top of page

இந்திய-சீன ராணுவ தலைவர்கள் 12வது சுற்று பேச்சுவார்த்தை: ஓரு அலசல் ; கர்னல் ஆர். ஹரிஹரன்

Updated: Mar 7, 2023


Image Courtesy: NDTV

Article 43/2021


லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைக் குறைக்க இந்தியா, சீனா ஆகிய இருநாடுகளின் படைத்தளபதிகளின் 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை மே 30ந் தேதி நடந்தது. இந்திய குழுவில் லே நகரில் நிலை கொண்டுள்ள 14-வது கோர் படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசியாவுக்கான கூடுதல் செயலாளர் நவீன் ஸ்ரீ வாஸ்தவா பங்கு பெற்றனர்.


சீன ராணுவ குழுவுக்கு இம் மாதம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீன ராணுவத்தின் மேற்கத்திய கட்டளைப் பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சூ கிலிங் தலைமை வகித்தார்.


மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வு, கடந்த முறையைவிட குறைவாக, ஒன்பது மணி நேரமே நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தை நடக்கும் முன்னரே, இந்த முறை, லடாக் எல்லையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய  ஹாட்ஸ்பிரிங், கோக்ரா, மற்றும் டெப்சாங் சமவெளி ஆகிய இடங்களில் படைகளை விலக்குவது பற்றி பேச்சு வார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்க பட்டது.


இந்த பேச்சுவார்த்தையில் ஏதாவது முன்னேற்றம்  கண்டால்தான், சீனா இந்தியாவுடனான உறவில் சுமூகமான நிலைப்பாட்டை ஏற்படுத்த தயார் என்பது உறுதியாகும். அரசியல் விமரிசகர்கள் பார்வையில், இந்த சுற்றில் ஹாட்ஸ்பிரிங் மற்றும் கோக்ரா ஆகிய இரு பகுதிகளில் மட்டுமே படைகளை விலக்குவதற்கான உடன் படிக்கையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஏனெனில், அந்த இரு இடங்களில் படைகளை விலக்கின பிறகே, அடுத்த கட்டமாக டெம்சோக், மற்றும் டெப்சாங் சமவெளி ஆகிய பகுதிகளில் படை விலகல் குறித்து முடிவு எடுப்பது சாத்தியமாகும்.


பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, இன்று (ஆகஸ்டு 4) வெளிவந்துள்ள செய்திகள், அரசியல் விமரிசகர் எதிர்பார்ப்புகள் ஓரளவு வீண் போகவில்லை என்பதை காட்டுகின்றன. டைம்ஸ் விமரிசகரான ரஜத் பண்டிட் இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவும் சீனாவும் எல்லை படைக்குறைப்பை செயலாக்கும் முயற்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டியுள்ளதாக கூறுகிறார். அதன் முதல் கட்டமாக, மோதல் ஏற்படும் அபாயமுள்ள கோக்ரா அருகே உள்ள ரோந்து புள்ளி 17A பகுதியில், இரு தரப்பும் ரோந்து செய்யாத இடைவெளியை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார். இதை கொள்கை அளவில் இரு தரப்பு தளபதிகளும் ஒப்புக் கொண்டாலும், அதற்கு சீனத் தலைமையின் ஒப்புதல் எதிர்பார்க்கப் படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


இது இரு நாடுளுகளுக்கும் இடையே சுமூக நிலையை ஏற்படுத்துவதற்கான ராணுவப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த எடுக்கப் பட்டுள்ள ஒரு இடைக்கால முயற்சி என்று கருதலாம். ஏனெனில், 2013ம் ஆண்டிலிருந்து (அதாவது 2014ல் பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வரும் ஒரு ஆண்டு முன்னரே) டெப்சாங் சமவெளியை சீனப் படைகள் தமது ஆதிக்கத்தில் கொண்டு வந்து, அங்கே இந்தியப் படைகளை ரோந்துப் பணிகளை செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்து வருகின்றன.


ஆகவே, சீனாவின் ஊடுருவல் இல்லாமல்,  டெப்சாங் சமவெளி 2013ம் ஆண்டுக்கு முந்தைய நிலையை அடைந்தால்தான், எல்லையில் மோதல் ஏற்படுவதற்கான வாய்புக்கள் முழுமையாக தவிர்க்கப் படும். அப்போதுதான், எல்.ஏ.சி (LAC) என்று அழைக்கப்படும் யதார்த்தமான எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், இரு தரப்பினரும் ரோந்து பணிகளை மேற்கொள்ள ஆக்கப் பூர்வமான புதிய வழி முறைகளை உருவாக்க முடியும்.


டெல்லியில் வெளியுறவுத்துறை ஆகஸ்டு 3ந் தேதி 12வது சுற்று பேச்சு வார்த்தையைப் பற்றி இரு தரப்பும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையை பிரசுரித்தது. அந்த அறிக்கை இரு நாடுகளும் எந்த விஷயங்களில் ஒன்றுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகின்றன என்பதை காட்டுகிறது. முதலாவதாக, இவ்வாறு ஒருங்கிணைந்து அறிக்கை வெளியிட்டிருப்பது, இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தவிர்ப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதைக் காட்டுகிறது. 


அறிக்கையின் வாசகத்தில், 12 வது சுற்று இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை, “ஜூலை 14 ஆம் தேதி துஷான்பேயில் இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடந்த சந்திப்பு, மற்றும் ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்ற இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் தீர்வுக்கான 22 வது கூட்டம் ஆகியவற்றை தொடர்ந்து நடந்துள்ளது” என்று கூறுகிறது.


இது இந்திய-சீன ராணுவத் தலைமைகளின் பேச்சுவார்த்தைகளை, இருதரப்பும் பல்வேறு மட்டத்தில் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளின் ஒரு அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.


மேலும் இந்த அறிக்கையில், இரு தரப்பினரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் மேற்கு கட்டுப்பாட்டு கோடு (Western LAC) தொடர்பான மீதமுள்ள பகுதிகளில் படைகளை விலக்குதல் பற்றிய தமது ஆழ்ந்த, வெளிப்படையான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.என்று கூறுகிறது.


“இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானது என்று இரு தரப்பினரும் குறிப்பிட்டனர், அதனால் அவர்களுக்கு இடையே புரிதலை மேலும் மேம்படுத்தி உள்ளது. தற்போதுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப, இந்த மீதமுள்ள பிரச்சினைகளை விரைவாக தீர்க்கவும், பேச்சுவார்த்தை மற்றும் பேச்சுவார்த்தைகளின் வேகத்தை அதிகரிக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்” என்று குறிப்பிடுகிறது.

“இடைக்காலத்தில், மேற்குப் பகுதி எல்ஏசி-யில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், அமைதியை கூட்டாகப் பராமரிப்பதற்கும், தங்கள் முயற்சிகளை மேலும் திறம் பட தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்” என்று கூறுகிறது.


12-வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அதைப் பற்றி வெளிவந்துள்ள ஒருங்கிணைந்த அறிக்கைம், ஆகியவற்றின் அடிப்படையில், லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவின் நிலைப்பாட்டை, சீனா ஒப்புக் கொள்கிறது என்று கணிப்பது தவறாகும்.

ஏனெனில், 12வது சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகும், இரு தரப்பும் இன்னமும் உறுதியான அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை என்பதையே ஒருங்கிணைந்த அறிக்கை காட்டுகிறது.

கடந்த மே மாதம் நடைபெற்ற ராணுவ படைத் தளபதிகள் பேச்சுவார்த்தையில், இந்தியா எல்லையில் சீன படைவிலகல் முற்றிலுமாக நிகழ்ந்த பின்னரே, வழமையான தொடர்புகள் அந்நாட்டுடன் ஏற்படும் என்று கூறியது. ஆனால் அதற்கு சீனா உடனே மறுப்பு தெரிவித்தது.


அப்படி இருந்த போதிலும், ராணுவத் தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தை இந்த முறை தொடர்ந்ததற்கு முக்கிய காரணம், பிப்ரவரியில் சீனா தனது படைகளை பாங்காங் த்சோவின் தெற்கு மற்றும் வடக்கு கரைகளில் இருந்து விலக்கியதே ஆகும். ஆகவே இந்த முறை பேச்சுவார்த்தையில் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலும் அத்தகைய முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பே பேச்சுவார்த்தைகளை தொடர இரு தரப்புக்கும்   ஒரு உந்துதல் அளித்தது.


12-வது சுற்று பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், இரு நாடுகளும் எல்லையில் மோதல் ஏற்படக்கூடிய ஆபத்துள்ள கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில், அதைத் தவிர்க்க, “நாங்கள் முன்னோக்கி நகர்வதை எதிர்பார்க்கலாம்” என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளன என்பதை காட்டுகிறது. இது வரவேற்கப் படவேண்டிய விஷயம்.


ஆனால், லடாக் எல்லையில் படை விலகல் இன்னமும் இழுபறியில் இருப்பதற்கு என்ன காரணம்? இந்திய துணைக் கண்டத்திலும், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு மண்டலத்தில் நிகழும் மற்ற சம்பவங்களையும் மனதில் கொண்டே இந்தியாவும் சீனாவும் தமது முடிவுகளை எடுப்பதே அதற்கு காரணம்  என்பதில் ஐயமில்லை.


அத்தகைய சில நிகழ்வுகளை இங்கே குறிப்பிடலாம். கடந்த ஜூலை மாதம், லடாக் டெம்சோக் பகுதியில் உள்ள சிந்து நதியின் மறுகரையில் சீன ராணுவப் படையினர் மற்றும் ‘பொதுமக்கள்” கூடி திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், தலாய் லாமாவின் பிறந்த நாளன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களை முதன் முறையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை மோதல்களை தவிர்க்க பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், சீன அரசாங்க அதிகாரிகள் கிழக்கு லடாக்கில் டெம்சோக்கில் உள்ள சார்டிங் நாலாவின் இந்திய பக்கத்தில் கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.


கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங் சமவெளியில், சீனப் படைகள் இந்திய ரோந்துப் பணிகளை தடுத்து நிறுத்தினாலும், இந்திய ராணுவமும் அதைச் செய்யத் தொடங்கும் என்று ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி டெல்லியில் கூறியதாக செய்திகள் கூறுகின்றன. அதனால் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க நேரம் எடுக்கும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 2013 முதல், இந்திய துருப்புக்களின் எண்ணிக்கையும் திறனும் தற்போது அதிகரித்துள்ளன. அதனால் எங்கள் ரோந்து அதிகரித்துள்ளது. அத்தகைய திறன் அதிகரிக்கும் போது, சிக்கல் அதிகரிக்கும்,” என்றனர்.


இது உண்மைதான். ஏனெனில், இதுவரை காஷ்மீர் பகுதியில் நிலை கொண்டிருந்த ராஷ்ட்ரீய ரைபிள் டிவிஷன் படைப் பிரிவை, இந்திய ராணுவம் தற்போது லடாக் பகுதிக்கு மாற்றியுள்ளது. ஆகவே, முன்னெப்போதும் இல்லாத அளவு நாலு டிவிஷன் படைப்பிரிவுகள் (ஏறத்தாழ 50,000 துருப்புகள்) தற்போது லடாக் பகுதியில் நிலை கொண்டுள்ளன. அந்த எல்லையில் இந்தியா தொடர்ந்து  சாலைகளை கட்டி வருகினறது. எல்லைப் பகுதி கிராமங்களில் மின்சாரம், இன்டர் நெட் வலைப் பின்னல் மற்றும் மருத்துவ வசதி ஆகியவை தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

இவ்வாறு, இந்தியா லடாக் பகுதியில் கொண்டுள்ள திடமான பாதுகாப்பு நிலைப்பாட்டை சீனா புரிந்து கொண்டிருக்கும்.


12-வது சுற்று இந்திய சீன ராணுவ பேச்சுவார்த்தைகள் நடந்திருந்த அதே நேரத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியா வந்தார். அப்போது அவர் பங்கு பெற்று பேச்சுக்களில் நெருங்கி வரும் இந்திய-அமெரிக்க உறவையும், சீனாவினால் இந்திய எல்லையில் எற்பட்டுள்ள ஆபத்தான நிலையையும், இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் கொண்ட “குவாட்” கட்டமைப்பின் திட்டங்களையும் விவரித்தார். ஆகவே நெருங்கி வரும் இந்திய-அமெரிக்க உறவுகள் சீனாவின் இந்தியா-சார்ந்த பிரச்சினைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


ஆகவே, தெற்காசிய துணைக்கண்டத்தில் வலுவடைந்து வரும் சீனா, இந்தியா எடுத்துவரும் தற்காப்பு முயற்சிகளை தொடர்ந்து கவனித்து வரும். ஆகவே, நேசக் கரனை இந்தியா சீனாவின் பக்கம் நீட்டும் போது மற்றொரு கையில் துப்பாக்கி இருக்க வேண்டியது அவசியம். அது, சீனாவின் கண்ணுக்குத் தெரியும்படி இருக்க வேண்டும். ஏனெனில், அதுவே சீனாவின் கம்யூனிச தலைமை உலகுக்கு புகட்டும் உண்மை.

(கர்னல் ஹரிஹரன், ராணுவம் நுண்ணறிவுப் பிரிவில் தெற்காசிய மற்றும் தீவிரவாதத் துறைகளில் போர் முனை அனுபவம் பெற்றவர். ஈ மெயில்: haridirect@gmail.com. இணைய தளம்: https://col.hariharan.info. Views expressed are personal)

1 view0 comments

Comments