிமோனோசெகி ஒப்பந்தம் என்று பெயர். 1895ல் கையெழுத்தான ஷிமோனோசெகி (Shimonoseki) ஒப்பந்தத்தின்படி, கொரியாவைத் தனது ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுவித்து அதற்கு முழு சுதந்திரம் கொடுக்கவும், ஃபார்மோசாவையும் (Taiwan ), லியாவ்டுங் (Liaodong) தீபகற்பத்தையும் அதிலிருந்த டாலியான் துறைமுகத்தையும் என்றென்றைக்கும் ஜப்பானுக்கு அளிப்பதாகவும், பல சீனத் துறைமுகங்களை ஜப்பானுக்கு வர்த்தகம் செய்யத் திறந்துவிடுவதாகவும், ஜப்பானைத் தனது ‘மிக விருப்பமான வர்த்தக  நாடாக’ (Most Favored Nation) அறிவிப்பதற்கும் சீனா ஒத்துக் கொண்டது. அதன்படிப் பார்த்தாலும் ரயுகயு தீவுத் தொடர் ஜப்பானுக்குச் சொந்தமாகிறது. ஆனால், இன்று, வழக்கம் போல சீனாவோ ஷிமோனோசெகி ஒப்பந்தம் தன் மீது திணிக்கப்பட்டதாகக் கூறுகிறது. 1895ம் ஆண்டு வெற்றி, ஜப்பானைப் பற்றிய உலகக் கணிப்பை வெகுவாக உயர்த்தியது ஏனெனில் சீனாவுடன் ஒப்பிடுகையில் ஜப்பான் மிகச் சிறியது. சீனப் படைகள் மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்தன.


இதற்கிடையில், 1884ல் ஒரு அரை நாள் போரில் சீனாவின் தெற்குக் கடற்படையான நன்யாங் படையை  (Nanyang Naval Fleet) ஃபிரான்ஸ் நிர்மூலமாக்கியிருந்தது. வியட்நாம் சீனர்களிடமிருந்து கை நழுவி ஃபிரான்ஸ் வசமாயிற்று. ஜப்பானியர்களிடம் அடைந்த தோல்வி, சீனப் பேரரசில் பல மாற்றங்களைத் தோற்றுவித்தது. உதாரணமாக, அரசு அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கப் பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்த கடினமான தேர்வு முறை அகற்றப்பட்டது. காங்க் யூவெய் (Kang Youwei) மற்றும் லியாங் சிசவ் (Liang Qichao) என்ற இரு அறிஞர்கள் இம்மாற்றங்களுக்கு அடித்தளமிட்டனர். முற்போக்கு எண்ணம் கொண்ட மெய்ஜி பேரரசர், ஜப்பானில் அரசியலமைப்புச் சட்டத்தையும், பாராளுமன்றத்தையும் நிறுவி, குடியரசை அமுல்படுத்திய முதல் ஆசிய நாடு என்கிற பெருமையையும் பெற்றார். இவை சீனாவிலும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின. அதிலிருந்து தோன்றிய சீன சிந்தனையாளர்கள்தான் காங்க் யூவெய், மற்றும் லியாங் சிசவ். ஆனால், நூறு நாட்களே நடைபெற்ற இந்த சீர்திருத்தங்கள் (Hundred Day Reforms) தோல்வியில் முடிந்தன, பேரரசர் குவாங்சு (Guangxu) சிறையிலடைக்கப்பட்டு அவரது தாய்ப் பேரரசி எஹனாரா ஸிசீ  (Dowager Empress Yahanara Cixi) அதிகாரத்தைக் கைப்பற்றினார். ஜப்பானிடம் அடைந்த தோல்வியே, சிங்க் (Qing) பேரரசுக்கு எதிராக 1911ல் நடைபெற்ற சீனப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.


1895ம் ஆண்டுக்குத் திரும்புவோம். ஆனால், ஜப்பானுக்கு கிடைத்த லியாவ்டுங் (Liaodong) தீபகற்பத்தை ஆறே நாட்களுக்குள் சார் மன்னர்கள் ஆண்ட ரஷ்யா, மேற்கத்திய நாடுகளான ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றின் அச்சுறுத்தல் துணையுடன், ஜப்பானியர்களிடமிருந்து எடுத்துக் கொண்டது. இது ஜப்பானியர்களைக் கொதிப்படையச் செய்தது. கொரியா தனக்கு இடைத்தாங்கு (buffer) பகுதியாக இருக்கவேண்டும் என்பது ஜப்பானின் நீண்டகால எண்ணம். 1900மாவது ஆண்டு மஞ்சூரியாவுக்குள் புகுந்த ரஷ்யப் பேரரசு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தங்களது செல்வாக்குள்ள பகுதிகளைச் (spheres of influence) சமாதானமாக வரையறுத்துக்கொள்ளலாம் என்று பலமுறை கூறியும், தங்களது பேரரசை விரிவாக்கும் முயற்சியில் இருந்த ரஷ்யர்கள் ஜப்பானின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. தெற்கு ஆசியாவில் தன் ஆட்சியை ரஷ்ய சார் பேரரசர்கள் எவ்வாறு விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனரோ (‘பெரும் ஆட்டம்’, Great Game, என்று பெயர் பெற்றது) அதைப் போலவே, தனது கிழக்கிலும் அவர்கள் அவ்வாறே செய்து கொண்டிருந்தார்கள். இங்குதான் ரஷ்யப் பேரரசின் வளர்ச்சியைக் கவலையுடன் கவனித்து வந்த பிரிட்டன் ஜப்பானின் உதவிக்கு வந்தது. இதற்கிடையில், 1898ல் காரிபீயன் கடலில் (Caribbean Sea) நடந்த சண்டையில் ஸ்பெயினை அமெரிக்கா தோற்கடித்ததால் ஸ்பெயின் ஆளுமையின் கீழிருந்த பிலிப்பைன்ஸ் தீவுகள் அமெரிக்கா வசம் வந்தன. மேற்கு பசிஃபிக்கில் முழு ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கிய அமெரிக்கா, சீனாவுக்கும், ஜப்பானுக்கும் அவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது.


இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஜப்பான்-சீன உறவுகள்

மஞ்சூரியாவை ரஷ்யர்கள் கைப்பற்றியது ஜப்பானின் பாதுகாப்பு அச்சத்தை மேலும் அதிகரித்தது. ரஷ்யா, ஜப்பானியர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அன்றிலிருந்து இன்று வரை இருக்கிறது. குறில் தீவுகள் (The Kuril Islands) தொடர்பான எல்லைத்தாவா இன்றும் இரு நாடுகளுக்குமிடையே தொடர்கிறது. எனவே, 1904ல் ஜப்பான் மிகத்  துல்லியமாகத் திட்டமிட்டு மஞ்சூரியாவின் போர்ட் ஆர்தர் (Port Arthur) துறைமுகத்தின் (இன்றைய டாலியான், Dalian) மீது திடீர்த் தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் நடந்த இப்போரில் ரஷ்யாவையும் தோற்கடித்து, மஞ்சூரியாவை மீட்டது. சைபீரியாவைத் தாண்டி வரும் ரயில் பாதை (Trans-Siberian Railway) கட்டப்பட்டிருந்தும், பால்டிக் கடலிலிருந்து (Baltic Sea) பெரும் ரஷ்யக் கப்பற்படை ஜப்பானுக்கு அனுப்பப்பட்டிருந்தும் ரஷ்ய சார் பேரரசு பெரும் தோல்வியைச் சந்தித்தது. 1910ல் ஜப்பான் கொரியா தீபகற்பத்தைக் கைப்பற்றியது. இப்போது ஜப்பான் மிகப் பெரும் ராணுவ சக்தியாக உருவெடுத்தது. முன்பு, மேற்கத்திய நாடுகள் மஞ்சூரியாவை மீட்க ரஷ்யாவிற்குத் துணை போனதால், அவர்களின் மேல் ஜப்பானுக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது. 1941ல் ஜப்பான் அசாத்தியமாக நடத்திய பேர்ல் துறைமுகத் (Pearl Harbour) தாக்குதலுக்கு இதுவும் ஒரு பெரும் காரணம். சீன, கொரிய, ரஷ்யப் போர்களிலிருந்து  ஜப்பான் கற்றுக்கொண்ட பாடமான எதிர்பாராதபோது தாக்குவது, முதலில் தாக்குவது, பெருமளவில் தாக்குவது போன்றவை பின்னர் இத்தாக்குதாலுக்கு அடித்தளமிட்டன

இதற்கிடையில், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹான் இன மக்களிடையே சிங் (Qing) பரம்பரைக்கெதிராக வெறுப்புத் தோன்ற ஆரம்பித்தது. முதலில், அவர்கள் அந்நியர்கள், இரண்டாவது ஜப்பானியர்களிடம் அடைந்த தோல்வி, மூன்றாவதாக அவர்களால்தான் காலம் காலமாகத் தங்களுக்குக் கப்பம் கட்டிவந்த நாடுகளான கொரியாவும், ரயுகயுவும், அன்னமும் (Annam, Chinese name for Vietnam)  கை நழுவி முறையே ஜப்பானிடமும், ஃபிரான்சிடமும் சென்றுவிட்டதாக ஏற்பட்ட எண்ணம். 1912ல் சுன் யாட்-சென் போன்றவர்கள் துவக்கிய இரகசிய சீன எதிர்ப்பாளர்கள் அமைப்பு, ‘டாடர் (Tatar)  இனத்தைச் சேர்ந்த மஞ்சுக்களை (Manchu) விரட்டி, சீனாவைச் சீனர்கள் கைப்பற்ற வேண்டும்’ (quchu dalu, haifu zhonghua) என்று முழக்கமிட்டது. இதில் ஹாலு (dalu) என்பது மஞ்சுக்களை இழிவாகக் குறிக்கும் சீனச் சொல். லியாங் சிசவ், ஜப்பானிலும், அமெரிக்காவிலும் இருந்து கொண்டு, தனது கட்டுரைகள் மூலம் புதிய விழிப்புணர்வைத் தோற்றுவித்து வந்தார். எவ்வாறு, தம் நாட்டிற்கு ஒரு பெயர் இல்லை (சீனா என்பது வெளிநாட்டினர் வைத்தது, மற்றப்படி மிங், சிங், டாங் – Ming, Qing, Tang – என்று பரம்பரைகள் பெயராலேயே நாடு குறிப்பிடப்பட்டது, உதாரணமாக, சிங் பரம்பரை ஆட்சியின்போது சீனா Da Qing Guo, அதாவது ‘சிறந்த சிங் பேரரசு’ என்றே அழைக்கப்பட்டது), தேசம்-குடும்பம் (guo, jia) என்கிற அமைப்பை மாற்றி தேசம்-மக்கள் (guo, min) என்று கொண்டு வந்தால்தான் நாடு இழந்த பெருமையை மீட்க முடியும் என்றெல்லாம் கூறினார். இவற்றாலெல்லாம், குடியாட்சி (republicanism) வலுப்பெற ஏதுவாயிற்று. சீனா பெருமை இழந்ததற்கு ஜப்பானே பெரும் காரணம் என்று மக்கள் நம்பினர். ஜப்பானால்தான் ”சீனப் பேரரசர் சுவர்க்கத்தின் கீழுள்ள எல்லாவற்றிற்கும் பொறுப்பாளர்’ (tianxia) என்கின்ற தத்துவத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டது என்று ஹான் சீனர்கள் எண்ணினர்.


1912ல் சீனாவில் குடியாட்சி முறை தோன்றியது. 1914ல் வெடித்த முதலாம் உலகப் போரின் போது, ஜெர்மானியர்கள் ஆளுமையின் கீழ் வட கிழக்கு சீனாவில் இருந்த டியான்ஜின், கியாவுட்சூ வளைகுடா (Kiautschou Bay, Shandong பிரதேசம்) ஆகியவற்றை பிரிட்டனுடனும், ஃபிரான்சுடனும் சேர்ந்து, ஜப்பான் கைப்பற்றி, ஜப்பான் சீனாவிற்கு 21 கோரிக்கைகளை வற்புறுத்தி எச்சரிக்கை விடுத்தது. சிங் பரம்பரையின் (Qing Dynasty) குழப்பமான இறுதி நாட்களாலும், அந்நிய ஆக்கிரமிப்பினாலும், சீனத் தளபதி யுவான் ஷிகாயின் தோற்றுப்போன ‘அரசியலமைப்புப் பேரரசு’ (Constitutional Monarchy) ஆட்சி முறையினாலும் மிகவும் நலிவடைந்திருந்த சீனா அதற்கு அடிபணிந்தது. அவை ஜப்பானுக்குப் பல சலுகைகளைச் சீனாவில் பெற்றுத் தந்தன. இது சீனாவில் ஜப்பானின்  மீதான கசப்புணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது. முற்றுப்பெற்ற முடியாட்சியாலும் மற்றும் சில காலமே ஆகியிருந்த குடியாட்சி முறையாலும் வெறுப்படைந்திருந்த சீன மக்கள் கம்யூனிஸப் புரட்சிக்குத் தயாரானவர்கள் என்று சீனாவில் சில இளம் கம்யூனிஸ்டுகள் நம்பினர். சோவியத் யூனியனின் ‘கோமின்டெர்ன்’ (Komintern) என்கிற உலகளாவிய கம்யூனிச அமைப்பின் உதவியுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை 1921ல் அவர்கள் தொடங்கினார்கள். ஆரம்பத்தில், கோமின்டெர்ன் கட்டளைப்படி, குவோமின்டோங் மக்கள் கட்சியுடன் (Kuomintang/Guomindang) சேர்ந்து அவர்கள் செயலாற்றினாலும் 1929 வாக்கில் அதிபர் சியாங்-கெய் ஷெக் கிற்கும் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இடையில் சித்தாந்த ரீதியாகப் பிளவு ஏற்பட்டது. சமயம் பார்த்துக்கொண்டிருந்த சியாங் கெய்-ஷெக் கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்.


இதற்கிடையில்,  1934ல் ஜப்பான் பேரரசர், சீனா எந்த முடிவெடுத்தாலும் ஜப்பானைக் கலந்தாலோசித்துத்தான் முடிவெடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது மாசேதுங்கின் கம்யூனிஸ்டுக் கிளர்ச்சியாளர்களும் சீனாவை ஆண்டு கொண்டிருந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த குவோமிண்டாங் ஆட்சியாளர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்ததால், சீனாவின் பல பகுதிகள் 1937ல் சுலபமாக ஜப்பானியக் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இது இரண்டாவது சீன-ஜப்பானிய யுத்தம் என்றழைக்கப்படுகிறது. ஏற்கெனவே 1895லும், 1904லும் கைப்பற்றியிருந்த வட-கிழக்கு சீனப் பகுதிகளான லியாவ்டாங், ஷென்யாங் (Shenyang) மற்றும் பழைய மஞ்சு தலைநகரான முக்டேன் (Mukden)  தவிர மஞ்சூரியாவை 1931ல் ஜப்பான் முழுமையாகக் கைப்பற்றி ஆறு வயது சிங் பேரரசராகத் தனது ஆட்சியை 1911ம் ஆண்டு துறந்திருந்த ‘புயி’ (Puyi) மன்னரை மஞ்சூரியாவிற்கு மன்னராக ஒரு யுக்தியோடு நியமித்தது. 1937 டிசெம்பரில் நான்ஜிங்கில் (Nanjing) மூன்று லட்சம் சீனர்களைக் கொன்று படுகொலையை ஜப்பானியப்  படைகள் நடத்தின. அதனால், வேறு வழியின்றி குவோமிண்டாங், சீனக் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து ஜப்பானை எதிர்க்க ஆரம்பித்தன. இது பெரும் போராக மாறியது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துச் சீனாவிற்குப் பெரும் மறைமுக ஆதரவு அளித்தது.


1938ல் ஜப்பானியப் பேரரசின் ராணுவம் தென் சீனக் கடலின் ஸ்ப்ராட்லீ (Spratly) தீவையும் பின் ஹைனன் (Hainan) தீவையும் பிடித்தன. 1940ல் சீனப் படைகள் முழுத் தோல்வியைத் தழுவும் நிலைக்குத் தள்ளப்பட்டன.  ஆயினும் குவோமிண்டாங்-கம்யூனிஸ்டுப் படைகள் எப்படியோ சமாளித்தன. 1940 முதல் 1945 வரை சீனப் படைகளுக்கு அமெரிக்கா, இந்தியாவின் வட கிழக்கு வழியாக ராணுவ உதவிகளை அளித்தது.  கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் ஜப்பான் கைக்குள் வரும் நிலை இருந்தது. ஜப்பானியர்களும், சீனர்களும் ஒருவரை மற்றொருவர் தங்களை விடக் கீழினத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதினர். இது போன்ற எண்ணம் மறைமுகமாக இன்றளவும் தொடர்கிறது. இந்தப் போரில் இறுதிவரை சீனர்களால், குறிப்பாக மாவோவின் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிப் படைகளால், ஜப்பானியர்களுக்கெதிராக எந்த வெற்றியையும்  பெற முடியவில்லை. ஹிரோஷிமாவும் (Hiroshima), நாகசாகியும் (Nagasaki) அணு ஆயுதங்களால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஜப்பானியர்கள் அமெரிக்காவிடம் சரணடைந்து சீனாவை விட்டு ஆகஸ்ட் 15, 1945 அன்று அகன்றார்கள்.


1609ம் ஆண்டில் ரயுகயு முடியரசைத் தன் வசம் கொண்டு வந்ததே பின்னாளில் சீனப் பேரரசைத் தோற்கடித்து அதன் இடத்தில் தான் வர வேண்டும் என்கிற ஜப்பானின் எண்ணமே என்றும் கருதப்படுகிறது. ஒரு விதத்தில், ரயுகயு முடியரசின் அஸ்தமனம், சீனப் பேரரசின் அஸ்தமனத்திற்கும் வழி வகுத்தது என்று கூறலாம். ஜப்பான்-சீன உறவின் பண்பாட்டுக் (civilizational) கசப்புணர்ச்சி இவ்வாறு சுமார் இரண்டாயிரம் வருடங்கள்  வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டது.


1979க்குப் பிறகு

1972ல் அமெரிக்காவின் தலையீட்டால் இரு நாட்டு உறவுகளும் சீர்படத் துவங்கிய பிறகு, இரு நாட்டின் முக்கியத் தலைவர்களும் அடிக்கடி சந்திக்கத் துவங்கினர். அது வரை, ஜப்பானியப் படைகளினால் ஏற்பட்ட அழிவுக்கு ஜப்பானிடமிருந்து இழப்புத் தொகை கேட்டு வந்த சீனா அதைக் கைவிட்டது. இரண்டாவது உலக யுத்தத்தினால் ஏற்பட்டிருந்த மனக்கசப்பை 1978ல் செய்து கொண்ட ‘சமாதான மற்றும் நட்புறவு ஒப்பந்தம்’ (Peace and Friendship Treaty) மூலமாக இரு நாடுகளும் ஒரு முடிவுக்கு கொணர்ந்தன. 1979ல் இரு நாடுகளும் ‘கலாச்சாரப் பரிவர்த்தனை ஒப்பந்தம்’ (Japan-China Cultural Exchange Agreement) செய்துகொண்டன. 1982ல் ஜப்பானுக்கு விஜயம் செய்த சீனப் பிரதமர் ஜாவோ ஜியாங் (Zhao Ziyang) மூன்று கொள்கைகளான ‘சமாதானம் மற்றும் நட்புறவு, சமத்துவம் மற்றும் பரஸ்பர ஆதாயம், மற்றும் நீண்டகால உறுதியான உறவு’ ஆகியவற்றின் அடிப்படையில் ஜப்பான்-சீன உறவு அமைந்திருக்கும் என்றார். 1989 டியானென்மென் சதுக்க (Tiananmen Square) நிகழ்வுகளால் பின்னடைந்த உறவைச் சீர் செய்ய ‘ஏழு நாடுகள்’ (Group of Seven Nations, G-7) அமைப்பு ஜப்பானியப் பிரதமர் டோஷிகி கைஃபூ (Toshiki Kaifu) வைத் தான் சீனாவிற்கு அனுப்பியது. 1992ல் பேரரசி மிச்சிக்கோ (Michiko) வுடன் சீனாவிற்கு விஜயம் செய்த ஜப்பானியப் பேரரசர் அகிஹிடோ (Akihito), ‘இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஜப்பானியப் படைகள் சீனர்களுக்கு இழைத்த அல்லல்களுக்குத் தான் வருந்துவதாகத்’ தெரிவித்தார். கிட்டத்தட்ட 2 கோடி சீனர்கள் ஜப்பானியப் படைகளால் அப்போது கொல்லப்பட்டார்கள் அல்லது காயமுற்றார்கள். இது முறைப்படியான மன்னிப்பு கேட்பதாக அமையாவிடினும், ஜப்பான் அப்போது சீனாவிற்குத் தேவைப்பட்டதால், சீனர்கள் இதை ஊதிப் பெரிதாக்கவில்லை. இதற்கு முன், 2000 ஆண்டுகளில் எந்த ஜப்பானிய பேரரசரும் சீனாவிற்கு விஜயம் செய்ததில்லை. ஆனால், தற்போது அந்த வருத்தம் போதாது என்கிறது சீனா. இது இருநாட்டு உறவுகளையும் இன்றளவும் பாதிக்கும் ஒரு விஷயம்.


பேரரசர் அகிஹிடோவின் பயணத்திற்கு மறு  விஜயமாக சீன அதிபர் எவரும் அடுத்த ஆறு ஆண்டுகள் ஜப்பானுக்குச் செல்லவில்லை. ஆனால், 1998ல் அதிபர் ஜியாங் செமின் டோக்கியோ செல்வதற்கு முன்னால், வருத்தம் தெரிவிக்கும் கடிதம் ஒன்று ஜப்பான் சீனாவிற்கு எழுத வேண்டுமென்று சீனா பலமாக ஜப்பானை வற்புறுத்தியது. அதற்கு ஜப்பான் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், பயணத்தின் முடிவில் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட  அதிபர் ஜியாங் செமின் மறுத்தார். இது ஜப்பான் அரசுக்கு உணர்த்திய பாடம் என்னவென்றால் சீனாவிற்கு எந்தச் சலுகையும் காட்டக்  கூடாது என்பது.


1989 டியான்அன்மன் சதுக்கப் படுகொலைகளுக்குப் பிறகு பதவிக்கு வந்த அதிபரான ஜியாங் செமின் (Jiang Zemin) ‘நாட்டுப்பற்றைப் பாடப் புத்தகங்களில் கட்டாயமாக்கினார். அப்போதிலிருந்து தொடங்கியதுதான் ‘அவமானகரமான நூற்றாண்டு’ என்பதும் அதற்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமும். எனவே, ஜப்பானிய ஆட்சியின் அடக்குமுறைகளும், படுகொலைகளும் பாடப் புத்தகங்களில் சிறப்பாக இடம் பெற ஆரம்பித்தன. தேசப்பற்று மிகுந்த ஜூனிச்சிரோ கோயிஸுமி ஆட்சிக் காலத்தில் (2001-2006) இவை நடைபெற்றபோது, இரு நாடுகளுக்குமிடையில் உறவில் விரிசல் கண்டது.


1993க்குள்ளாக ஜப்பான் சீனாவின் தனிப்பெரும் வர்த்தகக் கூட்டாளி ஆயிற்று.  ஜப்பான் 1990களில் 10 பில்லியன் டாலர் முதலீட்டைச் சீனாவில் செய்திருந்தது. 1979ல் இருந்து ஜப்பானின் வெளிநாட்டு வளர்ச்சி உதவியைப் (Overseas Development Assistance, ODA) பெறும் நாடாக சீன 2018 வரை இருந்துள்ளது. இதன் மூலம் தனது உள் கட்டமைப்பு வசதிகளைப்  பெருக்கிக் கொள்ள  சீனா 32 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு நிதியுதவி பெற்றுள்ளது. 1997ல் ஜப்பானுக்கு விஜயம் செய்த சீனப் பிரதம மந்திரி லி பெங் (Li Peng)  ‘பஞ்சசீலக் கொள்கைகள்’ அடிப்படையில் உறவு அமையவேண்டும் என்று வற்புறுத்தினார். இதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால், தைவான் விவகாரத்தில் ஜப்பான் தலையிடக்கூடாது என்பதே. 1998ல் சீன அதிபர் ஜியாங் செமின் (Jiang Zemin) ஜப்பானுக்கு விஜயம் செய்ததை அடுத்து 2000 மாவது ஆண்டு  சீனப் பிரதமர் ஜு ரோங்ஜி (Zhu Rongji) விரிவான ஆறு நாள் பயணம் ஜப்பானுக்கு மேற்கொண்டார்.


இவையெல்லாம் ஒரு புறம் நடந்தாலும், அவ்வப்போது இரு நாடுகளுக்குமிடையில் சென்காகு தீவுகள் (Senkaku Islands), ஜப்பான்-அமெரிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், வர்த்தகம், 1937ல் நடைபெற்ற நான்ஜிங் படுகொலைகளுக்கு ஜப்பான்  அரசு தெரிவிக்க மறுக்கும் வருத்தம் போன்ற பல விஷயங்களில் உரசல்களும் நடந்து கொண்டே இருந்தன. 1990களில், மேம்பட்ட அமெரிக்க-சீன உறவின் காரணமாக அமெரிக்கா கண்டு கொள்ளாமல் விட்டதினால், பலவித அணு ஆயுத சோதனைகளைத் தனது லோப் நூர் (Lop Nor) மையத்தில் சீனா நடத்தியது, அணு ஆயுதங்களுக்கு எதிரான ஜப்பானில் சர்ச்சையை உண்டாக்கியிருந்தது. 1989 நிகழ்வுகளுக்குப் பிறகு தேசியத்தை பிரதானமாக அமைத்து சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி செயல் திட்டங்களை 1991ல் வடிவமைக்க ஆரம்பித்தபோது, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் இழைத்த தீமைகளை திரும்பத் திரும்பச் சீனர்களுக்கு நினைவூட்டியதால், ஜப்பானும் தனது தேசியவாதத்தை பலப்படுத்த (reinforce) ஆரம்பித்தது.


இரட்டை இக்கட்டு  – 2010 மற்றும் 2012

ஜப்பான்-சீனா கடல் எல்லை பல இடங்களில் 400 கடல் மைலுக்கும் குறைவாக இருப்பதால் (ஒரு நாட்டின் தனிப் பொருளாதாரப் பகுதி, அதாவது Exclusive Economic Zone, EEZ, ஒரு நாட்டின் கரையிலிருந்து 200 கடல் மைல்கள் நீள்கின்றன) அவை இரண்டும் மையத்தை எல்லையாக வரையறுத்துள்ளன. 2003ல் சீனா ஜப்பான் கடல் எல்லைக்கருகில் உள்ள தனது ச்ங்க்சியோ (Chunxiao) பகுதியில் எல்லையிலிருந்து வெறும் 5 கி. மீ. தூரத்தில் துறப்பணப் பணிகளை மேற்கொண்டபோது ஜப்பான் தனது பகுதிக்குள் அமைந்துள்ள எண்ணெய் வளத்தை சீனா உறிஞ்சுவதாகக் கூறியது. சீனா இதை நிராகரித்தபோது, அப்பகுதிக்கு ஜப்பான் தனது ஆய்வுக் கப்பலை அனுப்பியது. உடனே சீனா தனது போர்க்கப்பலையும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் அங்கு அனுப்பி ஜப்பானிய ஆய்வுக் கப்பலை இம்சித்தது. 2005ல் இரு சீன நாசகாரிக் கப்பல்களை (Destroyers) அங்கு நிலையாக நிறுத்தியது. 2006 வாக்கில், தேசியவாதத்தினால் அதுவரை பழுதடைந்த ஜப்பான்-சீன உறவுகள் சரிப்படும் வேளையில், இரு நாடுகளும் கிழக்கு சீனக் கடலில் எண்ணை மற்றும் வாயுத் துறப்பணப் பணிகளைக் கூட்டாகச் செய்வதாக முடிவெடுத்தன. 1980ல் இருந்தே, சீனா இதற்கு வற்புறுத்தியபோது, முதலில் சென்காகு தீவுகள் பிரச்சினையைத் தீர்த்தால்தான் இதில் முடிவெடுக்க இயலும் என்று கூறிவந்த ஜப்பான் 2006ல் ஆச்சரியமாகக் கூட்டு முயற்சிக்கு ஒப்புக்கொண்டது. சீனாவின் இடைவிடாத பலவந்தம் (coercion) இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். 2008ல் சுமார் 2700 சதுர கி. மீ. பரப்பளவுக்கு இரு நாடுகளும் கூட்டு முயற்சி மேற்கொள்ளுவதாகத் தீர்மானித்தன.


ஆனால், 2008ல் சேச்சுவான் (Sichuwan) மாகாணத்தில் நடந்த பூகம்பத்தினாலும், மாறி, மாறி ஆட்சிக்கு வந்த ஜப்பானியப் பிரதமர்களாலும் இந்த முயற்சி தடைப்பட்டு வந்தது. இவற்றிற்குச் சிகரமாக செப்டம்பர் 2010ல் சென்காகு தீவுக்கருகில் ஜப்பானின் ஆளுமை நீர்ப்பரப்பு பகுதியில் (territorial waters) மீன்பிடித்துக்கொண்டிருந்த சீன மீன்பிடிக் கப்பல் ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்டதை அடுத்து ஜப்பான்-சீன உறவுகள் மிக மோசமடைந்தன. தனது ‘உடனுக்குடன் தண்டனை’ என்கின்ற கொள்கையின் கீழ், அமைப்பு சாராக் கடற்படையினரின் 1000 டன் எடை கொண்ட கப்பல்கள் பலவற்றையும் அவற்றிற்குத் துணையாக  கடலோரக் காவல்படையையும் சென்காகு தீவுக்கருகில் சீனா நிலையாக இருக்கச் செய்ததால், வேறு வழியின்றி எரிச்சலடைந்த ஜப்பான் பிடித்த சீனப் படகை விடுவித்தது. இரு மாதங்களுக்குள் ஜப்பான்-சீனா-தென் கொரியா உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்ற போது, சீனக் கடற்படை தனது இரு போர்க்கப்பல்களை சென்காகு தீவுக்கருகில் பல மணி நேரங்கள் நிறுத்தி வைத்து ஜப்பானுக்கு சங்கடத்தை உண்டாக்கியது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எவ்வளவு தூரம் ஜப்பான்-சீன உறவுகள் சீர்கெடும் என்பதற்கு 2010 நிகழ்ச்சி ஒரு உதாரணம். இவற்றால், ஜப்பான்-அமெரிக்க பாதுகாப்பு உறவு மேலும் வலுப்பட்டது.


விரைவில் இன்னொரு பின்னடைவும் இரு நாடுகளின் உறவில் ஏற்பட்டது. இதுவும் சென்காகு தீவுகள் சம்பந்தப்பட்டது. 1895ல் ஷிமோனோசெகி ஒப்பந்தத்தின்படி ரயுகயு தீவுகள் தனக்குச் சொந்தமான பின் அதை ஓக்கினாவா உள்ளாட்சி மன்றத்துடன் (Okinawa Prefecture) இணைத்து அங்கு மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அனுமதியைத் தனியார் ஒருவருக்கு ஜப்பான் அளித்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1940ல் இத்தீவுகள் அமெரிக்க ஆளுமையின் கீழ் வந்தன. 1972ல் அமெரிக்காவிடமிருந்து ஹிரோயுகி குரிஹாரா (Hiroyuki Kurihara) என்ற ஜப்பானியர் வாங்கிக்கொண்டார். சீனாவில் அரசு மற்றும் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஏற்பாட்டில் உச்சமடைந்திருந்த ஜப்பானிய எதிர்ப்பினால், ஜப்பானியர்களும் சீனர்களுக்கெதிராக மிகுந்த கோபம் கொண்டு அதனால் பெருகி வந்த மக்கள் நெருக்கடியால், செப்டம்பர் 11, 2012ல் திடீரென ஜப்பான் அரசு மூன்று சென்காகு தீவுகளையும் அதன் உரிமையாளரிடம் இருந்து 26 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி, நாட்டுடைமை ஆக்கியது.


இது சீனாவை கொதிப்படையச் செய்தது. ஒரு வாரத்திற்குள், அதாவது செப்டம்பர் 18, 2012 அன்று சீனா 11 போர்க் கப்பல்களை சென்காகு தீவுக்கு அனுப்பியது. எண்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 18ம் தேதி அன்றுதான்  ஜப்பான் மஞ்சூரியாவைக் கைப்பற்றியிருந்தது என்பது வேறு சீன எதிர்ப்பைப் பெரிதாக்கியது. இது தற்செயலாக அமைந்தது என்றாலும் சீனா இரண்டையும் முடிச்சுப் போட்டது. சீனாவின் பல நகரங்களிலும் ஜப்பானிய எதிர்ப்பு சீன கம்யூனிஸ்டுக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. சீனாவில் அப்போது ஆட்சி மாற்றம் நடந்து கொண்டிருந்தது. அதிபர் ஹு ஜிண்டாவ் (Hu Jintao) பதவிக்காலம் முடிந்து துணை அதிபர் சி ஜின்பிங் பதவிக்கு வரும் ஏற்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், அதைச் சாதகமாக்கிக் கொண்டதாக சீனா ஆத்திரப்பட்டது. 1962ல் உலகின் கண்கள் அணு வல்லரசுகளான அமெரிக்க-சோவியத் நாடுகளின் பதட்டத்தின் மேல் இருந்தபோது அதைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தியா மீது சீனா போர் தொடுத்திருந்ததால் அத்தகைய யுத்தி இதுவும் என்று சீனா எண்ணியதில் வியப்பில்லை.


இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், 1971 ஏப்ரல் மாதம் தான் முதல் முதலாக தைவான் அரசு 1895ல் தான் இழந்த சென்காகு தீவுகளுக்குச் சொந்தம் கொண்டாடியது. அதே வருடம் டிசம்பர் மாதம் சீன அரசும் முதல் முதலாக சென்காகுவிற்குச் சொந்தம் கொண்டாடியது. 1970களிலிருந்து 1990கள் வரை, ஜப்பானின் முதலீடும், தொழில்நுட்பமும் சீனாவிற்குத் தேவைப்பட்டதால், டெங்ஷாவ் பிங், ‘சென்காகு தீவுப் பிரச்சினையை அடுத்த தலைமுறைகளுக்குத் தள்ளிப் போடலாம்’ என்று ஜப்பானிடம் கூறினார். இதுவே நம் இந்திய எல்லை பிரச்சினையிலும் சீனா கடைப்பிடித்த யுக்தி முறை. 2012 நிகழ்வுகளின் நீட்சியாக, 2013ல் சீனா கிழக்குச் சீனக் கடலில் சென்காகு தீவுகளை உள்ளடக்கி ‘ஆகாயப் பாதுகாப்பு அடையாளப் பகுதி’ (Air Defence Identification Zone, ADIZ) என்று ஒன்றை அறிவித்தது. இதனால், ஜப்பானின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா சென்காகு தீவுகளும் அமெரிக்காவின் ஜப்பானிய பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளதாக அறிவித்தது. இது போன்ற நிகழ்வுகளே அதிகரிக்கும் ஏணி (escalation ladder) என்று குறிப்பிடப்படுகின்றன. இந்தப் பதட்டம் குறைய ஓராண்டு ஆகியது. தைவானிலும் ஜப்பானுக்கெதிராகப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. சமீபத்தில், சீனாவின் இயற்கை வளங்கள் அமைச்சகம் (Ministry of Natural Resources) சென்காகு தீவுகளை செயற்கைக் கோள்கள் மற்றும் தொலை உணர்வு சாதனங்கள் மூலம் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ளது, ஜப்பானைக் கோபம் கொள்ள வைத்துள்ளது.


2009ல் சீனா, வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் (Purchasing Power Parity, PPP) பொருளாதாரத்தில் ஜப்பானை முந்தி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறியது. 42 ஆண்டுகள் தொடர்ந்து பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த ஜப்பான் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. நாம் பகுதி-2ல் பார்த்த சீனாவின் ‘உடனுக்குடன் தண்டனை’ என்கின்ற ஆதிக்க மனப்பான்மையினால், 2010ம் ஆண்டில், மீன்பிடிக் கப்பலினால் ஏற்பட்ட மோதலில், ‘அரிய மண்’ வகைகளை ஏற்றுமதி செய்வதற்குச் சீனா விதித்த தடையை எதிர்த்து ஜப்பான் உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization) போட்டிருந்த வழக்கில் பின்னர் 2015ல் உலக வர்த்தக அமைப்பு ஜப்பானுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.


ஜப்பானின் பாதுகாப்பும் சீனாவின் அச்சுறுத்தலும்

சில மாதங்களுக்கு முன் பதவியைத் துறந்த ஜப்பானியப் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே (Shinzo Abe) போன்றே, அந்தக் கால கட்டத்தில் (2001-2006) இருந்த ஜூனிச்சிரோ கோயிஸுமியும் (Junichiro Koizumi) ‘தாராள ஜனநாயகக் கட்சி’யைச் (Liberal Democratic Party, LDP) சேர்ந்தவரே. இவர்கள் இருவருமே தீவிர வலது சாரி தேசியவாதிகள். இருவருமே ஜப்பான் பாதுகாப்பில் அதிக நாட்டம் கொண்டவர்கள். யாசூகூனி ஆலயத்திற்குச் செல்வதை கோயிஸுமி வழக்கமாகக் கொண்டிருந்தார். இரண்டாவது உலகப் போரில் சரணடைந்த ஜப்பானுக்கு நேச நாடுகள் (Allies) விதித்த ஒரு நிபந்தனை ஜப்பான் தனது பாதுகாப்பிற்காக மட்டுமே படைகளை வைத்திருக்க வேண்டும், மற்ற நாடுகள்  மேல் தாக்குதலுக்காக அல்ல என்பது. இது ஜப்பானின் அரசியல் சாசனத்தில் 9வது ஷரத்தாக அமைந்துள்ளது. 1951ல் கையெழுத்தான அமெரிக்க-ஜப்பானிய ஒப்பந்தத்தின்படி ஜப்பான் ‘அமைதியை விரும்பும் நாடாக’ (pacifist) இருக்கும் என்றும், பாதுகாப்புக்கு அமெரிக்காவைச் சார்ந்து இருக்கும் என்றும் முடிவானது. இதனால், ஜப்பானியப் போர்ப்படைகள் மிகவும் வலுவிழந்தவையாக இருந்தன. மிகவும் வேகமாகத் தனது படை பலத்தைப் பெருக்கி வந்த சீனா, ஜப்பானின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்தது. கோயிஸுமி அரசு இதனால் கவலையடைந்தது. பின்னால் வந்த ஷின்ஜோ அபே மிகுந்த முயற்சிக்குப் பின் இந்த 9வது ஷரத்தை ஓரளவு மாற்றியுள்ளார்.


செப்டம்பர் 9, 2001 நடைபெற்ற அமெரிக்க இரட்டை கோபுர மற்றும் பென்டகன் (Pentagon) தாக்குதல்கள், அமெரிக்க-ஜப்பான் உறவை மேலும் வலுவடையச்  செய்தன. அப்போது ஜப்பானியப் பிரதமாராக இருந்த கோயிஸுமி, பாரசீக  வளைகுடாவிற்கு (Persian Gulf) ஜப்பானியக் கடல்சார் தற்காப்புப் படையை (Maritime Self Defense Forces) அமெரிக்க உதவிக்காக அனுப்பினார். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் ஒரு ஜப்பானியப் படை வெளிநாடு சென்றது அதுவே முதன் முறை. இது, போர்ப்படைகள் சம்பந்தப்பட்ட கடுமையான ஜப்பானிய அரசியல் சாசன சட்ட விதிகளைச் சிறிது, சிறிதாகத் தளர்த்த அடிகோலியது. இதனைச் சீனா விரும்பவில்லை. 2015ல் ஜப்பானின் தற்காப்புப் படைகள் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் கீழ் கூட்டுத் தற்காப்பில் ஈடுபடலாம் என்று அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது. இதன் விளைவாகவே,  மார்ச் 16, 2021ல் அமெரிக்காவின் புதிய  பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜப்பானுக்கு விஜயம் செய்தபோது சீனா தைவான் மீது ஆக்கிரமிப்பு நடத்தினால் ஜப்பான் எவ்வாறு அமெரிக்காவிற்கு உதவ முடியும் என்று விவாதித்தார்கள்.


சீனக் கப்பல் படையின் கடல் ஆய்வுக் கப்பல்கள், 2003ல், ஒகினாவா (Okinawa) தீவுக்கருகில் பலமுறை ஜப்பானியக் கடல் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன. நீர்மூழ்கிக் கப்பல்கள் பத்திரமாகப் பயணம் செய்யும் பாதையைத் தீர்மானிக்க இவை பயன்படும். ராணுவ விஷயங்களில் ஏற்பட்டுள்ள புரட்சிகளினால் (Revolution in Military Affairs), நீருக்கடியில் செல்லும் ஆளில்லாத ஊர்திகளை (uncrewed underwater vehicles, UUVs) அனுப்பித் தகவல்கள் மற்றும் தாக்குதல் நடத்தவும் பயன்படக்கூடிய தரவுகளை சேகரிக்க இந்த ஆய்வுக் கப்பல்கள் இன்றியமையாதவை. இதன் விளைவாக, 2003ம் ஆண்டு ஒரு ஹான்-ரக (Han-class) சீன அணு-உந்துவிசை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் (Ship Submersible Nuclear, SSN) ஜப்பானின் ஒகினாவா  தீவினருகில் உள்ள மியாகோ நீர்வழிப்பாதையில் (Miyako Straits) ஜப்பானுக்கு அறிவிக்காமல் ரகசியமாகக் கடந்து சென்றதைக் கண்டுபிடித்த ஜப்பான், சீனா மீது கடும் கோபம் கொண்டது. சீனக் கப்பல் படை மியாகோ நீர்வழிப்பாதையை ஒவ்வொருமுறை உபயோகப்படுத்தும்போதும் ஜப்பானுக்குத் தெரிவிக்கும் என்கிற ஒப்பந்தத்தை மீறியதால்,  அப்போதிலிருந்து தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதின் அவசியத்தை ஜப்பான் உணர்ந்தது.


எனவே அருகிலுள்ள தைவானை ஜப்பானின் ‘பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பகுதியாக’ (security zone) 2004ல் ஜப்பான் அறிவித்தது சீனாவிற்கு மேலும் ஆத்திரத்தைக் கிளப்பியது.  சுதந்திரமான தைவான் நாடே ஜப்பானின் கடல் வணிகத்திற்கு, எரி பொருள் இறக்குமதிக்கு, மற்றும் பாதுகாப்பிற்கு உறுதியாக இருக்க முடியும். இல்லையென்றால், தைவான் குறுக்கு முழுவதும் சீன ஆதிக்கத்திற்குள் வந்து விடும். தடையற்ற கடற்பயணம் இயலாமல் போகலாம் என்பதே ஜப்பானின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குக் காரணம். அதற்குப்பின், அவ்வழிகளை உபயோகப்படுத்தாமலிருந்த சீனக் கப்பல் படை ஒன்பது ஆண்டுகள் கழித்து 2012ல் ஒரு கப்பற்படைத் தொகுதியை (flotilla) ஜப்பானின் ஒசுமி நீர்வழிப்பாதை (Osumi Straits) வழியாக அனுப்பியது. இவ்வாறு மற்ற நாடுகளிடம் நடந்து கொள்ளும் சீனா, தனக்குச் சொந்தமில்லாத தென் சீனக் கடலில் (இந்தோ-சீனக் கடல்) செல்லும் மற்ற நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் தன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. 2011ல் இந்தியக் கப்பற்படையின் INS ஐராவத் (INS Airavat) எனும் ‘நீர்வழி-நிலத் தாக்குதல் செய்யும்’ (amphibious assault vessel) கப்பல் வியட்நாமின் கடல் எல்லைக்குள் இருக்கும்போது சீனக் கடற்படை அதனைத் தொடர்பு கொண்டு அது ஏன் அங்கிருக்கிறது என்று வினவியது. ஜூன் 2012ல் நமது கடற்படைத் தொகுதி ஒன்று பிலிப்பைன்ஸில் இருந்து தென் கொரியாவுக்குச் செல்லும்போது மறுபடியும் இதைப்போன்ற சம்பவம் நடந்தது. இம்முறை, சீனக் கடற்படைக் கப்பல்கள் 12 மணி நேரம் நம் கப்பல்களைப் பின்தொடர்ந்தன.


கிழக்குச் சீனக் கடலில் இருந்து மேற்கு பசிஃபிக் பெருங்கடலுக்குச் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால் அவை ஜப்பானின் சுஷிமா (Tsushima) அல்லது மியாகோ (Miyako) அல்லது ஒசுமி (Osumi)  அல்லது சுகாரு (Tsugaru) நீர்வழிப்பாதைகளில் ஏதாவது ஒன்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். இவற்றை ஜப்பான் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. இவை போக, பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் (Luzon) நீர்வழிப்பாதையையும் உபயோகித்து பசிஃபிக் பெருங்கடலுக்குச் சீனக் கப்பற்படைகள் செல்ல முடியும் என்பதினால் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைகள் அந்த இடைவெளியையும் கண்காணிக்கிறது. ஜப்பானில் மட்டுமே அமெரிக்காவிற்கு 23 படைத் தளங்கள் உள்ளன. மிக இன்றியமையாததாகக் கருதப்படும் கடேனா விமானப் படைத்தளத்திலிருந்து (Kadena Airbase) அமெரிக்காவின் சக்தி வாய்ந்த வேவு மற்றும் கண்காணிப்பு (reconnaissance and surveillance) விமானங்கள் சீனாவை இடைவிடாது கண்காணிக்கின்றன. 


  இவையெல்லாம் சீனாவுக்குப் பெரும் தலைவலியாக உள்ளன. பசிஃபிக் பெருங்கடலுக்குத் தன் கப்பற்  படைகளை அனுப்புவது அமெரிக்காவிற்கு சீனா விடுக்கும் சவாலாக இருந்தாலும், அதற்காக அது இவ்வாறு செய்தாலும், அதனுள் ஜப்பானுக்கான சவாலும் உள்ளடங்கியிருக்கிறது.


2013ல் பதவியேற்ற சிறிது காலத்திலேயே சீன அதிபர் சி ஜின்பிங் அமெரிக்க அதிபரை பராக் ஒபாமாவிடம், பசிஃபிக் பெருங்கடல் அமெரிக்க, சீன இரு கடற்படைகளையும் கொள்ளும் அளவு பெரியது என்று கூறி அமெரிக்காவின் பசிஃபிக் பெருங்கடல் மேலாண்மைக்குச் சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது.


ஜப்பான் – சீனா படைத்துறை நடவடிக்கைகள் (Military Affairs)


ஒரு நாட்டின் கடற்கரையை ஒட்டிய 12 கடல்மைல் பகுதி அந்நாட்டிற்குட்பட்டது. அதற்கடுத்த 12 கடல்மைல் பகுதி ‘ஒட்டிய பகுதி’ (Contiguous Zone’) எனப்படும். அது அந்நாட்டிற்கு உரிமை அற்றது எனினும், அந்நாட்டின் பல சட்ட திட்டங்கள் சில கட்டுப்பாடுகளுடன் அங்கு செல்லும். சென்காகு தீவுகளை அடுத்த ‘ஒட்டிய பகுதியில்’, அதிபர் சி ஜின்பிங் பதவி ஏற்றதிலிருந்து சீனக் கடலோரக் காவல்படையும், போர் விமானங்களும் தினமும் அத்துமீறி நுழைந்து வருகின்றன. 2012ல் ஆண்டுக்குப் பத்து முறை நுழைந்த சீனக் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் தற்போது ஆண்டுக்கு 720 முறை நுழைகின்றன, அதாவது சராசரி ஒரு நாளைக்கு இரு முறை. போர் விமானங்கள் 2021ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டுமே 638 முறை அத்துமீறிப் பறந்திருக்கின்றன. அதாவது, ஒரு நாளைக்கு ஏழு முறை. ஏப்ரல் 2020 தொடங்கி  100 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக சென்காகு நீர்பரப்பிற்குள் சீனக்  கப்பல்கள் அத்துமீறி நுழைந்து ஒரு புதிய சாதனையையே உண்டாக்கின. இதனால், ஜப்பானியத் தற்காப்புப் படைகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது.


சீனாவின் யுத்தி என்னவென்றால், ஜப்பானியப் படைகளைச் சோர்வடையச் செய்து, ஜப்பானுக்குப் பொருள் விரயம் ஏற்படுத்தி இத் தீவுகளை விட்டு அவர்களைத் தானாகவே அகலும்படிச் செய்வது. வியட்நாம் யுத்தத்தில் வடக்கு வியட்நாமின் தளபதி ஹோ சி மின் (Ho Chi Minh) திறமையாகப் படை வியூகங்களை அமைத்தாலும், அவை குறுகிய (tactical) நோக்கமுடையவையே; அவரது நெடுந்தூர நோக்கம் (strategic) அமெரிக்க மக்களை சோர்வடையச் செய்து சண்டையைத் தொடர வேண்டும் என்கிற மன உறுதியை உடைத்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள வைப்பது மட்டுமே. அதுதான் நடந்தது. சீனாவும் இந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துகிறது. யுத்தமின்றி எதிரியைத் தோற்கடிப்பது மட்டுமே சிறந்த முறை என்பது சீனாவின் ‘சாணக்கியரான’ சுன் சு (Sun Tzu) வின் கோட்பாடு. சில வருடங்கள் கழித்து சென்காகு தீவுகள் சீனாவின் ஆட்சிக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் காட்டிக்கொள்ள உதவும் என்பதும் இன்னொரு நோக்கம்.



தனது கடல்சார் தற்காப்புப் படையை பலப்படுத்தும் நோக்கில் 2012ம் ஆண்டு ஜப்பான் இஸுமோ (Izumo) என்கின்ற ‘உலங்கு வானூர்தி தாங்கிய நாசகாரிக் கப்பலை’ (helicopter-carrying destroyer ship) நிர்மாணிக்கத் துவங்கியது. இது தன்னைக் குறி வைத்துச் செய்யப்படுவது என்று சீனா எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், சீனாவோ அணு ஏவுகணைகள் தாங்கிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும், விமானந்தாங்கிக் கப்பல்களையும், பலவிதமான ஏவுகணைகளையும் அபரிமிதமாகக் கட்டிக்கொண்டிருந்தாலும் ஜப்பானின் இந்த ஒரு முயற்சிக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. பின்னர் இஸுமோவைத் தொடர்ந்து ‘காகா’ (Kaga) எனும் கப்பலையும் ஜப்பான் நிர்மாணித்தது. ‘காகா’ இலங்கு வானூர்தி தாங்கும் கப்பலாகக் கட்டப்பட்டாலும், 2024 வாக்கில் அது, செங்குத்தாக எழும்பி, இறங்கும் அதி  நவீன F-35B விமானங்களைத் தாங்கும் விமானந் தாங்கிக் கப்பலாக மாற்றப்படும். இவற்றைப் பகுதி 5ல் பார்க்கலாம்.


கிழக்குச் சீனக் கடலில், ஜப்பானிய மீன்பிடிப் படகுகளையும், எண்ணைத் துறப்பணத்தில் ஈடுபட்டுள்ள கப்பல்களையும், சீனக் கடற்படை தொடர்ந்து தொல்லைப்படுத்தி வருகிறது. ஜப்பானின் சென்காகு தீவுகளைக் கைப்பற்றுவது சீனாவின் முக்கியமான திட்டமாக உள்ளது. அவ்வாறு செய்தால், மேற்கு பசிஃபிக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைத்துத் தனது A2/AD (Anti Access/Area Denial) என்று சொல்லப்படும் ‘மறுப்பது/புகவிடாமல் செய்வது’ உபாயத்தை செய்ய முடியும் என்று சீனா நம்புகிறது. அவ்வாறு செய்தால், தைவான் நாட்டைக் கைப்பற்றுவதும் சுலபம், பின்னாட்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குச் சவால் விடுவதும் எளிது என்பது சீனாவின் திண்ணம்.


இவற்றைக் கருத்தில் கொண்டு, புதுப் பிரதமர் யோஷிஹிதே சுகா (Yoshihide Suga) டிசம்பர் 2020ல் எடுத்த முதல் முடிவின்படி தரை ஊர்திகளிலிருந்து செலுத்தும் 200 கி.மீ. தூரம் சென்று கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகளின் தூரத்தையும், சக்தியையும் ஜப்பான் அதிகரிக்கிறது. சீனாவைப் போலவே, ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் சென்று கப்பல்களைத் தாக்கி அழிக்கும் அதிவேக சறுக்கு (Hypersonic Glide) ஏவுகணைகளை  ஜப்பான் வடிவமைத்து வருகிறது. இவை 2026ல் பயன்பாட்டிற்கு வரும். விமானந்தாங்கிக் கப்பல்களைத் துளைத்துக்கொண்டு செல்லும் குண்டுகளை இவை தாங்கிச் செல்லும். மேலும் தனது இரண்டு புதிய கடற்படைக் கப்பல்களில் மிக அதிக சக்தி வாய்ந்த ஏஜிஸ் ரேடார் (Aegis) சாதனங்களை நிறுவ இருக்கிறது. இவற்றைப் பற்றி நாம் பகுதி ஐந்தில் விரிவாகப் பார்ப்போம். மேலும்  ஊர்ந்து சென்று தாக்கும் (cruise) ரக ஏவுகணைகளைப் படைகளில் சேர்க்க உள்ளதாகவும் அறிவித்தது. வட கொரியாவையும், சீனாவையும் தாக்க வல்லவை இவை. சீனாவைப் போலவே, கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான் கையாளும் ‘தடுப்பது/மறுப்பது’ (A2/AD) உபாயத்தின் ஒரு பகுதியே இவை. ‘தடுப்பது/மறுப்பது’ (A2/AD) பற்றி நாம் பகுதி ஐந்தில் விரிவாகப் பார்ப்போம்.


இதற்கிடையில், நாம் முன்னர் பார்த்தபடி, சீனா 2013ல் கிழக்குச் சீனக் கடலில் ‘ஆகாயப் பாதுகாப்பு அடையாளப் பகுதி’ (Air Defence Identification Zone, ADIZ) என்று ஒன்றை அறிவித்தது. அங்கு பறக்கும் விமானங்கள் சீனாவின் அனுமதி பெற்றே பறக்க வேண்டும் என்பது அதன் விதி. இந்தப் பகுதி ஜப்பானின் தெற்கு முனையில் ஆரம்பித்து, அதன் ரயுகயு தீவுத் தொடரின் (Ryukyu Arc of Islands) தென் முனையான சென்காகு தீவை உள்ளடக்கி, தைவான் வரை நீண்டது. இது ‘முதல் தீவுச் சங்கிலி’ (First Island Chain) என்று தன்னிச்சையாகச் சீனா ஏற்படுத்திக்கொண்டுள்ள தனது பாதுகாப்பு வளையத்தின் கிழக்குப் பகுதியாகும். (இதைப் பற்றிப் பின்னர் பகுதி ஐந்தில் விரிவாகப் பார்க்கலாம்) இது ஜப்பானின்  ‘ஆகாயப் பாதுகாப்பு அடையாளப் பகுதி’ யையும் உள்ளடக்கியிருந்தது. இதனால், மே 2014ல் இரு விமானப் படைகளும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாயிற்று. 2001ல் சீன எல்லைக்கு சற்று வெளியே, ஹைனன் (Hainan) தீவுக்கருகில்,  பறந்து உளவு பார்த்துக்கொண்டிருந்த ஒரு அமெரிக்கக் கடற்படை விமானத்தின் மீது சீன விமானப் படை விமானம் ஒன்று மோதிய நிகழ்ச்சியை இது நினைவூட்டியது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறு பொறியும் பெரும் போருக்குக் காரணமாகிவிடும் என்பதைப் பற்றியெல்லாம் சீனா கவலைப்படுவதில்லை. நமது லடாக் பகுதியிலும் சீனா இது போன்ற சூழ்நிலையையே தற்போது உருவாக்கி இருக்கிறது.


2013ல் பதவியேற்றத்திலிருந்து சி ஜின்பிங் ஜப்பான் மீது மிகுந்த காட்டம் கொண்டு செயல்பட்டுவருகிறார். அது வரை மிகச் சாதாரணமான நினைவு நாளாக இருந்த 7-7 (அதாவது ஜூலை 7, 1937 அன்று குவோமிண்டாங் படைகளுக்கும், ஜப்பானிய படைகளுக்குமிடையே பெய்ஜிங்கின் மார்கோ போலோ பாலம் – Marco Polo Bridge – அருகில் துவங்கிய இரண்டாவது சீன-ஜப்பானிய யுத்தம்) நாளை 2014ல் வெகு விமரிசையாகக் கொண்டாடி, ‘ஜப்பானியர்களால் மறைக்கப்பட்ட சரித்திர உண்மைகளை சீனர்கள் தங்கள் இரத்தத்தையும், உயிரையும் கொண்டு காப்பாற்றுவார்கள்’ என்று வீராவேசமாகக் கூறினார். நவீன கால ஜப்பானின் முதல் பிரதம மந்திரியாக இருந்த இடோ ஹிரோபுமி (Ito Hirobumi) யை 1909ல்  கொன்ற கொரியா விடுதலைப் புரட்சியாளருக்கு 2014ல் சீனாவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. இவையெல்லாம், ஜப்பான் மீது ஒரு நிரந்தரக் காழ்புணர்ச்சியைச் சீனர்களிடம் தூண்டிவிடச் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.


சீனாவின் உதவியுடன் வட கொரியா அணு ஆயுதங்களையும் பலவிதமான ஏவுகணைகளையும் வடிவமைத்தும் மற்றவர்களுக்கு ஏற்றுமதியும் (குறிப்பாக பாகிஸ்தான், ஈரான்) செய்து வருகின்றது, வந்துள்ளது. சீன-வடக்கு கொரிய-பாகிஸ்தான் அச்சு மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது. அதன் ஆணி வேர் செஞ்சீனா. வடக்கு கொரியாவின் ஏவுகணை வடிவமைப்புக்களும், ஏவுகணைகளைத் தாங்கிச் சென்று, நிமிர்த்தி ரேடார் உதவியுடன் ஏவும் (transporter-erector-launcher and Radar, TELAR) ஊர்திகளும், தேவையான உயர்  ரக உருக்கு இரும்பும், ஏவுகணை பாகங்களும் சீனாவிலிருந்து வந்தவையே. 1990ல் வட கொரியாவின் ரோடோங் (Rodong) ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் பெற்றுத் தனது ஹதஃப்-5 (Hatf-5) அல்லது கோரி-1 (Ghauri-1) என்றழைக்கப்படும் ஏவுகணையாக்கியது. பதிலாக, பாகிஸ்தான், சீனாவிற்கும், வட கொரியாவிற்கும் ஹாலந்து நாட்டிலிருந்து தான் கடத்திக் கொண்டு வந்த யூரேனியும் செறிவூட்டல் (Uranium Enrichment) தொழில்நுட்பத்தை வழங்கியது. 2017ல், வட கொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வடிவமைத்து அவற்றை வட கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட ஜப்பான் கடலில் (Sea of Japan) பரிசோதனைக்காகச் செலுத்தியது. இதன் உச்சியில் உள்ள அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் மறு-நுழைவு வாகனம் (Re-entry Vehicle) பாகிஸ்தானின் அபாபீல் (Ababeel) ஏவுகணையிலுள்ளதைப்போல பல அணு-ஆயுதங்களைச் சுமந்து செல்லும் (Multiple Independently-targetable Re-entry Vehicle, MIRV)அமைப்பை ஒத்தது. இந்த அமைப்பு, சீனாவிடமிருந்து பாகிஸ்தானிற்கு 2015-2016ம்  ஆண்டு வாக்கில் அளிக்கப்பட்டது. இதைப் பாகிஸ்தான் வட கொரியாவிற்கு மாற்றியது.


இவற்றாலெல்லாம் கலக்கமுற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபர் சி ஜின்பிங்கைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வட கொரியாவைச் சீனா கட்டுப்படுத்த வேண்டுமென்றும் இல்லையெனில் அமெரிக்கா தன்னிச்சையாக அதன் மீது நடவடிக்கை எடுக்குமென்றும் வெட்டு ஒன்று, துண்டிரண்டாகக் கூறினார். ஏற்கெனவே, சீனத் தொழில்நுட்ப உதவியுடன்,வட கொரியா அணுப்பிணைப்பு (fusion) மூலம் மிகச் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் அணு ஆயுதத்தை (H-bomb) 2017ல் செய்து முடித்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. எனவே, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் தன் கட்டுப்பாட்டிலுள்ள வட கொரியா மூலம் செஞ்சீனா அச்சுறுத்தி வருகிறது. இன்றைக்கு வடகொரியாவிடம் 60 அணு ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஜப்பானையும், தென் கொரியாவையும் மட்டுமல்ல, அமெரிக்காவையும் தாக்கும் ஏவுகணைகளை அது பெற்றிருக்கிறது. இதுவும் ஜப்பான்-சீன மற்றும் அமெரிக்க-சீன உறவுகளை மிகப் பெரிதாகப் பாதிக்கிறது.


சீனாவின் தெற்குச் சீனக் கடல் (இந்தோ-சீனக் கடல்)  ஆக்கிரமிப்பும்,அங்கு அது பாறைகளையும், திட்டுக்களையும் மேடுறுத்தி (reclamation) அமைத்துள்ள ராணுவத் தளங்களும் மேற்காசியாவிலிருந்து ஜப்பானுக்கு வரும் எண்ணை, வாயு போன்றவற்றிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதும் ஜப்பானின் பெரும் பயம். தன் ஆற்றல் பாதுகாப்புக்கு (energy security) முழுக்க முழுக்கக் கடல் பாதையை (Sea Lanes of Communication, SLoC) நம்பியே நடைபெறும் நாடாக ஜப்பான் இருப்பதால் அதன் பாதுகாப்பு பயம் புரிந்து கொள்ளக் கூடியதே. அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான ‘பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை’யின்  (Treaty of Mutual Cooperation and Security) ஐந்தாவது ஷரத்தின்படி, ஜப்பானுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அமெரிக்கா அதன் உதவிக்கு வர வேண்டும். ஆனால், அவை அறுதியிட்டு உறுதி கூற முடியாதவை என்று பல ஜப்பானியர்கள் தற்போது எண்ண ஆரம்பித்தும் விட்டனர். ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவைப் பற்றிய இது போன்ற எண்ணத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


சென்காகு தீவுகள் தீர்வு, தங்களுக்குச் சரித்திர ரீதியாக ஜப்பான் இழைத்துள்ள கொடுமைகளுக்குத் தீர்வு (நான்ஜிங் படுகொலைகள், சீனப் பெண்களை ஜப்பானியப் படைகள் தங்கள் வசதிக்காக சிறை வைத்தது (‘Comfort women’) போன்றவை),  தனக்கெதிரானது என்று சீனா நம்பும் அமெரிக்க-ஜப்பான் உறவு குறிப்பாக இராணுவத் தொடர்புகள், ஜப்பான்-சீனா பொருளாதாரப் பிணக்குகள், ஜப்பானுக்கு வட கொரியாவின் அச்சுறுத்தல், தெற்கு சீனக்  கடலில் (இந்தோ-சீனக் கடல்)  சீனாவின் அடாவடி ஆதிக்கம், அமெரிக்காவை விஞ்ச அதனுடன் இணக்கமான நாடுகளுடன் சீனா பாராட்டும் பகைமை, இவை அனைத்துக்கும் மேலாகப் பண்டையக் காலத்தில் எப்போதோ ஜப்பானைச் சீனப் பேரரசு ஆதிக்கம் செலுத்தியத்தின் மாறாத நினைவுகளுடன் சீனா தற்போது பிரச்சினைகளை அணுகும் முறை  இவையே ஜப்பான்-சீன உறவின் அடிப்படையில் உள்ள பெரும் சிக்கல்கள். இடைப்பட்ட தூரமும், நடுவில் அமைந்த இடைத்தாங்குப் பகுதியான கொரியத் தீபகற்பமும், எல்லாவற்றிற்கும் மேலாகக் கொந்தளிப்பான கடல் பகுதிகளும், ஜப்பானுக்கு அரணாகப் பண்டைய காலத்தில் சீனாவிடமிருந்து அமைந்திருந்ததால் சீனாவினால் ஜப்பானை எதிர்க்க முடியவில்லை. எப்பொழுதெல்லாம் சீனக் கப்பற்படை ஜப்பானுக்குச் சென்றனவோ, அப்போதெல்லாம் அவை பெரும் தோல்வியைத் தழுவின. ஆனால் இப்போது, இந்த இயற்கை அரண்களைத் தொழில்நுட்பம் வென்றுவிட்டதால் சீனாவின் ஆபத்தை ஜப்பான் உணர்கிறது.


ஜப்பான்– ஆஸ்திரேலியா உறவுகள்

அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான ஜப்பானும்,  ஆஸ்திரேலியாவும் 2003ல் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) செய்துகொண்டன. அவ்விரு நாடுகளின் பிரதம மந்திரிகளும்  2007ல் பாதுகாப்பு ஒத்துழைப்பு சம்பந்தமான ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில் அந்நாடுகள் எவ்வாறு தங்கள் தளத்தகை கூட்டாண்மையை (strategic partnership) மேம்படுத்தப்போகின்றன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2008ம் ஆண்டு 2+2 வடிவூட்டத்தின் (format) கீழ் அமைந்த இரு நாடுகளின் வெளியறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டுப் பேச்சு வார்த்தையில் அவர்கள் கூட்டாண்மையை ‘அகல்விரிவான கூட்டாண்மையாக’ (Comprehensive Partnership) மாற்றுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் 2014ல் இந்தக் கூட்டாண்மை, ‘தனிச்சிறப்பு வாய்ந்த தளத்தகை கூட்டாண்மை’ (Special Strategic Partnership) என உயர்த்தப்பட்டது. நவம்பர் 2020ல் ஆஸ்திரேலியா விஜயம் செய்த புதிய ஜப்பான் அதிபர் யோஷிஹிடே சுகா இரு நாடு ராணுவங்களும் மற்றவர்களது படைத் தளங்களை உபயோகப்படுத்திக்கொள்ளுவதையும், அதிகமான கூட்டுப் பயிற்சிகள் செய்வதையும் அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இரு நாடுகளின் ராணுவங்களும் தொடர்ந்து கூட்டுப் பயிற்சியில் ஒன்றோடொன்றும், அமெரிக்காவுடன் இணைந்தும் செயல்பட்டாலும் 2020ல் ஆஸ்திரேலியாவும் ‘மலபார் கடற்பயிற்சியில்’ முதன்முறையாக 2007க்குப் பிறகு இணைந்துகொண்டது.


வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தொடர்பிலும் இவ்விரண்டு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. உதாரணமாக புதுப்பிக்கத்தக்க எரிபொருள் (renewable energy) உபயோகத்தில், ஜப்பான் ஆஸ்திரேலியாவிடமிருந்து நீர்வாயு (hydrogen) பெருமளவில் இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது. தனது நாட்டின் பூகோள அமைப்பினால் புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி மற்றும் காற்று சக்திகளைப் பெருமளவில் உற்பத்தி செய்ய முடியாத நாடாக ஜப்பான் இருப்பதால், தன்னை நீர்வாயு-அடிப்படையில் அமைந்த பொருளாதார சக்தியாக மாற்ற ஜப்பான் பெருமுயற்சி எடுத்து வருகிறது.


இந்தியா-ஜப்பான் உறவுகள்

ஆகஸ்ட் 2007ல் நமது நாட்டுக்கு விஜயம் செய்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஜோ அபே, நமது நாட்டின் கூட்டுப் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தனது ‘விசாலப் பார்வையாக’ ஒரு கருத்தைத் தெரிவித்தார்.  அதில் இந்தியப் பெருங்கடலிலும்,பசிஃபிக் பெருங்கடலிலும் உள்ள நான்கு பெரும் தேசங்களான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் அடிப்படையில் இயற்கையாக இணைந்திருப்பதால் ‘அகண்ட ஆசியாவை’ அமைப்பதில் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.  ‘ஒரு அழகான தேசத்தை நோக்கி’ (Towards a Beautiful Country) என்ற தனது புத்தகத்தில், ஷின்ஜோ அபே, ஜப்பான் தனது நலனுக்காக இந்தியாவுடனான உறவை ஆழப்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே விளக்கியிருந்தார். ஒரு தசாப்தத்துக்குள் ‘இந்திய-ஜப்பான் உறவு, அமெரிக்க-ஜப்பான் உறவை முந்திவிடும்’ என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நான்கு தேசங்களும் தொலைநோக்குப் பேச்சுவார்த்தைகளைத் துவங்க வேண்டும் என்றும் பதினைந்து வருடங்களுக்கு முன்பே எழுதியிருந்தார்.


பின்னர், 2011ல் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்த ஜப்பானியப் பிரதமர் நோடா யோஷிஹிகோ (Noda Yoshihiko), இரு நாட்டின் கடற்படைகளும் ஒன்றாகச் சேர்ந்து போரிடும் திறனை (interoperability) வளர்க்கப் போவதாகக் கூறினார். அமெரிக்காவிற்கடுத்து, இந்தியாவுடன் மட்டுமே அத்தகைய கூட்டுத் திறனை ஜப்பான் ஏற்படுத்தியது. ஜூன் 2012ல், இரு நாட்டுக் கப்பற்படைகளும் ‘JIMEX’ (Japan India Maritime Exercise) எனும் கூட்டுப் பயிற்சியைத் துவங்கின. ஆண்டுக்கொரு முறை நடக்கும் இப்பயிற்சிகள் மாறி, மாறி இந்தியாவிலும், ஜப்பானிலும் நடக்கின்றன. இது மேலும் விரிவடைந்து, இராணுவமும்,ஆகாயப் படையும் ஆண்டுக்கொருமுறை நடத்தும் கூட்டுப் பயிற்சியாகவும் உயர்ந்துள்ளது. இவை போக, ஜப்பானின் கடற்படை, இந்தியா-அமெரிக்கா இடையே முதலில் தொடங்கப்பட்ட ‘மலபார் கூட்டுப் பயிற்சியிலும்’ (Malabar Exercise) தவறாது கலந்து கொள்ளுகிறது. 2020ல், ஜப்பான், தனது நாட்டின் ‘தேசிய இரகசியச் சட்டத்தை’ (State Secrets Law) மாற்றி, இந்தியாவுடன் இரகசியங்களைப் பகிர வழி செய்தது. செப்டம்பர் 2020ல், இரு நாடுகளின் ராணுவ உறவுகள் இன்னும் ஒரு படி மேலே சென்றன. ACSA (Acquisition and Cross Service Agreement) எனப்படும் ஏற்பாட்டியல் அமைப்பில் கையெழுத்திட்டன. அதன்படி, ஒரு நாட்டின் படைகள் மற்றொரு நாட்டின் படைகளின் தளங்களை, வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நெருங்கிய பிணைப்பு எவ்வாறு உண்டாயிற்று?


இந்திய-ஜப்பானிய உறவு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. பௌத்த மதம் இரு நாட்டையும் இணைத்தது. ஆயினும், சில சமீபத்திய நிகழ்வுகள் நினைவுகூறத் தக்கன. இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் ஜப்பானின் யுத்த காலக் குற்றங்களை விசாரிக்க ஐ நா சபையால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் ராதாபினோத் பால் (Radha Binod Pal) என்ற இந்தியரும் நீதிபதியாக இடம் பெற்றிருந்தார். அவர் ஒருவர் மட்டுமே, ஜப்பானிய ராணுவத் தளபதிகளைப் போர்க் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்புக் கூறினார். அது, ஜப்பானியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், அவர் இறந்த பிறகு, மிக உயர்ந்த விதமாக யாசூகூனி ஆலயத்தில் அவர் நினைவுகூறப்படுகிறார். நீத்தார் நினைவாகப்  போற்றப்படும் யாசூகூனி ஆலயத்தில் ஜப்பானியரல்லாத ஒரே ஒருவர் இவர் மட்டுமே.


இந்திய-ஜப்பான் உறவு என்றுமே வலுவாக அமைந்திருந்தாலும், அதன் வெளிநாட்டு வளர்ச்சி உதவியைப் (Overseas Development Assistance, ODA)பெருமளவில் பெறும் நாடாகப்  பல்லாண்டுகள் இந்தியா இருந்திருந்தாலும், 1998 போக்ரான் அணுச்  சோதனைகளுக்குப் பிறகு, உறவு தடுமாற்றம் கண்டது. அணுகுண்டுத் தாக்குதலுக்கு இருமுறை உள்ளாகிப் பல லட்சக்கணக்கானோரை இழந்த ஒரே நாடாக ஜப்பான் இருப்பதால், இந்தியாவின் அணுச் சோதனை அங்கு மனத்தாங்கலை ஏற்படுத்தியது வியப்பில்லை. ஆனால், அதுவும் சட்டென்றும் விலகியது.


போக்ரான் சோதனைகளுக்கு மறுநாளே, நம்முடனான அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்தது. ODA உதவிக்குத் தடை விதித்து, தொழில் நுட்ப உதவிகளை நிறுத்தியது. G-8 எனப்படும் உலகின் எட்டு முன்னேறிய  நாடுகள் அமைப்பில் இந்தியாவைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துத் தீர்மானம் இயற்றியது. ஆனால், ஆகஸ்ட் 2000ம் ஆவது ஆண்டு ஜப்பானியப் பிரதமர் மோரி யோஷிரோ (Mori Yoshiro) வின் இந்திய விஜயம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அப்போது அவர், ‘ஜப்பானும் இந்தியாவும் உலக அளவில் கூட்டாளிகள்’ (global partners) என்று அறிவித்தது இரண்டு வருடங்களாக இருந்த தடங்கலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட டிசம்பர் 13, 2001 பாராளுமன்றத் தாக்குதலை அடுத்து, உடனடியாக இந்தியாவிற்கு வந்த ஜப்பான் பாராளுமன்றத்தின் (Diet) எதிர்க் கட்சித் தலைவர் நமது பாராளுமன்றத்தில் தங்கள் நாட்டின் மரியாதையைச் செலுத்தினார். இது நம் தொடர்பை வலுப்படுத்தியது.


இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கின் 2008ம் ஆண்டு ஜப்பான் விஜயத்தின்போது ஒரு ‘பாதுகாப்பு வரைமுறைக்கு’ (security framework) இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. கடல்சார் பாதுகாப்பும் (maritime defence), பயங்கரவாத எதிர்ப்பும் (counter-terrorism) அதில் பிரதானமாக அமைந்தன. இதன் நீட்சியாக, இந்திய மற்றும் ஜப்பானியக் கடலோரக் காவல் படைகள் ஏடன் வளைகுடாவில் (Gulf of Aden) கடல் கொள்ளையர்களுக்கெதிரான கூட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. 2010ம் ஆண்டு இந்தியா, ஜப்பான் இரு நாடுகளும் 2+2 கலந்து பேசுதல் முறை (Consultation Format) என்று இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சகக் காரியதரிசிகள் (Secretaries) ஆண்டுக்கொருமுறை சந்திக்கும் அமைப்பை ஏற்படுத்தின. இதற்கு முன் ஜப்பானுக்கு அமெரிக்காவுடன் மட்டுமே இதுபோன்ற முறை இருந்தது. 2019ல் இது காரியதரிசிகள் மட்டத்திலிருந்து அமைச்சர்கள் மட்டத்திற்கு உயர்த்தப்பட்டது.


2011ல் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் காரியதரிசிகள் மட்டத்திலான முத்தரப்புப் பேச்சு வார்த்தைகளை ஆண்டுக்கொருமுறை நடத்துவதென்று தீர்மானித்தன. 2015ம் ஆண்டு, காரியதரிசிகள் மட்டத்திலிருந்து, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அளவுக்கு இப்பேச்சுவார்தைகள் உயர்ந்தன.  2011ல் நடந்த ஃபூக்குஷிமா (Fukushima) அணு உலை நாசத்திற்கு அடுத்து, ஜப்பான் உலகம் முழுமைக்கும் அளித்து வந்த ODA உதவியை நிறுத்தியது, இந்தியாவைத் தவிர. நம் உறவின் பிணைப்பிற்கு இது ஒரு சான்று.  ஜப்பானியப் பிரதமர்கள் தம் நாட்டின் பாராளுமன்றத் கூட்டத்த தொடரின் முதல் நாள் நிகழ்ச்சிகளைத் தவற விட்டதே இல்லை. ஆனால், 2014ல், நம் நாட்டின் குடியரசு தின அணி வகுப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ஷின்ஜோ அபே அதையும் செய்தார்

நம் இரு கடல் படைகளின் நெருங்கிய தொடர்புக்கு எதிர்பாராதவிதமாக ஒரு சம்பவம் அடித்தளமாக அமைந்தது. அரபிக் கடலில், குறிப்பாக மேற்காசியாவை ஒட்டிய பகுதிகளில் 1990கள் வாக்கில் சோமாலியாக் கடற் கொள்ளைக்காரர்கள் நடுக் கடலில் செல்லும் கப்பல்களைக் கைப்பற்றி, பிணைப்பணம் வசூலிப்பது பெருமளவில் நடைபெற்று வந்தது. அதனால், இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல் படையும் இணைந்து கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதையும், கப்பல்கள் இப்பகுதியை  பத்திரமாகக் கடக்கத் துணை போவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தன. அப்போது, 1999ல், கடத்தப்பட்ட ஜப்பானியக் கப்பலான, ஆனால் ‘மெகா ராமா’ (Mega Rama) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட, ‘அல்லொன்ட்ரா ரெயின்போ’ (Allondra Rainbow) எனும் கப்பலை மீட்டு அதில் சிறைப்பட்டிருந்த ஜப்பானியர்களை விடுவித்து, கடற்கொள்ளைக்காரர்களைச் சிறைபிடித்தன, நம் கப்பற்படைக் கப்பல்கள். அது நமது இந்திய-ஜப்பானிய உறவில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. பின்னர், இரு நாட்டின் கடலோரக் கப்பற் படைகள் ‘ஸஹ்யோக்-கைஜின்’  (Sahyog-Kaijin) எனும் கூட்டுப் பயிற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்பயிற்சிகள் இன்றளவும் தொடர்கின்றன.


கடற்கொள்ளைகளைத் தடுத்தது, சுனாமி, போர்  போன்ற பேரிடர்க்காலங்களில் சிறப்பான பணியாற்றியது போன்றவற்றால், இரு நாடுகளின் கடல் சார் துறைகளுக்கிடையே உறவு வலுப்பட்டு 2013 ஜனவரியில் விரிவான பேச்சு வார்த்தைகள் இருநாடுகளுக்குமிடையில் நடைபெற்றன. அதில், சீனாவுடனான சென்காகு தீவுத் தொடர்பான பிணக்கு விஷயங்களை ஜப்பான் முதன்முறையாக நம்முடன் பகிர்ந்துகொண்டது.  1998ல் நம்மைக் கடுமையாக எதிர்த்த ஜப்பான் 2016ல் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை நம் நாட்டுடன் செய்து கொண்டது.  அணுப் பரவல் தடைச் சட்டத்தில் (Nuclear Non Proliferation Treaty, NPT) கையெழுத்திடாத ஒரு நாட்டுடன் ஜப்பான் செய்துகொண்ட ஒரே ஒப்பந்தம் இது. இந்திய ராணுவத்தால் 2016ல் பூனாவில் நடத்தப்பட்ட 18 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியான ‘களப் பயிற்சி செயல்முறை -16’ (Field Training Exercise – 2016, FTX-16) பயிற்சியில் ஜப்பானிய ராணுவம் கலந்து கொண்டது.


இந்தியா-ஜப்பான் மற்றக்  கூட்டுறவுகள்

2019ல் நரேந்திர மோடியால் பதினான்காவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் (East Asia Summit) அறிவிக்கப்பட்ட ‘இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முயற்சி’ யில் (Indo-Pacific Oceans Initiative, IPOI) முதன்மைக் கூட்டாளியாகப் பணிபுரிய ஜப்பான் ஒத்துக் கொண்டுள்ளது. இந்த முயற்சி கடல்சார் மேலாண்மை சம்பந்தப்பட்டது. கடல் வளங்களைப் பாதுகாக்கவும், அவற்றைப் பேணித் தொடர் நலன் பயக்குமாறு செய்யவும் (sustainability), இவ்விரண்டு பெருங்கடல்களையும் பாதுகாப்பான அமைப்பாகப் பராமரிக்கவும் மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சியின் குறிக்கோள்கள் தற்போதைய ‘எல்லாம் தனக்கே சொந்தம்’ எனும் சீன அணுகுமுறைக்கு முற்றிலும் எதிராக இருப்பது தெள்ளத்  தெளிவு.


இலங்கையில் பெருகி வரும் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க இந்திய-ஜப்பான் அரசுகள் ஒன்று சேர்ந்து கொழும்புத் துறைமுகத்தில் ஆழ்கடல் ‘கிழக்குப் பெட்டக முனையத்தை’ (Eastern Container Terminal) அமைக்கத் திட்டமிட்டு அந்த அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளன. இது ஒரு முக்கியமான தொலைநோக்குத் (strategic) திட்டமாகும். இது தேவையற்ற முறையில் வளர்ந்து வரும் சீனச் செல்வாக்கைக் குறைக்கும். இது சர்ச்சைக்குரிய சீன ‘சர்வதேசப் பெட்டக முனையத்தை’ அடுத்து அமையவிருக்கிறது. தொழிற் சங்கங்களின் எதிர்ப்பால் இது சற்றுத் தடைப்பட்டிருந்தாலும், ஜனவரி 2021ல் அதிபர் ராஜபக்சே ‘பிராந்தியப் புவிஅரசியல் (geopolitics) கவலைகளைக் கருத்தில் கொண்டு’ இதற்கு அனுமதி அளித்தார். ஆயினும் சில வாரங்களுக்குள் இலங்கை தனது கிழக்குப் பெட்டக முனையத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளுவதாகவும், மேற்குப் பெட்டக முனையத்தை இந்தியா-ஜப்பான் அமைப்புக்கு அளிப்பதாகவும் கூறியது. ஆனால், இந்தியா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதை எழுதும் மார்ச், 2021ல் குழப்பம் நீடிக்கிறது.கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இலங்கைத் துறைமுகங்களில் நடக்கும் சரக்கு மாற்றத்தில் (trans-shipment) 70 சதவிகிதம் இந்திய சரக்குகள் சம்பந்தப்பட்டவையே.


நீர்மூழ்கிக் கப்பல்களால் கடல் கொள்ளையைத் தடுக்க முடியாது என்றபோதிலும், கடற்கொள்ளைத் தடுப்பு (anti-piracy) என்கின்ற போர்வையில் சீனா அத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்களைத் தொடர்ச்சியாக இந்தியப் பெருங்கடலுக்குள் 2013ல் இருந்து அனுப்பி வருகிறது. இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து சீன நீர்மூழ்கிக் கப்பல்களைப் பின்னர் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. சீனாவின் ‘பட்டை மற்றும் சாலை முனைப்புக்கு’ (Belt and Road Initiative) மாற்றாக இந்தியாவும், ஜப்பானும் ‘ஆசிய-ஆப்பிரிக்க வளர்ச்சி வழித்தடத்தை’ (Asia-Africa Growth Corridor) உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


உறுதியான, அடாவடித்தனமான, வியப்புத் தருகிற வேகத்தில் பொருளாதாரத்திலும், ராணுவ வலிமையிலும் வளர்ந்த செஞ்சீனாவின் அச்சுறுத்தலாலும், அமெரிக்காவின் ஆதிக்கமும் அது அளிக்கும் பாதுகாப்பும் மழுங்கி வருவதாக ஜப்பான் உணர்ந்ததாலும், அது இந்தியா உடன் நெருக்கத்தை மேம்படுத்துகிறது. சென்ற தசாப்தத்தில் (2010-2019), அமெரிக்காவின் பாதுகாப்புதுறைச் செலவு 15 விழுக்காடு குறைந்துள்ளது. அதே சமயம் சீனாவின் செலவு 85 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜப்பானின் செலவு 2 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. இவையெல்லாம் ஜப்பானுக்குக் கவலை அளிக்கின்றன. அதே சமயம் இந்தியாவின் பாதுகாப்பு செலவீனம் 37 சதவிகிதம் உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் பொருளாதாரம் அதிக அளவில் சீனாவைச் சார்ந்து இருப்பதும், தனது பாதுகாப்புக்கு மழுங்கி வரும் அமெரிக்க சக்தியை நம்பி இருப்பதும் ஜப்பானிய மக்களுக்கு கவலை அளிக்கிறது. ஜப்பானிய ஏற்றுமதியில் 20 சதவிகிதம் சீனாவுக்குச் செல்கிறது. ஜப்பானிய இறக்குமதியில் 24 சதவிகிதம்  சீனாவிலிருந்தே இருக்கிறது. ஏப்ரல் 2020ல், ஜப்பானின் ‘வழங்கு சங்கிலியை’ சீனாவிலிருந்து இடம் பெயர்க்க, ஜப்பான் அரசு 2.2 பில்லியன் டாலர் ஒதுக்கியது.


ஜப்பானின் தளத்தகைப் பரப்புக்கு (Strategic Space) சீனாவின் வளர்ச்சியினால் நெருக்கடி ஏற்படுவதைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஜப்பானுக்கு இருக்கிறது. அதன் தளர்வுநிலைப் பொருளாதாரத்தால் (deflationary economy), 2050ம் ஆண்டுக்குள், ஜப்பானின் பொருளாதாரம் சீனப் பொருளாதாரத்தில் ஆறில் ஒரு பங்குதான் இருக்கும், அதன் ஜனத்தொகையும் 30 சதவிகிதம் குறைந்தும் விடும் அபாயம் இருப்பதாக கெய்டன்ரென் (Keidanren) என்கின்ற ஜப்பான் வியாபாரக் கூட்டமைப்பு 2013ம் ஆண்டே கவலை தெரிவித்தது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, அதன் முதிர்க்கும் ஜனத்தொகை. இரண்டாவது அதன் குறையும் ஜனத்தொகை. எனவே, ஜப்பானுக்கு நட்பு நாடுகளுடன் ஆழ்ந்த தொடர்பு மிகவும் அவசியம். இல்லையெனில், சீனாவால் ஆட்கொள்ளப்படும் அபாயம் இருக்கிறது. அதைப்போன்ற இடர்கள் இந்தியாவிற்கு இல்லையென்றாலும், சீனாவுடன் வளர்ந்து கொண்டே வரும் ‘தளத்தகை இடைவெளியை’ (Strategic Gap) குறைப்பதற்கு, ஜப்பானின் நெருங்கிய நட்பு இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது. சீனாவின் பசிஃபிக் பெருங்கடல் முனைப்பு இப்போது விரிவடைந்து ‘இரு கடல்கள் கோட்பாடாக’ (Two Oceans Theory) இந்தியப் பெருங்கடலையும் தற்போது உள்ளடக்கியுள்ளது. இதுவும் இந்திய-அமெரிக்க-ஜப்பானிய முந்நாடுகள் உறவுகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே, இந்தியா, ஜப்பான் இரு நாடுகளின் அக்கறைகளும் ஒன்றுக்கொன்று ஈடு செய்யும் விதமாக (complementary) அமைந்திருப்பதைக் காணலாம்.


இவ்வாறு பட்டை தீட்டப்பட்ட பன்முகத் தொடர்புகள் நம் இரு நாட்டையும் பிணைக்கின்றன. நால்வராணியில் அங்கம் வகிப்பது அத் தொடர்புகளை மேலும் பலப்படுத்துகிறது.


(சுப்ரமண்யம் ஸ்ரீதரன், படிப்பின் மூலமும், வேலையின் மூலமும் ஒரு கணினி வல்லுநர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பல்லாண்டுகள் பணியாற்றிய போது, அதன் உலக சேவை வழங்கும் மையத்தின் சில பிரிவுகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். இந்தியாவின் போர்திறஞ்சார்ந்த பாதுகாப்பு, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள், குறிப்பாக சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கூர்மையாக இருபத்தைந்தாண்டுகளாகக் கவனித்து வருபவர். இந்தியாவின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி விவாதிக்கும் முன்னணி வலைத்தளம் ஒன்றின் செயலாட்சியராக இருக்கிறார். சென்னை சீன ஆய்வு மையத்தின் உறுப்பினர். Views expresses are personal.)

2 views0 comments

Comments


LATEST